Sunday, July 31, 2016

ஒரு கதை எழுதிய கதை

ஒரு கதை எழுதிய கதை

C P சந்திரசேகரன்

இன்னிக்கும் அவன் போன் வந்துதுன்னா சொல்லிட வேண்டியதுதான்.  இனிமேல் கதை எழுத ப்போறதில்லை ங்கிற முடிவு நான் எடுத்தாச்சு ந்னு தைரியமா ஒரே வார்த்தை நறுக்குன்னு சொல்லி டவேண்டியதுதானே. என்ன கொள்ளை போயிடப்போவுது ? எழுத்தாளன்னு போர்டா போட்டிருக்கேன்? என்னவோ எழுத ஆரம்பிச்சேன். பரிசு, பெருமை, புகழ் கெடக்கும்  னு சொன்னாங்க. ஆனா, கடைசில என்ன கெடச்சுது?  அபவாதம்தான் கெடச்சுது. மொதல்  கதை  “ பைத்தியக்கார பெரி்யப்பா” அப்படின்னு எழுதினேன். ஒரு நல்ல மனிதர் குடும்ப த்திலே நடக்கற கசமுசாவினாலே எப்படி சைக்கோவா மாறிடறார் அப்படிங்கிற அருமையான கதை. என்னாச்சு ?  அதிலே நான் சொன்ன செய்தியை புரிஞ்சுக்காம பெரியப்பா  வீட்டிலே  எல்லாரும் பேசறதையே நிறுத்தி ட்டாங்க. அதை விடுங்க.  “அழுமூஞ்சி அத்தை” ந்னு அடுத்தது பெண்ணுரிமை பற்றி சமுதாய நோக்கோட எழுதப்போய், அத்தை வீட்டில் தடா. சரி குடும்ப க்கதை எழுதினா ப்ரச்சினை யாவுதேன்னு சொல்லி, சரித்திரக்கதை எழுதலாம் அப்படின்னு ஒரு கதை எழுதினேன். க்ருஷ்ண தேவராயர் காலத்தில் எங்க முன்னோர்க ள் சேட்லூர் என்ற ஊரில்  இருந்ததையும் முகலாயர் ஆட்சி யின்போது தஞ்சைக்கு குடி பெயர்ந்ததையும் கதையாக எழுதி தற்செயலாக சேட்லூர் காளஹஸ்திக்கு மிக  அருகில் உள்ள ஊர் என்று எழுதி விட்டேன். இது ஒரு தப்பா? அதைப்படித்த சித்தி, பெரி்யம்மா,ஒண்ணு விட்ட அக்கா அத்திம்பேர் எல்லோரும் சென்னையிலிருந்து எங்கள் முன்னோர் இருந்த ஊரை ப்பார்க்க காளஹஸ்திக்கு ஒரு காரை எடுத்துக் கொண்டு சென்று சுத்தோ சுத்து என்று சுத்தி சேட்லூர் கிடைக்காத கோவத்தில் 3000 ரூபாய் டாக்ஸி வாடகையை தலையில் கட்டிவிட்டார்கள். போதுமடா சாமி. இந்த வம்பே வேண்டாம், அதனால் இப்ப ஒரு முடிவுக்கு வந்திட்டேன்,  இப்ப நான் கதை எதுவும் எழுதப் போவதில்லை. எழுதணும் அப்படின்னாலும் ஸ்ரீராமஜெயம் தான் எழுத ப்போறேன். யாரும் சண்டைக்கு வர சான்ஸே இல்லை. புண்யத்துக்கு புண்யம். நிம்மதிக்கு நிம்மதி. மறுபடி வந்தது ஷண்மு போன். “ என்னடா, நேத்து நான் சொன்னத யோசிச்சியா ? “ என்றான். நான் தான் தெளிவா இருக்கேனே, “ இங்க பாரு, ஷண்மு, நான் ஒண்ணும் கதை எழுதறதா இல்லை. அது நான் மொதல்ல பண்ணிக்கி ட்டிருந்த ஒரு பெரிய முட்டாள் தனம். நீ ஆளை விடு” . ஷண்மு ஒரு நம்பியார் சிரிப்பு சிரித்தான். “ சாரி,  ப்ரதர், நீ இதல்லாம் முன்னாடியே யோஜிச்சிருக்கணும். என்னப்பத்தி என்னெ ல்லாம் எழுதினே.ம்ம் ஹெலென்சிகா கதையிலே நான் மூலிகை கஷாயம் எல்லாம் தயாரிச்ச மாதிரி எழுதினே இல்லே ? தெனாவட்டு தானே. அப்புறம் என்ன அது ? செல்வமும் ஸ்ம்ருதி இரானியும் சந்திக்கி றாங்களா? உனக்கு என்ன கொழுப்பு இருக்கணும். நீ எழுதின மறுனாள் அந்த அம்மாக்கு பதவி போய் இன்னைக்கு  கடைத்தெரு கோ ஆப்டெக்ஸ் கடையிலே பொடவை வித்துக்கிட்டிருக்காங்க. அவன் என்னடான்னா ஒன் போன் வந்தாலே ஓடறான்.  பாரு  சிபி, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். தெரியும் இல்ல.  இப்ப மருவாதியா ஒன்ன பத்தியே ஒரு கதை எழுதி எல்லாரும் படிக்கற மாதிரி க்ரூப்ல போடு.” என்றான். “ ஐயையோ, என்கிட்ட கதை எதுவும் இல்லை.  ஐடியாவும் இல்ல. நான் இப்ப ரொம்ப பிசி. பேசக்கூட நேரம் இல்லைடா ” என்று உளறினேன். “ ஐடியா எதுக்குடா,கண்ணா, நம்ம உஷாவைப்பத்திய உண்மை க் கதையே இருக்கும்போது நீ எதுக்குடா பையா யோஜிக்கணும் ?” ஷண்மு ப்ளானோடு தான் போன் போட்டிருக்கான் போல. நான் அசரவில்லை. “ யாரு, அது நம்ம உஷா? எனக்கு வேற கால் வருது. அர்ஜெண்ட் கால். நான் அப்பறம் பேசறேன் “ என்றேன். ஷண்மு “ போனை க்கட் பண்ணாதே. எனக்கு மட்டும் வேல இல்லையா? நீ எழுதுடா. எனக்கு தெரியும். எழுதுவே.” என்று ஏத்திவிடவும் நான் பிடிவாதமாக “ அதென்ன அவ்வளவு ஈசியா மசிஞ்சுருவேனா, அதெல்லாம் எழுத மாட்டேன்.’ என்றேன். ஷண்மு அதற்கு “ ஓஹொ,  உன்னால எழுத முடிய லியா, அப்ப சொல்லு, நான் எழுதறேன். ஆனா இதுக்கெல்லாம் நான் தேவையில்லை டா. அரசலாத் துப்பாலம் பக்கத்தில உமன்ஸ் காலேஜ்ல போடற பேப்பரெல்லாம் தின்னிட்டு  நிக்குமே ஒண்ணு அதுக்கு கூட கொஞ்சம் டயம் கொடுத்தா உன்னை விட நல்லாவே எழுதும்.” அப்படின்னான். எனக்கு பயங்கர கோவம் “ டேய், நான் ஒண்ணும் அகிலன், நா பா, ஜெகசிற்பியன் ரேஞ்சுக்கு  இல்ல. ஒத்துக்கறேன். இருந்தாலும் இது ரொம்பவும் மோசமான கம்பேரிசன். தவிரவும் it amounts to blackmailing. Please understand. எனக்கு நீ சொல்றது ஒண்ணும் ஞாபகம் இல்லை.  என்னென்னவோ சொல்றே. விட மாட்டற“  அப்படிந்னு கத்தினேன். ஷண்மு இறுதியா சொன்னான் “ சரி, போறது. ஒரு க்ளூ குடுத்து ஞாபகப்படுத்திடறேன். யேடா முல்கா !!!!! இப்ப ஞாபகம் வருமே” என்று வைத்து விட்டான். அடப்பாவி! அம்பது வருசம் கழித்து அப்படியே மந்திரம் சொல்ற மாதிரி சொல்றான். இவன் விட மாட்டான். அவன் சொல்றதுக்கு முன்னாடி நாமே ஒங்க கிட்டே சொல்லி ஆகணும் போல இருக்கே!  சரி, சுருக்கமா சொல்றேன். வில்லங்கம் பண்ணாதீங்க. யேடா.  முல்கா !! இது செல்லமா ஒரு திட்டு. ரொம்ப நாள் முன்னாடி ஒருத்தர்கி்ட்ட  திட்டு வாங்கி னேன் ல அத சும்மா தமாஷுக்கு சொல்றான். வேற ஒண்ணும் இல்லை. என்ன கேக்கறீங்க ? இதுக்கு அர்த்தமா? யேடா ந்னா லூசு , பைத்தியம். முல்கா ன்னா பையன். விடுங்களேன். அதை. என்ன மொழியா ? மராத்தி. வேற எதாவது பேசுவோமா ? எதுக்கு மராத்தியிலே திட்டு வாங்கினே அப்படின்னு கேக்கறீங்களா?  விட மாட்டீயளே !! ஏன்னா திட்டின பொண்ணு மராத்தி பொண்ணாச்சே.! இதுக்கு மேல நான் என்ன சொல்றது? புரியவே இல்லையா ? சுத்தம். சரி. வெவரமாவே சொல்றேன். எங்க ஆரமிக்கறது. ? பிள்ளையாரே !!! காப்பாத்து. பிள்ளையார் கிட்டேர்ந்தே ஆரம்பிக்கறேன். கொஞ்சம் 50 வருஷம் பின்னாடி ப்போங்க. ப்ளீஸ் அட்ஜஸ்ட். இப்ப சொல்றேன். கும்பகோணத்திலே பகவத் பிள்ளையார் தெரியும் இல்லே ? ஒங்களுக்கு எப்படி தெரியும் ? காவேரி தெரியுமா ? காவிரி க்கரை யையொட்டி கொஞ்ச தூரம் வந்தால் சங்கர மடம். நேர எதித்தாப்ல வெத்தல கடை பாய் வஹாபு . அவரு தம்பி அதான் ஒரு நிரந்தர புன்னகையோட ஒக்காந்திருக்கானே அவன் அன்வரு என்கிற அன்வர் பாத்ஷா அவன் என் க்ளாஸ் தான். அங்க நிக்காதீங்க, ப்ளீஸ்.  அவன் வம்பு தாங்க முடியாது. இன்னும் நேரே வாங்க. பீச்சாங்கைப்பக்கம்  ப்பார்த்தீங்களா ?  கொஞ்சும் சலங்கை ஜெமினி மாதிரி ஒரு நீளமான தங்க செயினோட பாடியைக் காமிச்சுக்கிட்டு பலசரக்குகடையிலே வைத்தி ஹாய்யா ஒக்காந்திருக்கான் பாருங்க. நாதஸ்வரம் தான் இல்ல. இப்ப ஹாய்யா இருக்கான் இல்லே. சாயந்திரம் பிசியாயிடுவான். இந்த ஸ்கூல் பொண்ணுங்க சாயந்தரம் ஆனா அங்க வந்து மொய்க்குமே பாக்கணும் !! வைத்தி பேனா குடு வைத்தி பென்சில் குடு. அப்படீம்பாளுக. அவன் ஒடனே உத்திரத்திலேர்ந்து தொங்கற ஒரு முழ நீள கயிறை ப்பிடிச்சுக்கிட்டு எம் ஜீ யார் கணக்கா தாவி அதையெல்லாம்  ஒரு கையிலே எடுத்துட்டு அதே தாவுலே அவ அவ காது கிட்ட வந்து மாலு இந்தாம்மா  ஒன் பேனா, ராது இதோ ஒனக்கு பென்சில் அப்படீன்னு குடுக்குறதும் அவளுக வாங்கிக்கிட்டு பதிலுக்கு சிரிக்கறதும் பாத்தா ஒரு காதல் சாம்ராஜ்யமே நடந்துகிட்டுருக்கும் அதுக்காக நாமளும் அதுங்க பக்கத்திலே போய் நின்னு  சாதாரணமா இந்த பேனா என்ன விலை அப்படின்னு எதையாவது கேட்டு தொலைச்சிட்டோம் நு வைங்க . ஒடனே அந்த சிரிப்பெல்லாம் எங்கேதான் போகுமோ,  எல்லாம் பேய், பிசாசை பாத்த மாதிரி ஒரு ரெண்டடி தள்ளி ப்போய் நம்மளை ப்பாத்து மொறைக்கும்.  எல்லாத்துக்கும் ஒரு லக்கு வேணுமில்ல. அட,பேசிக்கிட்டே இருக்கேன்,  நீங்க எங்க போனீங்க ! ஐய அங்கேயே நிண்டிட்டீங்களாக்கும்.  சாயந்திரமா வருவோம் அதெல்லாம் பாக்க. வாங்க மேலே. இன்னும் கொஞ்சம் தாண்டி சோத்துக்கை ப்பக்கம்  பாருங்க. கடுமையாய்த் தவம் செய்யும் பகவத் முனிவர் வெளியில் அமர்ந்து இருக்க உள்ளே அமர்ந்து அருள் செய்யும் பெருமான் பகவத் வினாயகர். பார்த்தீங்களா ? கன்னத்தில் போட்டுக் கொண்டு தலையில் குட்டி க்கொண்டு ஒரு தரம் சுத்துங்க. இப்பொ நேரே பாருங்க. அது பிள்ளையார் கோயில் சன்னிதி தெரு. நுழைங்க. நொழஞ்சீங்களா? அதன் முடிவு டபீர் புது த்தெரு. அங்கு வந்த உடன் ஒரு வாய்க்கால் ஒடுகிறதல்லவா ? அதை தாண்ட மூங்கில் பாலம்தான். தாண்டினால் வரிசையாக அழகான வீடுங்க பாருங்க. அதில் மொதல் வீடு ஹிந்தி பண்டிட் கோபால ஐயங்கார் வீ்டு. அவருக்கு முன்பெல்லாம் நல்ல மதிப்பு.  போன வருஷம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்திச்சு இல்ல, அப்ப பயலுவ அவரு சட்டையைக்கிழிச்சு, முகத்தில கரியை ப்பூசி ஊர்வலமா கூட்டிட்டு வந்தானுவ. அப்பவேந்து, அவருக்கு மதிப்பே போயிடுச்சு. அதனால அவரை மறந்திடலாம். அதுக்கு பக்கத்து வீட்டை ப்பாருங்க. அது தான் கிளி ஜோஸ்யம் க்ருஷ்ணா ராவ் வீடு. இப்போது கிளி இல்லை. அதினாலே என்ன. க்ருஷ்ணா ராவும் இல்லை. அவர் பையன் வெங்கோப ராவ் தான் இருக்காரு. அவர் மீன் மார்க்கெட் பக்கத்திலே இருக்கே அந்த KESC ஆபீசில் LDC. வாங்கும் சம்பளம் அவர் போடும் மூக்கு ப்பொடிக்கே சரியாய் விடும். வீட்டில் வசதி கம்மி என்று வாச வராண்டாவுக்கு மேலே மூங்கில் தெரிய உடைந்து கிடக்கும் ஓடுகளை ப்பார்த்தாலே தெரியும். மனைவி குள்ளமா சொப்பு மாதிரி மராத்தி க்கட்டு கட்டிகொண்டு அப்பப்ப வெளியில் தெரிவாங்க. சனிக்கிழமை சோலையப்பன் தெரு ராகவேந்திரர் ப்ருந்தாவநத்துக்கு போகும்போது பார்த்திருக்கேன். ராயர்கள் கல்யாணத்துக்கு சீருல வைக்கிறத்துக்கு  சக்கரை பொம்மைகள் பண்ணுவாங்க்க இல்ல, அந்த பொம்மைகள் வடிப்பதில் பணம் கொஞ்சம் கிடைக்கும் போலிருக்கிறது. ஏதோ அவங்க காலம் ஓடுகிறது. ஆமாம், கிளி இல்லை என்று சொன்னே னோ? அது தப்பு. கன்னத்தில் போட்டு க்கறேன். கிளி ஒண்ணு உண்டு. அது நான் பத்தாவது படிக்கும் போது தான் எனக்கே தெரியும். அது ரொம்ப தற்செயலா ஆச்சு. தெய்வாதீனம் அப்படின்னு வச்சுக்குங்களேன். என்னோட க்ளாஸ்லே பெஞ்ச் மேட்டா இருந்தானே  குண்டு ராம்மோகன் அப்பல்லாம் எனக்கு ரொம்ப க்ளோஸ். அன்வர் எப்போதும் எங்களை ப்பார்த்தா சிவாஜி, பாலாஜி அப்படிந்னு சொல்லி  படித்தால் மட்டும் போதுமா ல வர்ற “பொன்னொன்று கண்டேன்..  “ பாட்டு வேற பாடிக்காட்டுவான்.  ராம்மோகன் திம்மகுடி மிராசுதார் குடும்பம். ரெண்டு மாடு பூட்டிய வில் வண்டிலேதான் வருவான். பயங்கர பணக்காரன்.  தினமும் டப்பாவிலே ரவாலாடு கொண்டு வருவான். மத்தியான ப்பசிக்கு படிக்கற கொழந்தக்கு அவங்கம்மா குடுத்திருப்பாங்க. மத்தியானம் ரெண்டாவது பீரியட், புலவர் J பிச்சை பிள்ளை“ அங்கி ங்கெனாத படி எங்கும் ப்ரகாசமாய்” அப்படின்னு வெங்கலக்குரல்லே ஆரமிக்கும்போது ஓசைப்படாம டப்பாவைத்திறந்து ருவோம்.அவரு கண்ணை மூடிக்கிட்டு தான் செய்யுள் சொல்லுவாரு. அது எங்களுக்கு வசதி.  அவன் போக்கே தனிப்போக்குங்க.என்னை விட ஒரு வயசு பெரியவன். படாஸ்டைலா இருப்பான்.ஆறு மாசத்துக்கு ஒரு தடவை செருப்பு வாங்குவான் அப்படின்னா பாருங்களேன்.  டெரிலின் ஷர்ட் தான் போடுவான்.  அவன் ஒத்தன் தான் ஸ்கூல்ல வாட்ச் கட்டிப்பாத்திருக்கேன்.  அந்த வருஷம் அவங்க அக்கா சரோஜா கல்யாணத்துக்கு சீருலே வக்கறத்துக்கு சக்கரை பொம்மை பண்ண அந்த ராவு வீட்டிலே ஆர்டர் கொடுத்திருந் தாங்க போலிருக்கு. ஒரு நாள்  ராமு வந்தான். நீயும் வாடா போலாம். பொம்மை யெல்லாம் செஞ்சிட்டாங்களாம். வாங்கிண்டு வரலாம் அப்படின்னான். நானும் போனேன். நான் அவங்க வீட்டுக்கு வெளில நின்னேன். அவன் மட்டும் தான் உள்ளே போனான். உள்ளே எதோ கொட மொடன்னு பேசிக்கிறாங்க. எனக்கு காதில விழுது.ஆனா ஒண்ணும் புரியல. இப்பிடிக்கூட ஒரு பாஷையான்னு ஒரே அதிசயம். பின்னாடி தெரிஞ்சுது அதுக்கு பேரு மராத்தின்னு. போரடிச்சு நின்ன எடத்திலேயே கொட்டாவி விட்டிக்கி ட்டிருந்தேன். ஒரு நிமிஷம் கழித்து ஏதோ வெளக்கு டக்குன்னு போட்ட மாதிரி “அங்கிங்கெனாதபடி “ ஒரு வெளிச்சம். என்னன்னு பார்த்தா உள்ளேர்ந்து ஒரு பொண்ணு வெளில வந்தா. பாவாடை சட்டை தான். எட்டாவது படிக்குமா ? இருக்கும்.  பர்ஸ்ட் இம்ப்ரெஷன் 60%. தான். அதான் நியாயமான மார்க்கு. ப்ளஸ் பாயிண்டு. சும்மா சொல்லக்கூடாது. நல்ல நிறம். சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேலக்காவேரி பாலத்திலேர்ந்து காவேரிலே அஸ்தமிக்கற சூரியனோட வெயில் அந்த ஆத்து த்தண்ணில குளிச்சு எழுந்தி ருக்கறதை பாத்திருக்கீங்களா ? அந்த கலர். என்ன, பாத்ததில்லியா ? சரி, சில எழுத்தாளருங்க ல்லாம் எலுமிச்சம்பழம் அப்படின்னு ரசனையே இல்லாம எழுது வானுங்களே அந்த கலர். சரியா? ஹைட்டு போறாது. அவ அம்மா மாதிரி  குள்ளம் தான்.    கட்டை குட்டை ந்னு வச்சுக்குங்களேன். ஒரு 10 வருஷம் கழிச்சு வெங்கி பார்த்திரு ந்தான்னா சுவரில்லாத சித்திரங்கள் சுமதி அப்படின்னு சொல்லிருப்பான். மொதல்ல பார்க்கும்போது அப்படி அழகுன்னு லாம் ஒங்களு க்கு தோணாது.  (நல்ல வேளையா) . ஆனா ஒரு சிரிப்பை மெல்லிசா உதிர்த்துட்டு கழுத்தை ஒரு வெட்டு வெட்டி நடந்து போனா பாருங்களேன்.அப்பதான் அடாடா இன்னம் கொஞ்ச நேரம் நின்னுட்டு போயிருக்கலாமே ந்னு மனசு அடிச்சுக்க ஆரம்பிடுச்சு. அதுக்குள்ள அவ தெருக்கோடி வரை போயிட்டா.  இங்க மூச்சு வாங்க ராம்மோகன் இரண்டு பெரிய பையை த்தூக்கிண்டு வந்தான். “ டேய் எங்கடா ப்ராக்கு பாத்துண்டு இருக்கே, அபிஷ்டு, இந்த ஒரு பையை ப்பிடி. பார்த்து. எதாவது பொம்மை ஒடஞ்சுது. அம்மா ஒன் முட்டியை ஒடப்பா. “ ந்னு வார்னிங்க் வேற. பையை வாங்கிக் கொண்டே “ ராமு, அது யாருடா” என்று கேட்டே விட்டேன். ராம்மோகன் என்னை ஒரு ஈனப்பிற வியை ப்பாக்கற மாதிரி பார்த்தான். “ ஏய், அது ஒரு லூசு. யாரப்பாத்தாலும் இளிக்கும். எட்டாவதில இந்த வருஷம் கோட்டு. அத ப்பாத்து ட்டு தான்  பேக்கு மாதிரி  நிக்கற யாக்கும். முழி வெளில வந்திடப்போவுதுடா. ஆளப்பாரு.வா. நட வீட்டுக்கு போலாம்”. கொஞ்சம் காட்டமா பேசினான்.எனக்கு அப்பதாங்க உண்மையிலேயே இந்த கல்வித் திட்டத்தின் மேலேயே வெறுப்பாயிடுச்சு. இவ்வளவு அழகான பொண்ணை  சரி சுமாராவே இருக்கட்டுமே, ஒரு  இன்ன ஸண்ட்  பொண்ணை  ஒரு கல்வி முறை  எப்படி இந்த மாதிரி கொடுமையா பெயிலாக்கலாம்.? அவ மனசு எவ்வளவு கஷ்டப்பட்டி ருக்கும் ? அதெல்லாம் மறந்து அவ எப்படி சிரிக்கறா? அவளை வீட்டில எவ்வளவு திட்டினாங்களோ ? ஒரு அடி கூட அடிச்சுருக்கலாம். அவ அப்பா பேரே வெங்கோப ராவு ஆச்சே. அவ ஸ்கூலுக்கே போய் திட்டிட்டு வரணும் போல இருந்தது. ஆனா எந்த ஸ்கூல்னு தெரியாதே ? நிச்சயமா கவர்மெ ண்ட் கேர்ள்ஸ் ஸ்கூல் இல்ல. அதுக்கு எங்க வீட்டு வழியா ப்போகணும்.அப்ப பாத்துருக்கணுமே. இது சரஸ்வதி வித்யா சாலாவாயிருக்கும். அங்க ஸ்டிரிக்டு. பெயில்னா பெயில் தான்.நான் பாட்டுக்கு இது மாதிரி நெனச்சுக்கிட்டே வந்தேன்.கல்யாணத்தை ப்பத்தி செய்ய வேண்டிய வேலைகளை ப்பத்தி ராம்மோகன் வழி நெடுகிலும் ஏதோ பேசிக்கி ட்டிருந்தான். நான் பேசாம பையை த்தூக்கிட்டு வந்தேன்.  காதிலயே வாங்கலை. ஆவணிலே ராமு அக்கா கல்யாணம். கனவு மாதிரி இருக்கு. கல்யாணம் முடிஞ்சு அவ கல்கத்தா போனா. ராமு ரெண்டு நாள்அழுகை. இதுக்கு ஏண்டா அழுவறே ? லீவு வந்தா போலாம் னு சமாதானப்ப டுத்தின பாடு பெரிய பாடாப்போச்சு. ஒண்ணு பாத்திட்டேங்க. குண்டு பசங்களுக்கு த்தான் அக்கா தங்கை பாசம் அதிகம் இருக்கு.  இவன் அழுவுறான் பாருங்க.அன்வரை எடுத்துக்குங்க. ஊசி மாதிரி இருப்பான். ஆடுதுறையிலிருந்து அக்கா வந்தாக்கூட காசு வாங்கிட்டு தான் வெத்தலையே குடுப்பான். அப்பறம் காலாண்டு தேர்வு முடிஞ்சு  நவராத்திரி லீவு வந்துது. அந்த ஒம்பது நாளும் எங்க தெருவே களை கட்டிடும். எல்லா ப்பொண்ணுங்களும் புது டிரஸ் போட்டு வீடு வீடா ப்போய் கொலுவுக்கு க்கூப்புடறதும் இல்லை கூப்பிட்ட வீட்டுக்கு போய் பாடறதும் சுண்டல் வாங்கிக்கிட்டு வரதும் சாயந்திரம் ஆறு மணியிலேர்ந்து எட்டு மணி வரை ஒரே சலசலப்பு தான். அந்த நேரம் பார்த்து, இந்த காலேஜ் பயலுவ சைக்கி ளை வச்சு வீட்டுக்கு முன்னாடி மறிச்சிக்கிட்டு நிப்பானுவ. பொண்ணுங்க திட்டும். ஒடனே ரவையூண்டு சைக்கிளை நகர்த்துவானுவ. அவளுங்க அதிலே வளைஞ்சு  நெளிஞ்சு போவணும். போவாளுங்க. இவனுங்களுக்கு அல்வா சாப்பிட்ட சந்தோஷம்.  நானும் இந்த வெளயாட்டைப்பாத்த படி நின்னிக்கிட்டி ருந்தேனா ? படக்குன்னு இவ எங்க வீட்டுக்குள்ள நொழயறா. எனக்கு இருதயமே எம்பி தலை வரைக்கும் போயிடுச்சு. எங்க வீட்டிலே தான் பொண்ணுங்களே இல்லியே! இவ எதுக்கு வறா? கொல்லன் பட்டறையிலே  ஈ சே சே ஈ ந்னு சொல்ல க்கூடாது. தேனீக்கு என்ன வேல ந்னு மண்டையை உடச்சுக்கறேன். சரி, அம்மா வையே கேப்போம் னு உள்ளே போனா அங்க அம்மாவும் பயங்கர குழப்பத்தில இருக்காங்க. “யாரும்மா கொழந்தே  நீ , எனக்கு தெரியலியே, வெள்ளிக்கெழ மையாய் பார்த்து வந்திருக்கே ஒக்காரு.”  ன்னு  சொல்லி   உபசாரம் பண்ணிக்கிட்டிருக்காங்க.  அந்தப்பொண்ணு பேரு உஷா ந்னு சொல்லிக்கிடிருந்தா. (ரெண்டு தரம் அவ பேரை சொல்லிப்பாத்தேன். உஷா !!! அவளை மாதிரியே அவ பேரும் நல்லாருக்கு!!  ) அம்மா உள்ளே போய் அன்னிக்கு பண்ணின சக்கரை பொங்கல், சுண்டல் எல்லாம் கொண்டு வந்து குடுத்தப்புறம் அந்த ப்பொண்ணு அத  சாப்பிட்டுக்கொண்டே ரொம்ப நிதானமா க்கேக்கறா “ மாமி, செல்லி தான் கூப்பிட்டா. அவளை எங்க காணும்” ? அப்ப தான் எனக்கு ப் புரிஞ்சுது. இந்த லூசுப் பொண்ணு ராங்க் நம்பர் ல வந்து கடல போட்டுக்கி ட்டிருக்கு ன்னு. அம்மா சொன்னாங்க “ ஓஹோ, நீ செல்லியோட பிரெண்டா ? செல்லி அடுத்த வீடும்மா. பரவாயில்ல. உக்காண்டு நிதானமா சாப்பிடு.  நான் உன்னைக் கொண்டு போய் விடறேன்“ ன்னு சொல்லி அடுத்த பத்து நிமிஷத்தில அவ தாத்தா க்ருஷ்ணா ராவில ஆரம்பிச்சு அவங்க வீட்டு பூனை க்குட்டி பேரு வரைக்கும் விவரங்களை கலெக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நான் அங்கே நின்னா நல்லாயிரு க்காதுன்னு திண்ணைக்கு போயிட்டேன். தெரு சத்தத்திலே உள்ளே பேசறது ஓண்ணும் காதிலே விழலை. என்ன பேசினாங்களோ !! கொஞ்ச நேரம் கழித்து,  அம்மா குரல் கேட்டது.  “ டேய், சேகர், அவாத்துக்கு கொஞ்சம் சக்கர ப்பொங்கல் எடுத்து மேடையில ஒரு வாழை இலை ஏடு  வச்சுருக்கேன் பாரு அதிலே நீட்டா பேக் பண்ணி  குடுடா. வெளில வழியாம. பாவம். கொழந்த ஆம் தெரியாம வந்திருக்கா” ந்னு சொன்னாங்க. நான் உள்ள போய் ரெண்டு கரண்டி பொங்கல் அதிகமாவே போட்டு பேக் பண்ணினேன்.  அவ ஆத்துக்குப்போய் சாப்பிடட்டும்னு தான். அதை அவ கிட்ட கொண்டு போய் கொடுக்க றத்துக்குள்ள நடுவில நந்தி மாதிரி அம்மா “ இங்க குடுடா.  நான் அவளை செல்லி வீட்டிலே விட்டுட்டு  வரேன். அவாத்துக்கும் போன மாதிரி இருக்கும். நீ ஆத்தை பார்த்துக்கோ “  அப்படி ன்னு  அத  வாங்கிண்டு போயிட்டா. நான் கொடுத்திருந்தா எந்த ஸ்கூல் என்ன க்ளாஸ் நு கேட்டிருக்கலாம். பெயில் ஆனதுக்கு துக்கம் விசாரிச்சிருக்கலாம்.சான்ஸ் போச்சு. அடுத்த இரண்டு நாள் வீட்டில் அம்மாவிடமிருந்து உஷா பற்றி தகவல் கொஞ்சம் கிடைத்தது. உஷா வீட்டுக்கு ஒரே பொண்ணு. அவ அண்ணன் க்ருஷ்ணன்  பத்து வயசு பெரியவனாம். குஜராத்திலே ஏர் போர்சிலே இப்ப சேர்ந்துருக்கான் போலிருக்கு. “ டேய், அவ பாட்டு் கத்துண்டிருக்காளாம். மெல்லிசா இனிமையான குரல். “க்ருஷ்ணம் கலய சகி சுந்தரம் “ பாடினா பாரு. க்ருஷ்ணரே வந்து குதிச்சுடுவார் டா. அப்பிடி பாடறா. ரொம்ப சமத்து. ஒரு நாளைக்கு வாடிம்மா, நெறய பாடி க்கேக்கணும் அப்படின்னேன். “ என்று அம்மா உஷா புராணம் பாடினாள். எங்க அம்மாவை இம்ப்ரெஸ்  பண்றது ரொம்ப ஈசிங்க.  பாடினா ப்போறும். படிப்பு பத்தியெல்லாம் கேட்கமாட்டாங்க. அப்பா தான் படிப்பு படிப்பு ன்னு தலையை உருட்டுவாரு.டிஸம்பர் வந்தது. அரை வருட ப்பரிட்சையில் பிசியாகி விட்டேன். க்ருஸ்து்மஸ் லீவு. ராம்மோகன் கொல்கத்தா போனான். அக்காவைப்பாக்கணுமின்னு.நான் எங்க போறது காந்தி பார்க்கை நாலு தரம் சுத்தி வர வேண்டியதுதான். ஜனவரி பிறந்து பத்து இருபது நாள் ஆகி யிருக்கும். சாயந்திரம் வீட்டு வாசல்லே அன்வரோடு பேசிக்கிட்டி ருக்கேன். தெருவில் ஸ்கர்ட் போட்டுக்கொண்டு ஒரு பெண் கூட ரெண்டு பெண்களோடு வந்து கொண்டிருந்தாள். எட்ட இருந்து பார்த்தால் உஷா மாதிரி இருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். கும்பகோணத்தில் ஸ்கர்ட்டை ப்பார்க்க ணும்னா  சர்க்கஸ் வந்தாதான் உண்டு. எங்க ஊர் பொண்ணுங்க ஸ்கர்ட்டாவது போடறதாவது. இது யாருடா, இவ்வளவு துணிச்சல் காரி அப்படி ன்னு கிட்டக்க வந்தப்ப றம் பார்த்தா, அடிப்பாவி அது நம்ம உஷாவே தான். வேணும்மி ன்னே பண்ணினாளோ எனக்குத்தான் அப்பிடி தோணித்தோ, ஈஸ்வரனுக்குத்தான் வெளிச்சம் எங்க வீட்டு க்கு கிட்டக்க வந்த உடன் இடுப்பை ஒரு ஒடி ஒடிச்சு என்னைத் திரும்பி ப்பார்த்து சிரிச்சுட்டு போறா. எனக்கு ஒரு பக்கம் சந்தோஷம் தான். இருந்தாலும் அதை மீறி கோவம் தலைக்கு மேலே ஏறிடிச்சு. “யார க்கேட்டு டீ ஸ்கர்ட் போடறே?” அப்படின்னு போய் கேட்டுடலமா ன்னு ஒரு வேகம். என் மூடை ப்புரிஞ்சுக்காம அப்பதான் அன்வர் சந்தடி சாக்கிலே “ பாவாடை தாவணியில்” பாட்டை கொஞ்சம் மாத்தி எடுத்து உடறான். அவனை ஒரு வழி பண்ணிட்டு “பார்ப்போம். அவ்வளவு தூரம் வந்திட்டி யா? உன்ன விட்டு பிடிக்கணும் அப்படின்னு நெனச்சுக்கிட்டேன்.  அதுக்கப்புறம் தினம் சாயந்திரம் ஆறு மணிக்கு பாக்கறேன். அதே ரெண்டு பொண்ணொட ஸ்கர்ட் போட்டுட்டு போயிட்டிருந்தா. எங்கதான் போறான்னு பார்ப்போம் னு அடுத்த நாள் பின் தொடர்ந்து பார்த்தால் சக்ரபாணி கோயில் உள்ளே நுழைந்து அனுமாரை சுத்திக்கொண் டிருந்தாள்.  அனுமாரை சுத்தறது நல்லதுதாங்க. அதுல எனக்கு.ஒண்ணும் ஆக்ஷேபணை இல்லை.  ஆனா ஸ்கர்ட் போடறது சரியில்லயே. எங்க குடும்பம் எவ்வளவு ஆசாரம் ? இதெல்லாம் ஒத்து வருமா? பார்க்க பூனை மாதிரி இருக்கு. பண்றது அக்கிரமமான்னா இருக்கு .!! அன்னிக்கு அம்மாவும்  சக்ரபாணி கோயிலில் விஜயவல்லித்தாயாருக்கு தை மாச பூஜை அப்படின்னு போயிட்டு வந்தாங்களா. வந்த உடனே “ டேய், கோவில்ல  நவராத்திரிக்கு வந்தாளே அந்த உஷாவை பாத்தே ண்டா. பாத்த உடனே ஒண்ணும் யோஜிக்காம மாமி மாமின்னு கதை கதையா பேசி தீர்த்துட்டா. பாம்பேல அவ மாமா ரயில்வேலே பெரிய வேலை ல இருக்காராமே. அவாத்துக்கு டிசம்பர்  லீவுக்கு இவா எல்லாரும் போயிருந்தாளாம். அவ மாமி புதிசா புதிசா டிரஸ் எல்லாம் நெறய வாங்கிக் கொடுத்திருக்கா போலிருக்கு. அதிலே இன்னிக்கு பின்க் கலர் ல ஒரு ஸ்கர்ட் போட்டுண்டு வந்தா பாரு. தேவத மாதிரி இருந்தாடா” என்றவுடன் லெக்சரை கட் பண்ணினேன். “ஏம்மா, அதுதான் ஒரு லூசு. உனக்குமா பைத்தியம்?. பொண்ணு ன்னா பொண்ணு மாதிரி டிரஸ் போட்டுக்கணும். ஸ்கர்ட் எல்லாம் போட்டுண்டு காலையெ ல்லாம் தெருவில எல்லாருக்கும் தெரியற மாதிரி காமிச்சுண்டு… சே” என்று காரமா ஒரு போடு போட்டேன். அம்மா ஒரு நிமிஷம் பின் வாங்கினா. அப்பறம் ஒரு மொற மொறச்சு “  நீயும் அத பார்த்துட்டியா ? அதான் எள்ளுருண்டை மாதிரி குதிக்கறயாக்கும்.  அதனாலே என்னடா !! சின்ன பொண்ணு.  போட்டுக்கறா. எல்லாம் அவளுக்கு நன்னாத்தான் இருக்கு. நீ எங்கேந்துதான்  வந்தியோ சரியான கர்னாடகம். நான் கூட ஆனாங்கூர் அண்ணாவி தாத்தா செத்து போயிட்டாரோ ன்னு நெனச்சேன். செத்து போகல்லடா. இங்கதான் சௌக்கியமா இருக்கார். நல்ல வேளை டா, சேகர்,  உனக்கு அக்கா தங்கையே இல்ல. இருந்திருந்தா அவாளை இது மாதிரி தான் உயிரை வாங்குவே”  அப்படின்னு என்னை ஒரு இடி இடிச்சுட்டு போயிட்டா. என்ன சொல்றா தெரியறதோ? உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன்.  ஆனாங்கூர் அண்ணாவி தாத்தா எங்கப்பாவுக்கு பெரியப்பா முறை. வீட்டுக்கு பெரியவர். எங்கள் குடும்பத்தில்  மருமகள்களுக்கு ஒரு இட்லர் ஆக இருந்தவர். ஒரு தடவை ஒரு மருமகள் அவரை த்தாண்டி செல்லும்போது   புடவை நுனி பட்டதென்று ஒரு மாசம் பிறந்த வீட்டுக்கு அனுப்பி “அவளுக்கு ஆசாரம் கத்துக்குடுங்கோ” என்று  சொன்னதாக சொல்வார்கள். இன்னொரு மருமகள் , இத்தனைக்கும் அவள் உறவு வேறு, சாதம் பரிமாறும்போது தலை முடி தவறிப்போய் முன்னால் விழவும் அவளை அங்கேயே முதுகில் ரெண்டு சாத்து  சாத்தியதை எங்கம்மா இன்னிக்கு சொல்லும்போதும் நடுங்குவாங்க.  அவர் போன அன்னிக்கு தான் அவர் மருமகள்களுக்கெல்லாம் சுதந்திர தினம்.   இப்ப அவர் போய் பத்து வருஷம் ஆச்சு.  அம்மா இப்ப கூட சொல்லுவா ஒரு வேளை அவர் சொர்க்கத்துக்கு போயிருந்தால் கூட ரொம்ப நாள் இருக்கறது கஷ்டம் அங்கே ரம்பை, ஊர்வசி யெல்லாரும் இருப்பாளே அதனால அவா புடவை நுனி பட்டுது என் ஆச்சாரம் போயிடுத்துனு அங்கேயிருந்தும் ஓடிப்போயிருப்பார் அப்படிம்பா.  எது எப்படியோ இப்பவும் அம்மா யாராவது ஆம்பளய திட்டணும் நா  ஒடனே ஆனாங்கூர் அண்ணாவி தாத்தாவை இழுப்பது வழக்கம். என்னை திட்டறாங்களே தவிர, எங்க அம்மாவுக்கு ப்ரக்டிகலா யோஜிக்க சுத்தமா தெரியாது. நீங்களே சொல்லுங்க, அவ டிரஸ் டிசைன் நன்னாயிருக்குன்னா ஒடனே விழுந்து விழுந்து பாராட்டணுமா? அத யார் போடணும் எப்ப போடணும் ? யார் கூட இருக்கும்போது போடணும் ? அதை யார் யார் பாக்கறாங்க  அதெல்லாம் ஒரு பொண்ணு யோஜிக்கணுமில்ல. தெருவிலே போற எல்லார் கண்ணும் ஒரே மாதிரி இருக்காதுங்க. அதான் ராமு கரெக்டா சொன்னானே. அவ கொஞ்சம் லூசு. யோஜிக்கல்லை. விடுங்க.ஒரு அம்மா ஸ்தானத்திலே எங்கம்மா அவளை சொல்லி திருத்தணுமா வேண்டாமா ? சரி, இந்த பொண்ணை  வீட்டிலே திருத்தல்லைன்னா  நம்மதான் திருத்தணும். அவளைத் திருத்தி நம்ம வழிக்குக் கொண்டு வரணும் அப்பதான் நம்மளுக்கு ஒத்து வரும்  அப்படின்னு மனசுக்குள்ள ஒரு முடிவுக்கு வந்திட்டேன்.  ஆனா பொறுமையா இருந்தேன்.
ஒவ்வொரு நாளும் சாயந்தரம் அஞ்சு அஞ்சரைக்கு வாசலுக்கு வருவேன். அவளை பார்க்கறத்துக்குன்னு இல்ல. தற்செயலா வருவேன். உஷாவும் முக்கால் வாசி நாள் ஏதோ ஒரு கலர் ஸ்கர்ட்டை ப்போட்டுட்டு வரதும் வீட்ட க்ராஸ் பண்ணும் போது திரும்பிப்பார்த்து ஒரு சிரிப்பை உதிர்க்கறதும் வழக்கமாயிடுச்சு. ரெண்டு மாசமா இந்த பொண்ணு ஸ்கர்ட் போட்டு சுத்துதா , கொஞ்சம் கொஞ்சமா விடலைப் பசங்க அவ பின்னாடி சைக்கிள்ள வர ஆரம்பிச்சுட்டானுங்க. நான் அதையும் பாத்துக்கிட்டு பேசாம இருந்தேன். ஒரு நாளைக்கு அன்வர் சொன்னான் “டேய், அந்த க்குள்ள கத்திரிக்காயை ப்பத்தி  இப்ப ஒரு புது செய்தி சொல்றேன் கேளு யாரோ ரெண்டு பசங்க அவனுங்க நம்ம ஏரியா இல்ல, மகாமகக்குளம் பக்கம் போல இருக்குடா. நம்ம  சுந்தரம் பயலுக்கு அவனுங்களை தெரியுமாம்.  அதில ஒருத்தன் வசதியான பையன் போல இருக்கு. புலி நகம் போட்ட மைனர் செயின். பாகவதர் க்ராப்புன்னு அசத்தலா இருக்காண்டா.  அவனுங்க சைக்கிள்ள வரதும், சுத்தரதும், “லல்ன டுட்சை” லல்ன டுட்சை”  அப்படின்னு ஏதோ புதிரா பேசிக்கறதும்.... இன்னம் ரெண்டு நாள் கழிச்சு “பாரடி கண்ணே கொஞ்சம் , பைத்தியமானது நெஞ்சம்” அப்படின்னு மனோகர் அசோகன் ஸ்டைல்ல பாடினாலும் பாடுவானுவடோய்.!  “ இது போல அவன் வேற சொன்னதை க்கேட்டதும் எனக்கு இது கையை விட்டு போறது. நம்ம ஏதாவது இப்ப  செய்யணும் செஞ்சே ஆகணும் அப்படின்னு தோணிடிச்சு.
அடுத்த நாள் சாயந்திரம். “ அம்மா, வைத்தி கடைக்கு போறேன். இங்கி தீர்ந்து போச்சு “ என்று சொல்லி சரியாக ஆறரை மணிக்கு வெளியே வந்தேன். அவள் கோயிலிலிருந்து வழக்கமா வர்ற ரெண்டு பெண்களோடு திரும்பி போகும் போது ஒரு பத்தடி விட்டு பின்னாடியே போனேன். எங்க தெருவிலேர்ந்து அவள் வீட்டுக்கு போக ரைட் திரும்ப வேண்டும். ஆனா, அவள் லெப்டில் திரும்பினா. நானும் மெதுவா பின்னாடியே போனேன். கரெக்டா அன்வர் கடைக்கு எதிர்த்தப்பல மடத்தோட வண்டியெல்லாம் நிக்குமே அங்க நின்னா. ஒரு ரெண்டு நிமிஷம் கூட இருக்காது. சைக்கிள்ள நம்ம ஹீரோ க்கள் வராங்க. எனக்கு எரிச்சல் அதிகமாயிடுச்சு. ஆனாங்கூர் அண்ணாவி தாத்தா நெஜமாகவே எனக்கு உள்ள பூந்துட்டார் போலிருந்தது. உடம்பெல்லாம் ஜிவ்வுனு சூடாயிடுச்சு. படபடன்னு வந்துது. நேர அவ முன்னாடி போனேன். அன்வரு உடனே கடையிலேர்ந்து எறங்கிட்டாப்பல ஏதோ நடக்கப்போவுது ன்னு. “உஷா ,” அப்படின்னேன்.   அவ இத  எதிர்பார்க்கலையா தூக்கி வாரிப்போட்டு திரும்பினா. “ இங்க பாரு, நானும் பாத்துக்கிட்டே இருக்கேன். இது நல்லா இல்ல” அப்படின்னு உரக்க சொன்னதும் அவ அம்பேல்.  இப்பிடி மாட்டுவோம் நு அவளுக்கு தெரியல்லை. பயந்துட்டா.  “ என்னண்ணா, நீ இங்க ,  இப்ப , எதுக்கு ? நடு ரோட்டில ?” அப்படின்னா ஈன ஸ்வரத்தில. கொஞ்சம் திக்கி திக்கி பேசினா மாதிரி இருந்தது.  நானா ஏமாறுவேன்? “ இங்க பாரு, உஷா, இந்த நடிப்பெல்லாம் வேணாம். தினம் பாக்கறேன். போனாப்போவுது ந்னு பேசாம இருந்தேன். இப்ப முடியலே.  மொதல்ல இந்த ஸ்கர்ட், கிர்ட் எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா பாவாட தாவணி போடு. ஊர் சுத்திக்கிட்டு டயத்த வேஸ்ட் பண்ணாதே. க்ளாஸ்ல பெயி லாயி பெயிலாயி படிச்சா நாளைக்கு ஒன்  குடும்பம் என்னாத்துக்கு ஆகும் ? புத்திய படிப்பில செலுத்து. டிரஸ்ஸில இல்ல. அவ்வளவுதான் சொல்லுவேன். உன்னோட நன்மைக்கு தான் சொல்றேன். ” ஒரே மூச்சிலே சொல்லிட்டேன். இத்தனையும் கேட்டதும் அவ முகமெல்லாம் வெளுத்து ப்போய் அங்கேர்ந்து மத்த ரெண்டு பெண்களையும் பார்த்து “வாங்கடி, போலாம்” அப்படின்னு வேகமா நடந்தா. அதுக்குள்ள என் பக்கத்தில அன்வர் வந்திட்டான், அப்பதான் அங்கே சைக்கிள்ள போயிட்டிருந்த சுந்தரம் பயலும் வந்திட்டிருக்கான். இன்னம் அந்த சைக்கிள் ஹீரோ  வெல்லாம் வேற பக்கத்தில வ ந்திட்டானுங்க. நான் போதும் விட்டுட லாம். சின்ன பொண்ணு பயந்திட்டா பாவம் நு சொல்லி நகர்றேன். அப்ப பார்த்து அவ வேகமா வைத்தி கடை பக்கத்திலே போய் நின்னுக்கிட்டா. ஏன்னா அங்க அவ ரெகுலர் கஸ்டமர் ஆச்சே. ஏதாவது ஆனா வைத்தி இருக்கான் அப்படிங்கிற துணிச்சல். அங்க போனப்புறம் அவ திரும்பி உரக்க “ ஏய், யேடா முல்கா,  நீ மொதல்ல  உன் ஸ்க்ரூவை டைட் பண்ணிக்கோ” அப்படின்னாளே பாக்கணும். எனக்கு உலகமே சுத்தற மாதிரி இருந்தது. ஏங்க, நான் யாரு ன்னு அவளுக்கு தெரியுமா ? எங்க ஸ்கூல்ல எஸ் பீ எல்.  எச் எம்மோட பெட்டு வேறே. வீட்டில் மூத்த புள்ள.அம்மாவே கொஞ்சம் யோஜிச்சுத்தான் திட்டுவாங்க. எனக்கு என்ன மதிப்பு?. இப்ப இவளாலே எல்லார் முன்னாடியும் நம்ப மானம் கப்பலேறிடுச்சு.அந்த  கொஞ்சும் சலங்கை வைத்தி வேற வாயைப்பொத்தி க்கிட்டு சிரிக்கறான். அதுலேயும் கொடுமை என்னன்னா அவ திட்டுக்கும் அர்த்தம் தெரியலை.நம்ம சைக்கிள் ஹீரோ க்கள்  குஷியா கத்திக்கிட்டே போறானுங்க”  யேடா யேடா, முல்கா முல்கா” அப்படின்னு எதோ கோஷம் போடற மாதிரி. சித்த நேரம் கழிச்சு அன்வரு தான் வந்து மொள்ள முதுகில தட்டி க்கொடுத்தான்.  “ டேய், அது கிட்டல்லாம், ஏண்டா வாயை க்குடுக்கற, அவ சரியான வாயாடி. ஒம் பேச்சைக்கேப்பாளாக்கும். சரி வா சுந்தரம் பய அவிச்ச கடலை கொண்டு வந்திருக்கான். வண்டி ஸ்டாண்டு லே ஒக்கார்ந்து சாப்பி டுவோம். “ அப்படின்னு அழைச்சுக்கிட்டு போயிட்டான். அங்க போய் ஒக்காந்தப்புறம் அன்வருட்ட கேட்டேன் “ டேய், ஏடா முல்கா ன்னா என்னடா அர்த்தம்? “ அன்வர் கையை விரிச்சான். அது உருது இல்லடா. எனக்கு தெரியாது. மராத்தியா இருக்கும். நீ ராமு ட்டேயே கேளு அப்படின்னான்.” அதை கேக்கணுமின்னு தான் நெனச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா பாருங்க,  அடுத்த நாள் கும்பேச்வரர் ஸப்தஸ்தான பல்லக்கு ஸ்கூலுக்கு லீவு. அதுக்கு அடுத்த நாள் ஸ்போர்ட்ஸ் டே. நான் போய் கைதட்டி சுந்தரத்தை ஷாட் புட் ல என்கரேஜ் பண்ணினேன்.  அவன் கோல்ட் மெடல் வாங்கிட்டான். அன்வர் 400 மீட்டர் ஓடினான். ஊத்திக்கிச்சு. ராமு தான் வரல்ல. அவங்க வீட்டிலே இதுக்கெல்லாம் அனுப்பமாட்டா ங்க. அதுக்கு அடுத்த நாளும் லீவு. எப்படியோ ஒரு வாரம் ஆயிடுச்சு. திங்கட்கிழமை சாயந்திரம் பீ டீ க்கு கெளம்பிட்டிருக்கோம். ராமு கட் அடிச்சு வண்டியில் ஏறிட்டிருந்தான். தனியா இருந்தான். பக்கத்திலே வேற யாரும் இல்ல. உடனே புடிச்சேன்.  கேட்டேன் “ ஏண்டா, ராமு,  ஏடா முல்கா ன்னா உங்க பாஷையிலே என்னடா ? அப்படின்னேன்.” அவன் “ டேய்,அதை நீ இன்னமுமா நெனச்சுட்டி ருக்கே, லூசு ப்பையன்னு அர்த்தம். அது ஒனக்கு கரெக்டாத்தான் பொருந்துது”   அப்படின்னு சிரிச்சுக்கிட்டே சொன்னான். உடனே வண்டி நகர்ந்திடுச்சு. எனக்கு சுரீர் இன்னுது. நான் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தானே கேட்டேன். அங்க நடந்தது இவனுக்கு எப்படி தெரியும். சுந்தரம் வாயில்லாப்பூச்சி. அவன் இவனோட பேசவே மாட்டான். ஒரு வேளை  அன்வர் சொல்லியிருப்பானோ? . அவனுக்குத்தான் வாய் ரொம்ப நீளம்.  ஊர் முழுக்க தண்டோரா போட்டிருப்பான்.  இருந்தாலும் ப்ரெண்டாச்சே. குத்தம் பாக்க முடியுமா? விட்டுட்டேன்.
முழு வருடத்தேர்வு வேற வருதா ? அதனாலே அப்பறம் நான்  உஷாவை ப்பாக்க முயற்சி எடுக்கல்ல. ஆனா, அன்வர் ஒரு முறை சொன்னான். “ அவ இப்பல்லாம் கர்ணக்கொல்லை த்தெரு வழியா அனுமார் கோவிலுக்கு போறாடா. உங்க தெருவை அவாய்ட் பண்றா போலிருக்கு. ஒண்ணு தெரியா தே உனக்கு , இப்பல்லாம் பொண்ணு பாவாடை தாவணி, தலையிலே பூ, நெத்தியிலே சிகப்பு சாந்து திலகம் அடாடா “மஞ்சள் முகமே வருக.மங்கல விளக்கே வருக”    அப்படின்னு  பாடினான். “அப்படியா !! பரவாயில்லியே, நல்லபடி திருந்தினா சரி   “ ந்னு சொல்லிட்டு வந்தேன். ஒரு நடை போய் பாக்கலாம்னு தோணிச்சு. ஆனா எனக்கு சுய மரியாதை ந்னு ஒண்ணு இருக்கில்லே !
நான் பிறகு எஸ் எஸ் எல் சி முடித்து கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்தேன். ராம்மோஹன் திருச்சி நேஷனல் கல்லூரியில் காமர்ஸ் சேர்ந்தான். அடிக்கடி வருவது கூட இல்லை. அதனால் நாங்கள் பிரிந்து விட்டோம். நான் அண்ணாமலையில் பீ ஈ சேர்ந்த பிறகு ஷண்மு எனது ரூம் மேட்டாக வந்தான். அவன் போட்டிருந்த புலி நகம் போட்ட மைனர் செயினை ப்பார்த்ததும் எதுவோ உறுத்தியது. பிறகு ஒரு நாள் வெளியில் போகும்போது “டேய் லல்ன டுட்சை” அப்படின்னான். சரி, அதே ஆள் தான். ஆனா எப்படி கேக்கறது? அப்படின்னு அவனோட  ரொம்ப டீசண்டா தான் பேசறது.அவனும் இது தெரிஞ்ச மாதிரி கண்டுக்கல்லையா ? மறந்திட்டான்னு நெனச்சு மேட்டரை விட்டுட்டேன். இப்பதானே தெரியுது அவன் மறக்கலேன்னு. யுனிவேர்சிடி லே  வேதா, முக்தா, சுஜாதா என்று பல வேறு முகங்கள் பரிச்சயமாகவே முதலில் பார்த்த  ‘மஞ்சள் முகம்” மறந்து போய் விட்டது. இதுக்கு நடுலே அன்வர் மலேயா போயிட்டான். சுந்தரம் அவங்கப்பாவோட போர்வெல் பிசினஸ் ல எறங்கிட்டான். ராம்மோகன் டிகிரி படிக்க கொல்கத்தாவுக்கு போய்ட்டான். ஸ்கூல் பசங்க ஒருத்தரோடயும் காண்டக்ட் இல்லை. ஆறு வருஷம் கழிச்சு  படிப்பு முடிந்து பி எச் ஈ எல் திருச்சியில் இஞ்சினீயரா வேலைக்கு சேர்ந்த பிறகு  ஒரு நாள் வீட்டுக்கு போய் இறங்கறேன். உள்ளே போய் பையை வைச்ச உடன் அம்மா “ டேய், ஒரு நியூஸ், நேத்திக்கு சாயந்திரம் திடீர்னு உஷா வந்தாடா “ என்றாள். “ எந்த உஷா?”  என்று ஷூவை க்கழட்டிக்கொண்டே அலட்சியமாக க்கேட்டதும் அம்மா “ ஏன், ஒனக்கு எவ்வளவு உஷாவை த்தெரியும்?” என்று ஒரு வழக்கமான  கிண்டலோட . “மக்கு ப்ளாஸ்திரி,  அந்த டபீர் தெரு மராத்தி பொண்ணு உஷா டா, அடுத்தாத்து செல்லி ப்ரெண்டு, அவ வந்து  கல்யாணப்பத்திரிகை கொடுத்தா. அடுத்த மாசம் கல்யாணம் “  ஒரே உற்சாகம் அம்மாவுக்கு.  நான் “ அடேடே, அப்பிடி சொல்லு, அந்த லூசுப்பொண்ணா?  அவளுக்கு கல்யாணம் வந்திடுச்சாக்கும்” அப்படின்னேன். “டேய், லூசு அவ இல்ல. நீ தான். நீ பீ ஈ ஒரு வழியா முடிக்கறத்துக்குள்ள நானும் உங்க அப்பாவும் வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோவில் இல்லை. நீயும் எப்பிடியோ அந்த படைவெட்டி மாரியம்மன் கிருபை பண்ணினா.  பாஸ் பண்ணிட்டே. நல்ல வேளை நம்ம கருவிலி க்ருஷ்ணமூர்த்தி ஐயர் பீ எச் ஈ எல் சேர்மனா இருக்காரா அவர் தயவில ஒனக்கு வேலையும் கெடச்சுடுத்து.  அவளுக்கென்னடா கொறச்சல். எஸ் எஸ் எல் சி ல ஸ்கூல் பர்ஸ்ட். பீ யூ சீயிலேயும் நல்ல மார்க்காம். பி. எஸ் ஸி. முடிச்சு உடனே நம்ம ஊர் சிடி யூனியன் பேங்கிலேயே நேரே ஆபீசரா சேர்ந்துட்டாளாம். கையிலே 1000 ரூவா வரும் போல்ருக்கு. மொதல்ல பேங்குலே  லோன் எடுத்து  இடிஞ்ச வீடெல்லாம் அப்பா அம்மாக்கு சரியாக் கட்டிக்குடுத்துட்டு தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி பிள்ளையாத்துக்காராளை காக்க  வைச்சுருக்கா நா பார்த்துக்கோயேன்.  “ அப்படின்னு சொன்னா. அவ ஸ்கூல் பர்ஸ்டா ?பீ யூ  சிலே நல்ல மார்க்கா ? கணக்கு எங்கயோ ஒதைக்குதே!! அப்படின்னு எனக்கு மனசில ஏதோ உரசித்து.  அதைக்காட்டாம “ அப்பிடியா, அவளை பாத்தா அப்படி ஒண்ணும் சூட்டிகையா தெரியல்லயே !! அதான் என்னால நம்பவே முடியல. அது சரி, யார் அந்த பொறுமையான மாப்பிள்ளையாம்? “ என்று ரொம்ப ஆவலாக க்கேட்டேன். “ அதைசொல்லலியோ. வயசாறதா, எல்லாம் மறந்து மறந்து போறது. மாப்பிள்ளை வேற யாருமில்லைடா, ஒன் ப்ரெண்டு ராம்மோகன் தான்.” அப்படின்னா  அம்மா. தூக்கி வாரிப்போட்டது எனக்கு. “ இது என்னம்மா உலகத்தில இல்லாத அதிசயமாயிருக்கு? ராம்மோகன் அந்தஸ்து என்ன . அவன் தோரணை என்ன, ஸ்டைல் என்ன அவா திம்மகுடி மிராசு குடும்பம் வேறே. அவா எப்படி  எறங்கி வந்தா?” என்றேன். “ உனக்கு விஷயமே தெரியாதா, அவா நெலம் எல்லாம் குத்தகைக்காரா தரமாட்டேன்னு சொல்லி அது கோர்ட்டுக்குப்போய் அவாளுக்கு எதிரா தீர்ப்பாகி  கையை விட்டு ப்போயிடுத்து. அவன் அப்பா சீட்டு, குடி எல்லாத்திலேயும் விளயாடிபணத்தை அழிச்சு இப்ப ஒரு வீடு மட்டும் தான் இருக்கு. நல்ல வேளையா ராமுவுக்கு எக்சைஸ் டிபார்ட்மெண்டில நல்ல வேலயாம். தஞ்சாவூர்லயே போஸ்டிங்க். அதனால,  அந்த மாமியே எனக்கு ஒரே பிள்ளை. பொறுப்பா குடும்பத்தை பாத்துக்க நல்ல பொண்ணு தான் வேணும் சொத்து பத்து பாக்க மாட்டேன் நு சொல்லி 30 பவுன் போட்டு பண்ணி க்கறா, கையில ஒரு பைசா வாங்கல்லை.பாத்துக்கோ இதான் அதிர்ஷ்டம். ” என்று விளக்கியவுடன் எனக்கு கொஞ்சம் விளங்க ஆரம்பித்தது. இது அம்மாவுக்கு தெரிந்த கதை. அவங்க சொல்றாங்க. அவங்களுக்கு தெரியாத கதை ஆனால் எனக்கு மட்டும் தெரிந்த கதையும் உள்ளே இருக்கிறது. ராம்மோகன் தன் அக்கா கல்யாணத்திலிரு ந்து  அந்த கதையை நகர்த்தியிருக்கிறான். நான் ஒரு ட்யூப் லைட்டாக இருந்தி ருக்கிறேன். இப்ப இதை பத்தி நாம யோஜிக்கக்கூடாது. அம்மா முகத்தை கவனிப்பாள். கண்டுபிடித்து விடுவாள். போனது போனபடி இருக்கட்டும்! சட்டென்று என் முகத்தை சரி பண்ணிக்கொண்டு,   “வண்டி சமாசாரம் சொல்றே !! அப்பறம் என்ன சொன்னா ஒன் உஷா”    என்று கிண்டினேன். “ வேற என்னடா சொல்லணும், எவ்வளவு சமத்துப்பொண்ணு தெரியுமா !! . ம்ம்ம்ம் அவ மட்டும் நம்பளவாளா  இருந்திருந்தாக்க ….” என்று இழுத்தாள். “ ஓஹோ அப்படியெல்லாம் வேறே யோஜிக்கறயாக்கும், பரவாயில்ல யே,  நம்பளவா பொண்ணா இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பேயாம் ?” என்றேன். இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. என்ன மனசிலே ஒரு சபலம் தான் அம்மா வாயாலே அத சொல்லி கேப்போம்னு. “ ஏன், ரவியண்ணா  பிள்ளை சுரேஷுக்கு பண்ணிக்கலாம். பொருத்தமா இருந்திருப்பா. ஒனக்கு தான் குள்ளம் அப்படின்னா புடிக்காதே. அவளை லூசு லூசு ன்னு வேற திட்டுவே. அதினாலே ஒன்னை பத்தி யோஜிக்கல்ல“ அப்படின்னா அம்மா . இந்த அம்மாவைப்போய்க் கேட்டேன் பாருங்க. என் புத்திய. நான் உஷா கல்யாணத்துக்கு போகல்லை. உண்மையிலேயே எனக்கு ராம்மோகன் மூஞ்சியை பார்க்கவே பிடிக்கல்லை. அம்மா கல்யாண த்துக்கு போனாங்க. ஒரு வெள்ளி தம்ளர் அவளுக்கு பரிசா கொடுத்தாங்களாம். அப்புறம் ஒரு வாரம் கழிச்சு ஒரு நாள் கார்த்தாலை மார்க்கெட்டுக்கு போயிட்டுருக்கேன். பாயோட வெத்தலைக்கடையிலே சேப்பா ஒரு ஆடு ஒரு கவுளி வெத்தலையை மேஞ்சுக்கிட்டிருக்கு. வேற யாரு ? சாக்‌ஷாத் அன்வர் தான். என்னை பாத்த உடன் அப்பிடியே கடையை விட்டு தாவிட்டான். “ ஏய், மாப்ள,எப்படிறா இருக்கே?” அப்படீன்னு கையைப்புடிச்சிக்கிட்டான். “நான் நல்லாத்தான் இருக்கேன். நீதாம் மலேயா போய் எங்களையெல்லாம் மறந்துட்டே. இப்ப என்னடா குடந்தை விஜயம் ? அப்படின்னேன்.” ஒண்ணும் இல்லடா, ரம்ஜானுக்கு வந்தேன். ரெண்டு மாசமாச்சு. அடுத்த வாரம் கிளம்பணம். ஆமா நீ ஏண்டா ராமு  கல்யாணத்துக்கு வரவே இல்லை ? . வாசவி மஹால் லெ ஜாம் ஜாம் நு நடந்துதுடா “  நான் என்ன சொல்றது ? “ இல்லடா ஆபீஸ்ல நெறய வேலை இருந்துது”. அப்படின்னு பூசி மொழுகினேன். அன்வர் “ பெரிய கவர்னர் வேலை. ஏண்டா பொய் சொல்றே? எதையோ மனசிலே வச்சுக்கிட்டு வேணுமின்னே வராம இருந்திட்டே இல்ல’ அப்படின்னான். “ அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாங்க ரொம்ப க்ளோஸா த்தான் இருந்தோம்” என்று சொல்லும்போது குரல் கம்மிடுச்சு. அன்வர் “ அதானே, சிவாஜி பாலாஜி ஜோடியாச்சே !!! ஆனா மாப்பிள, அந்த உஷா பூவும் பொட்டுமா சிவப்பு பட்டு பொடவயில மேடையில் எப்படி அழகா இருந்தா தெரியுமா ?  “ குங்குமம், மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் குடந்தை ராம்மோகன் நாயகி குங்குமம் “  அப்படின்னு  ரோட்டிலேயே பாட ஆரம்பிச்சுட்டான். அவனுக்கு இங்கிதம் துளிக்கூடக் கெடயாது. ஒரு நண்பன் என் மனசை புரிஞ்சு வருத்தப்பட வேண்டாம். இது மாதிரி பாடாமலாவது இருக்கலாம் இல்ல. ராமு ஒரு பக்கம் இவன் இன்னொரு பக்கம் என்ன பிரெண்டு இவனெல்லாம். தலையை க்குனிஞ்சுக்கிட்டேன்.  அன்வர் என் முகத்தை ப்பிடிச்சு தூக்கினான்   “ டேய், வெளக்கெண்ணை, இதுக்குத்தாண்டா, அன்வர் லைப் ல நோ லவ், நோ நிக்காஹ்,  மைனர் லைப் ரொம்ப ஜாலி. அத எஞ்சாய் பண்ணாம மொகத்தை தொங்க போட்டுக்குவாங்க்களாக்கும் ? டேய், மாப்ள, ஒனக்குத்தான் ஒண்ணும் புரியலையே தவிர எல்லாம் சரியாத்தான் நடந்திருக்கு. எனக்கு அவங்க லவ்வு பண்ணினது மீட் பண்ணிக்கொண்டிருந்தது   எல்லாம் மொதல்லேயே தெரியும்.” அப்பிடின்னான் . “ அடப்பாவி, அப்ப என்கிட்ட ஏண்டா சொல்லலை ?” எனக்கு அவன் சட்டைக்காலரையே பிடிக்கணும் போல இருந்துது. “நா எப்பிடிடா சொல்லுவேன்? எனக்கு நீயும் வேணும். ராமுவும் வேணும். ராமுவே அத ஒன்கிட்ட சொல்லியிருந்தா  ஸ்மூத்தா போயிருக்கும். அவன் சொல்லல்ல. நான் சொன்னேன்னு வை, நம்ம ப்ரெண்ட்ஷிப்பு போயிருக்கும்.அதாண்டா வாயப்பொத்திக்கிட்டு இருந்தேன். அத புரி்ஞ்சுக்க. இப்பவாவது விடுறியா அந்த விஷயத்தை ?  உடும்பு மாதிரி ஒரு மாமாங்கமா அதையே புடிச்சி சீரீசா நெனச்சுக்கிட்டிருக்கான். சரியான பைத்தியண்டா.  சரி, அம்மா நேத்து வந்த போது கேட்டாங்க. மைலோ ஒரு டப்பா  இருக்கான்னு. நெறய இருக்குடா. சாயந்திரம் கொண்டு வந்து குடுக்கறேன்”  இப்படி சொல்லிட்டே யாரோ கிராக்கி வர்றதை பார்த்துட்டு கடைக்கு ப்போனான். “ ஏண்டா அன்வரு, மலேயாலேர்ந்து எனக்கு ஒண்ணும் வாங்கிக்கிட்டு  வரலியா” அப்படின்னு கேட்டேன். “ஐயையோ, மறந்திட்டனே, உனக்கு ஒரு புத்தர் தவம் செய்யற சிலை வாங்கியாந்திரு க்கேண்டா . அதையும் கொண்டாரேன் “ அப்படின்னு நக்கலா சொல்றான். அவன் திருந்த மாட்டான். அன்னிக்கு மட்டும் ஆனாங்கூர் அண்ணாவி தாத்தா  எனக்குள்ள பூந்திருந்தார்னா அன்வர் அங்கயே சமாதியாயிருப்பான். அவன் நல்ல காலம். பிழச்சுக்கிட்டான்.  சரி ரொம்ப நீட்டிக்கிட்டே போறேன் இல்லை. விடுங்க. அந்த சம்பவத்தெல்லாம் நான் மறந்து போய் எவ்வளவோ நாளாச்சு. குடும்பம் குட்டி ன்னு ஆகி போச்சு. இப்ப கெணறு வெட்ட பூதம் கெளம்பிச்சாம் அப்படிங்கிற மாதிரி ஷண்மு அதை ப்பத்தி எழுது ன்னா யாருக்கும் கோவம் தானே வரும். ஏங்க, இதெல்லாம் கூடவா கதையா எழுதுவாங்க? நீங்களாவது அவன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்களேன், புண்ணியமா ப்போவும்.

31st July 2016

No comments: