Friday, January 23, 2015

ullathai sonnen


உள்ளத்தை சொன்னேன் 

மடல் 1

நட்புக்கென ஒரு கழகம் 


பல வருடங்க ளுக்கு முன் ஒரு நெருங்கிய நண்பரின் மூலம்  நட்புக்கெனவே ஒரு    நூறாண்டுக்காலமாக பல நாடுகளிலும் வெ ற்றிகரமாக இயங்கி வரும் ஒரு  கழகத்தினில் சேர்ந்தேன்.  ஒரு நல்ல நாளில் என்னைக்கூப்பிட்டு அந்த கழகத்துக்கான அடையாளமாக டை  பின் , மெடல் எல்லாவற்றையும் கொடுத்தனர். விருந்துடன் அன்று மிக அருமையான விழாவாக அன்றைய "உறுப்பினரை சேர்க்கும் நாள் " நடந்தேறியது  என்று சொல்ல வேண்டும். ஒரு சில மாதங்களில் அந்த கழகம் 1905 ல் சிகாகோ நகரில் எப்படி ஆரம்பித்தது அதனை ஆரம்பித்தவரின் வாழ்க்கை வரலாறு   இவற்றையெல்லாம் படித்த பின்னர் என்னுள்  அக்கழகத்தைப்பற்றி ஒரு மதிப்பு வளர்ந்தது. பார்ப்பவரிடம் எல்லாம் அதைப்பற்றி பேசுவது, விவாதிப்பது என்ற வழக்கம் ஆரம்பித்தது. புதன் கிழமை தோறும் நடக்கும் கூட்டங்களில் எதாவது ஒரு புது தகவலை பரிமாறுவது  என்பது போன்ற செயல்களிலும் ஆர்வம் காட்டி வந்தேன்.
அந்த க்கழகத்தின் தலைவர்கள் வரும்போதெல்லாம் அவர்களிடம் ஒரு வித  ஆழ்ந்த மரியாதையுடன் தான் பேசுவேன்.
ஒரு சில வருடங்களில் இந்த பணியினாலோ  வேறு எந்த காரணத்தினாலோ தலைவர்கள் என்பால் ஈர்க்கப்பட்டு அந்த கழகத்தின் ஒரு கிளைக்கு அக்கிளையின் முதல் தலைமை பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
தலைவர் என்றானதும் கழகத்தின் பல பரிமாணங்கள்  எனக்கு முதல் முறையாக நன்கு தெரிய   ஆரம்பித்தன .
முதலாவது,  நட்பென சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்குப்  பின்னும் பணத்தினோடு நட்பு  என்ற பரிமாணம். பணம் என்று வந்து விட்டால் போதும் மற்ற எ ல்லா விதிகளுக்கும் விடை கொடுக்கப்பட்டு அந்த உறுப்பினர்  மதிக்கப்படுவார் என்ற உண்மை தெரிய வந்தது. உறுப்பினர் கூட்டம், இயக்கு னர் கூட்டம் என்ற பெயரில் சில ஆயிரங்களை அள்ளி விட்டு கேளிக்கையாக அதை நினைக்கும் சில உறுப்பினரும் அவர் குடும்பங்களும் கழகத்தை இயக் கும் நிலை எனக்கு தெரிந்தது .
இரண்டாவது, எந்த செலவுக்கும் கணக்கு காட்டுவதில்லை என்ற வழக்கம். நான் தலைவராக இருக்கும் போது கணக்கு அறிக்கை விவரம் உறுப்பினருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அடுத்த வருடத்திலிருந்து, செலவுகள் எந்த உறுப் பினருக்கும் காட்டப்படுவதில்லை, இதனை தணிக்கை செய்ய வரும் போது தலைவர்களும் கண்டு கொள்வதில்லை. திரை மறைவில் தான் அந்த தணிக்கையே நடைபெற்றது.
மூன்றாவது, சேவை என்ற பெயரில் செய்யும் 10 ரூபாயை ஊதி ஊதி 100 ரூபாய் எனக்காட்டி என  போட்டோ எடுத்து வினியோகிக்கும் கும்பல் மிக அழகாக செயல் பட்டு வரும் காட்சியை க்கண்டேன்.
ஒரு முறை கண் ஆபரேசன் ஆன  பல முதியோரை  ஒரு மணி நேரம் காக்க வைத்த பின்னர்  கழகத்தின் அகில உலகத் தலைவரோடு எங்கள் சேவை மனம் கொண்ட எல்லோரும் போட்டோ எடுத்துக்கொண்டனர். அடாடா மறந்து விட்டேனே! அதற்கு முன்  போண்டாவையும் காபியையும் சாப்பிட்டு விட்டு செருப்போடு ஒரு கோயிலுக்குள் நுழைந்தார்களே அதையும் சொல்ல வேண்டும். நல்லவேளையாக நான் வெளியில் சென்று விட்டேன்.
நட்புக்கென அமைத்த கழகம் என்பதால்  பலர் இதையெல்லாம் பொருட்படுத் தாமல் செல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள்.   ஆனால் எவ்வளவு நாள் பொறுப்பது!!
தலைவர் தேர்தல் ஊழல் , சந்தா பணத்தை விருப்பம் போல் செலவழிப்பது என்று ஆரம்பித்தவுடன் நான் கழகத்தில் இருந்து விலகிக்கொள்வதாக எழுதினேன்.
நட்புக்கென துவங்கிய கழகம் என்றார்களே , யாராவது ஏதாவது கேட்பார்கள் என்று நினைத்தேன். ஒருவரும் பேசவில்லை. ஒரு அரசியல் கட்சியி ல் இருந்து விலகினால் கூட யாராவது நாலு வார்த்தை ஏன்  என்று  கேட்பார்கள்.  பன்னிரெண்டு வருடம் உழைத்து விட்டு பின்னர் விலகுகிறேன் என்பதைப்பற்றி அதற்கு முன் தினம் வரை சிரித்து பேசியவர் , அண்ணா என்றவர் தம்பி என்றவர் யாரும் ஒரு போன் கூட  பண்ணவில்லை.
எனக்கு ஈகோ பாதிக்கப்பட்டது ஒரு புறம் இருக்கட்டும். இது போன்று ஊரை ஏமாற்றும் கழகங்கள் மீது ஒரு வெறுப்பே வந்து விட்டது.
பணக்காரர்களுக்கு என சில கழகங்கள் தேவை. மறுக்கவில்லை. ஆனால் நட்பு, சேவை, என்ற போர்வையில் பித்தலாட்டம் ஏன் செய்ய வேண்டும்  என்பது நினைத்து கோபம் வருகிறது . அதே சமயம் அதை உணர்ந்து  கொள்ளாத மடையனாக அங்கு பத்து வருடம் இருந்த என்னையும் எண்ணி வருத்தமும் தோன்றுகிறது .