எண்ணிக்கொண்டே இருந்தீரா? இறைவன் வருவானே?
எனக்கு தெரிந்து ஒரு நண்பர் -பாபு என்று வைத்துகொள்ளுங்களேன். வியாபாரம் கொஞ்சம் நொடிக்கவே ஆன்மீகம் , கோவில் என்று இறங்கினார். கோவில்களை சுற்றி வந்தும் மனத்துக்கு நிம்மதி இல்லை என்று சிலரிடம் வினவ, அவர்களும், யாராவது ஒரு குருவிடம் சென்று தீக்ஷை வாங்கிக்கொண்டு ஜபம் செய்தால் நிச்சயமாக ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று சொன்னா ர்கள். பாபுவும் தனக்கு தெரிந்த பேர்கள் எல்லோரையும் கலந்தாலோசித்து ஒரு பெரியவரை தேர்வு செய்து அவர் விலாசத்தையும் வாங்கி ஒரு நா ள் அவரை அணுகினார்.
பெரியவர் முருக பக்தர். "ஐயா, முருகனை வழி படுங்கள். நிச்சயமாக உங்களுக்கு அவன் அருள் உண்டு" என்று சொன்னார். பாபுவோ விடுவதாக இல்லை. எனக்கு இறைவனே நேரில் வர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று ஒரே பிடிவாதம்.
பெரியவருக்கு தர்ம சங்கடம். "ஐயா, நான் எப்படி கியாரண்டி தர முடியும், நீங்கள் ஒன்று செய்யுங்கள். ஒரு நாள் ஒரு இருபதாயிரம் தடவையாவது முருகன் நாமத்தை சொல்லுங்கள். சாரதா தேவியார் சொல்லியிருக்கிறார். எவன் ஒருவன் இறைவன் பெயரை ஒரு நாளில் இருபதாயிரம் முறை சொல்கிறானோ அவனுக்கு இறைவன் நிச்சயமாக வெளிப் படுவார் என்று.
அதை நானும் உறுதிப்படுத்துகிறேன். தயவு செய்து இதை செய்யுங்கள். என்றார்.
பாபு வுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு பிரச்சினை தீர்ந்தது என்று. பெரியவரை வணங்கி எழுந்தார். பெரியவர் சொன்னார் "ஐயா, எண்ணிக்கொண்டே நாமம் சொல்லுங்கள். இது ரொம்ப முக்கியம் " . பாபுவுக்கு இது ஒரு பெரிய விஷயமாக தோன்றவில்லை..
வீட்டுக்கு வரும் வழியில் பெரிய ருத்ராக்ஷ ஜபமாலை வாங்கி 108 மணிகள் இருக்கின்றனவா என்று சரி பார்த்துக்கொண்டார். மற்றபடி கணக்கு எழுத நோட் புக்கில் வரிசையாக காலம் போட்டுக்கொண்டார்.
எல்லாம் திட்டமாக வைத்துக்கொண்டு மறு நாள் காலை 5 மணிக்கு துவங்கினார். அவர் கணக்குப்படி 14 மணிநேரத்தில் 20,000 எண்ணிக்கை முடிய வேண்டும். அவர் கடையிலிருந்து இரண்டு ஆட்கள் அமர்ந்து நோட்டு புத்தகங்களை சரி பார்த்து கூட்டிகொண்டே வந்தார்கள். . இரவு 8 மணியளவில் ஜபம் முடிந்தது. எல்லோரையும் வெளியே அனுப்பிய பின் முருகன் வரவுக்கு காத்திருந்தார். 9 மணி 10 மணி. நேரம் சென்ற வண்ணம் இருந்தது. தூக்கம் கேட்டது தான் மிச்சம். முருகனையும் காணோம். ஒருவரையும் காணோம்.
அப்படியே தூங்கினார். கனவில் கூட முருகன் வரவில்லை. ஏதோ 1,2,3 என்று எண்கள்தான் சுற்றி சுற்றி வந்தன.
காலை எழுந்தவுடன் நண்பர்களிடம் தன் ஏமாற்றத்தை மிக கோபத்துடன் பகிர்ந்து கொண்டார்,
"என்னங்க, பெரியவர் இப்படி பண்ணிட்டாரே' என்று வருத்தப்பட்டார்.
"நீங்க ஒரு நடை போய் அவரை பாத்து சொல்லிட்டு வாங்க" என்று எல்லோரும் சொல்லவே ஒரு வழி யாக கிளம்பி போனார்.
பெரியவரை சந்தித்தவுடன் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்பது போல
"என்னங்க , இருபதாயிரம் முறை ஜபம் பண்ணு , முருகன் வருவான், " என்று சொன்னீங்க , பண்ணினேனே , முருகனும் வரல்லை, மயில் கூட வரலை." என்று கொட்டிதீர்த்தார்.
பெரியவர் பொறுமையாக "அதென்ன தம்பி, அப்படி சொல்லிட்டீங்க, முருகன் ஏமாத்தமாட்டான். நீங்க இருபதாயிரம் முறை எப்படி சொன்னீங்க? " என்றார்.
பாபு "எனக்கு தெரியும். அதான் எல்லா ப்ரூபோட வந்திருக்கிறேன். எண்ணிக்கிட்டே தானே சொல்ல சொன்னிங்க , இதோ பாருங்க, ருத்ராக்ஷ மாலை -இது மட்டும் இரண்டாயிரம் ரூபாய்- நோட்டுக் குள்ளே பாருங்க- எண்ணிக்கை கரெக்டாருக்கும். நாங்க பரம்பரையா வியாபாரிங்க. கணக்கிலே தப்பிருக்காது.,பெரியவர் எல்லாவறையும் பார்த்தார். பிறகு எதையோ நினைத்துகொண்டதை ப்போல சிரிக்க ஆரம்பித்தார்.
"என்னங்க, சிரிக்கிறிங்க" பாபு வுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
பெரியவர் சொன்னார் "நீங்க ஜபத்தை எவ்வளவு தரம் சொல்றோம் எ ண்ணிக் கை அதை எ ண்ணியிருக்கீங்க சரியா. நான் சொன்னது முருகனை மனசிலே எண்ணிக்கிட்டே அதாவது அவனையே நினைச்சுக்கிட்டு வாயாலே முருகா முருகா ன்னு சொல்லுங்க . எண்ணிக்கை கூட குறைச்சலா இருந்தா என்ன . காசா பணமா. இதுக்கு எதுக்கு ருத்ராக்ஷ மாலை, நோட்டு புஸ்தகம் , எல்லாம். என்னவோ வீட்டு ப் பாடம் செய்யற குழந்தை செய்யற மாதிரி செஞ்சிட்டு முருகன் வரலை அப்படின்னு என்னட்ட வந்து சண்டை போடறிங்களே."
பெரியவர் முடிக்க கூட இல்லை. பாபு அவர் காலில் விழுந்தார்.
"ஐயா மன்னிக்கணும். முருகன் அருள், ஏதோ சில ஆயிரம் ஜபம் பண்ணி வாங்கக்கூடியது என்று தவறாக மனசிலே வாங்கிட்டது எ ன் தவறு " என்று அவர் கண்களில் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
பாபு திருந்திவிடுவார். ஆனால் நம்மில் பலர் 21 வெள்ளி அருகம்புல், 108 தங்க துளசி, வாங்கி போட்டால் இறைவன் வருவான் என்று எதிர்பார்க்கிறோமே , நாம் திருந்துவோமோ ? ..
No comments:
Post a Comment