Monday, July 6, 2020

இசையோடு இயைந்த வாழ்வு              எனது தகப்பனார் சங்கீத ஜோதி சே குரு பட் டாபிராமன் அவர்கள்                      மறைந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. 93 வருட காலம் வாழ்ந்த                               அவர் தம் உன்னதமான வாழ்க்கையில் நாம் பார்க்கின்ற பல                               சிறப்புகள் உள்ளன. ஆன்மிக வழிபாடு, கல்வித்துறையில்                                          தன்னலமற்ற பணி , புனிதத்தலங்களுக்கு யாத்திய                          இருந்தாலும் நினைவு கூறத்தக்க வகையில் நாம் காண்பது                                        இசை மேல் அவருக்கிருந்த அபரிமிதமான நாட்டமே.  
                      அவரது எந்த முயற்சியும் இசையோடு இணைந்ததாக அவர்                                      அமைத்துக்கொண்டார். இசையின்றி பூஜையில். இசையின்றி                                  பயணம் இல்லை. இசையின்றி வகுப்பில். நடிப்பிலும், உறவிலும்                            கூட இசையை ரசிப்பவர்களையே அவர் விரும்பி அவர்களோ டு                            நெருங்கி பழகினார். ஆதலால், அவருக்கு அஞ்சலி செலுத்தும்                                   வகையில் அவருக்குப்பிடித்த சில  பாடல்களை அவர் சொந்தக்                               குரலிலேயே  ப திவு செய்வது பொருத்தமாக அமைகிறது.

                       முதல் பாடல் : கல்யாணி ராகத்தில் அமைந்த " மாதா உன் பாதம்                           பணிந்தேன்" இப்பாடல் அவரே இயற்றியது. 1950 -55 வருட                                          காலத்தில்  அதாவது அவரது இளைமையில் இயற்றப்பட்டது.  இந்த                        ப்பாடல் எனது பாடடனாருக்கு அதாவது அவர் தந்தையாருக்கு                                மிகவும் பிடித்த ப்பாடல் என பல முறை அவர் குறிப்பிட்டி                                            ருக்கிறார்.   இப்பாடலை முதலில் கேட்போம்.

Tuesday, January 3, 2017

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-15

குறள் 274:  அதிகாரம் 28 கூடாவொழுக்கம்


தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
பொருள் : தவக்கோலத்தில் இருந்து கொண்டு அதற்கு மாறாக தீய செயல்களில் ஈடுபடுதல் ஒரு வேடன் மறைந்திருந்து பறவைகளை ப்பிடிப்பது போன்றது.
இந்த குறள் திருவள்ளுவர் எழுதியபோது ராவணனைத்தவிர வேறு யாரை நினைத்திருப்பார்?
மாரீசனை அனுப்பி ராமரையும் லக்ஷ்மணனையும் சீதையிடமிருந்து பிரித்து அவளை பாதுகாப்பில்லாமல் செய்த பின்னர். தவ வேடம் பூண்டு பர்ணசாலைக்கருகில் ராவணன் வரும் காட்சியை கம்பர் வருணிக்கிறார்.


தாமரை மணிதொடர்
தவத்தின் மாலையன்,
ஆமையின் இருக்கையன்,
வளைந்த ஆக்கையன்,
நாம நூல் மார்பினன்,


தாமரை மணிகளால் ஆன ஜப மாலை அணிந்து கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிய ஆமை போல நடித்து க்கொண்டு, முதியவன் போல உடல் கூனிக்கொண்டு  இறைவன் நாமத்தை சொல்லவே அணியப்படும் பூணூல் அணிந்து கொண்டு வருகிறான். (ராவணன் ஒரு இளம் சன்யாசி என்று சினிமாக்களில் காட்டுவது பிழை. அவன் ஒரு முதிய சிவனடியார் போல வருகிறான். சன்யாசியாய் அல்ல​.இதை என்னைப்போல் படிக்காதவன் சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள். தவறாகவே எல்லாவற்றையும் புரிந்து கொண்டு தன்னம்பிக்கையோடிருப்பவர்  மிக அதிகம் பேர்).  அவன் வேடத்தை க்கண்டு தேவரே நம்பி விட்டனர் என்றால் சீதை நம்பாமல் என்ன செய்வாள் ? “ இங்கு யார் யார் இருக்கிறீர்கள்” என்று கேட்க முனைகிறான். ஆனால் கலை மகள் சினந்ததால் அவன் நாக்குழறுகிறது. ஆனால், விதியின் வசப்பட்டு, அதை சீதை கவனிக்க தவறி விட்டாள். முதியவர், அடியார், முனிவர் என நம்பி அவனை உள்ளே வரச்சொல்லி இருக்கையில் அமர சொல்கிறாள்.
அவள் அழகை பார்த்த ராவண முதியவருக்கு மனம் தடுமாறுகிறது. வேடன் வலையை விரிப்பது போல் “நான் இலங்கைக்கு சென்றிருக்கிறேன். ஆஹா !! எத்தனை அழகான ஊர்? அந்த ஊர் அரசன் ராவணன் “வெம்மை தீர் ஒழுக்கினன், விரிந்த கேள்வியோன், செம்மையோன். மன்மதன் திகைக்கும் செவ்வியன்” . ஆனால் என்ன செய்ய? அவனுக்கு பிடித்த பெண் எங்கேயும் கிடைக்கவில்லையே? என்று வலையை வீசி பார்க்கிறான். சீதையோ “ எப்படி ஒரு தவ முனிவர் அரக்கர் கோனை ஆதரித்து பேசுகிறீர்கள்?” “அற நெறி நினைக்கிலாதவர் இனத்திடை வைகினீர். என்செய்தீர்?” என்று கடிந்ததோடு அது போன்ற அரக்கரை ராமர் கொன்றதையும் பெருமையாக க்கூறுகிறாள். “மானுடர் வலியர்” என்று அவள் சொன்னதும் போலி அடியாரின் வேடம் கலைகிறது.   
“தீ விடத்து அரவம் தானே உருகெழு சீற்றம் பொங்கி பணம் விரித்தது உயர்ந்தது ஒத்தான்” அதாவது படம் எடுத்து ஆடும் கொடிய விடப் பாம்பு போல எழுந்தான் ராவணன். (படுத்திருக்கும் பாம்புக்கும் தலையைத்தூக்கி படம் எடுத்து நிற்கும்
பாம்புக்கும் நிறைய வேறுபாடு உள்ளது) அந்த க்கோபத்தில் “உன்னை கடித்துத் த்தின்னுவேன்” என்று கத்தினான். பிறகு தரையை பெயர்த்து எடுத்து தேரில் வைத்து சென்றான்.

ஒரு வேடன் எப்படி பொறுமையாய் வலை விரித்து புதரில் காத்திருப்பான் என்பதற்கு ராவண முதியவர் ஒரு உதாரணம். பறவை வலையில் விழுந்த பிறகு எப்படி அவன் தன் மறைவிடத்திலிருந்து எழுந்து வெடுக்கென அதை பிடித்து செல்வானோ அப்படி த்தான் ராவணன் தன் வேடத்தை க்கலைத்து பிராட்டியாரை தேர் மேல் எடுத்து சென்றான்.

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-13

குறள் 341 அதிகாரம் 35 துறவு


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
பொருள் : எதனின்றும் நீ விடுபட்டிருக்கிறாயோ அதனால் உனக்கு துயர் இல்லை. (யாதனின், எதனின் என்று இரு முறை வருவது அழுத்தமாக கருத்தை தெரிவிக்கிறது).


நம் துயர் எதனால் என்று பார்த்தோமானால்,  நாம் எதனிடம் ஈடு பட்டிருக்கிறோமோ, அதன் விளைவால் தான் என்பது தெரிய வரும். அது வீடாக இருக்கலாம். நிலமாக இருக்கலாம். பதவியாக இருக்கலாம்.  காதலியாக இருக்கலாம். ஏன், ஒரு ரசகுல்லாவாகக்கூட இருக்கலாம். ஒரு ஆங்கிலேய எழுத்தாளர் சொன்னது போல் “முதலில் செல்வத்தை நீ ஆள்கிறாய். பிறகு அது உன்னை ஆள்கிறது”. எவ்வளவு உண்மை?


இதனை ஒரு கதை மூலம் புரிந்து கொள்ளலாம். முன்னொருகாலம் இன்னாட்டை பரதர் என்ற ஒரு அரசர் ஆண்டு வந்தார். (ராமர் தம்பி இல்லை). வயதான உடன், அந்த கால வழக்கப்படி, தன் பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு காட்டுக்கு புறப்பட தயார் ஆனார். யோஜித்தார். அரசு பதவி தானே ? அது என்ன பெரிய விஷயம்? பிள்ளைக்குக் கொடுத்தார். அரண்மனை அதன் வசதியான வாழ்வு? அதிலெதற்கு நமக்கு பற்று? விட்டுவிட்டார்.  யானை, குதிரை, ரதம், மெய்க்காவல் எல்லாவற்றையும் இது எதற்கு? இது எதற்கு? என்று கேட்டு பொருளால் மட்டும் அல்ல  மனத்தாலும் துறந்தார். திருவள்ளுவர் சொன்னது போல் யாது? யாது? என்று கேட்டு ஒவ்வொன்றையும் விட்டு விட்டார் ! கானகம் சென்றார். தனக்கென ஒரு குடிலை அமைத்துக்கொண்டார். தினமும் மெய்ப்பொருள் பற்றி தவத்தில் ஈடுபட்டார். அவர்க்கென்று அப்போது எதுவும் இல்லை. அருகில் உள்ள நதியில் ஸ்னானம் செய்யவேண்டியது. பரம்பொருளை நினைத்து இடைவிடாத த்யானம் பண்ணுவது. இடையில் கையில் கிடைத்த கனி கிழங்கை புசிப்பது. இது தான் அவர் தினசரி வாழ்க்கை. எதிலும் பற்றில்லை. ஆதலால், எதனாலும் துயரில்லை. இப்படி ஆண்டுகள் உருண்டோடின. ஒரு மஹரிஷியாகவே ஆகிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அப்போது இறைவன் தன் திருவிளையாடலை துவக்கினான்.
ஒரு நாள் நதியில் குளிக்க வந்தார். மான் ஒன்று தண்ணிர் குடித்து க்கொண்டிருந்தது. தூரத்திலிருந்து சிங்கம்  ஒன்று கர்ஜிக்கும் சத்தம் கேட்டது. அச்சமுற்ற மான் பயந்து போய் ஒரே தாவில் நதியை க்கடந்து செல்ல எண்ணி தாவிற்று. அது ஒரு பெண்மான். கருவுற்றிருந்த நிலை. பூரண கர்ப்பம். தாவும்போது கருவை ஈன்றது. அந்த வலியிலேயே உயிர் துடித்து நதியில் விழுந்து இறந்தது. குட்டியோ நதியில் விழுந்து தத்தளித்தது. நதி அதை அடித்து சென்றது.குளிக்க வந்த பரதர் அந்த மான் குட்டியை ப்பார்த்து பரிதவித்தார். ஒரு அரசனாயிருந்து பல்லாயிரக்கணக்கான குடிமக்களை க்காத்தவர் அல்லவா? அவருக்கு கருணை பிறந்தது. நீந்தி சென்று அந்த மான் குட்டியை தன் கையில் ஏந்தி காப்பாற்றினார். அதை தன் குடிலுக்கு எடுத்து வந்தார். உலர்ந்த புல் படுக்கையில் அதை படுக்க வைத்தார்.  சிறந்த கனிகளை பறித்து வந்து தந்தார். நாளடைவில் அவர் பராமரிப்பில், அந்த குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்தது. குடிலில் அது துள்ளி க்குதித்து விளையாடியது. அதைப்பார்த்துக்கொண்டிருப்பதே பரதருக்கு மனோரஞ்சகமாக இருந்தது.  நாள் ஓடுகிறது. பகவத் த்யானத்துக்கு நேரமே கிடைக்கவில்லை. சிறிது நேரம் த்யானத்தில் அமர்வதற்குள், ஐயையோ மானுக்கு உணவு வேண்டுமே ? என்று யோஜனை வந்து விடும். இல்லையென்றால், அது எங்கு ஓடி விட்டதோ என்று பதட்டப்படுவார். அது சில நாள் வெளியில் மேயப்போனால் கூட கவலையோடு உட்கார்ந்திருப்பார். ஏதாவது சிங்கம், புலி கொன்றிருக்குமோ? என்று மனம் அடித்துக்கொள்ளும். அது வந்த பிறகு தான் அவருக்கு நிம்மதி வரும். இரவு ஆனால், குடிலுக்குள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் உறங்கியவர் ஒரு கதவு செய்து அதை சாத்திக்கொண்டார். இரவில் ஓனாய், நரி, வருமோ என்ற பயம். அவருக்கும் முதுமை வந்தது. வாழ்னாள் முடியும் தருணம். எல்லாவற்றையும் விட்டவர் ஆயிற்றே ! பிள்ளை , குட்டி , மனைவி நினைவு கூட வரவில்லை.ஆனால், கடைசி முறையாக தான் வளர்த்த மானை ப்பார்க்கத்துடித்தார். மனம் இறைவன் பால் செல்லவில்லை. மானின் நினைவாகவே அவர் உயிர் பிரிந்தது. பல வருடங்கள் தவம் செய்தவர் சாகும் வேளை இறைவனின் நினைவு வராமல் ஒரு மானை நினைத்து இறந்தார். அதனால்தானோ என்னவோ,அடுத்த பிறவி மானாகவே பிறந்தார். அந்த பிறவியில் துயரம் பல. அப்பிறவி முடிந்து, அதற்கடுத்த பிறவியில் ஒரு குடும்பத்தில் கடைசி மகனாக ப்பிறந்தார்.  மூடன் என்ற பெயர் வாங்கினார். எல்லோரும் அவரை கருணையின்றி வேலை வாங்கினர். அவருக்கு பேச்சு கூட சரியாக வராது. உடல் மட்டும் வஞ்சனையின்றி வளர்ந்திருந்தது. ஒரு நாள் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவர் ஆழ்மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள். எதிலும் பிடிப்பில்லை என்பதை உணர்ந்தார். வீடு கூட இல்லை. அண்ணன்மார் தகப்பனார் சொத்தை சுருட்டிக்கொண்டனர். அண்ணிகள் வீட்டு வேலைக்கு அவரை பயன் படுத்தினர். எதற்காக பிறந்தோம் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது ஒரு பல்லக்கு வந்தது. ஒரு அரசன் அமர்ந்து வந்து கொண்டிருந்தான். பல்லக்கு தூக்கி வந்தவர்களில் ஒருவன் உடல் நலம் இல்லாமல் விழுந்து விடவே படை த்தலைவன் பல்லக்கை நிறுத்தினான். அவன் கண்ணில் நல்ல உடல் வாகோடு மரத்தடியில் அமர்ந்திருந்த பரதர் பட்டார். (போன ஜென்மத்துப்பெயரே இருக்கட்டும்) “அட, இவனைக்கூப்பிடலாமே” என்று அவரிடம் சென்று “டேய்!! பல்லக்கு சுமக்க வருகிறாயா?, நல்ல சோறு கிடைக்கும்” என்றார். பரதர் தன் மனத்தில் ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த படியால் பதில் கூறவில்லை. தளபதி அவரை வலுக்கட்டாயமாய் இழுத்து க்கொண்டு வந்து பல்லக்கின் கழியை அவர் தோளில் வைத்தார். பல்லக்கு புறப்பட்டது. பரதர் சென்ற ஜென்ம நல்வினைகளின் பயனாக ஒரு குணம் கொண்டிருந்தார். அது தான் ஜீவகாருண்யம். மறந்தும் அவர் ஒரு ஜீவனை யும் கொல்லமாட்டார். இன்றைக்கு பல்லக்கு சுமக்க ஆரம்பித்தவுடன் அவர் பாடு பொல்லாப்பாடாகி விட்டது. காலின் அருகில் ஊரும் ஒரு எறும்பை ப்பார்ப்பார். ஐயையோ என்று உடனே ஒரு தாவு தாவுவார். பல்லக்கு இரண்டு அடி செல்லும். வழியில் ஒரு தவளையை ப்பார்த்தால் உடனே அதை காப்பாற்ற ஒரு பக்கம் சாய்வார். இப்படி அவர் வளைந்து நெளிந்து தாவி குதித்து சென்றால் மேலே உட்கார்ந்திருக்கும் அரசனுக்கு எப்படி இருக்கும்? அவன் தன் தலையை வெளியே நீட்டி “ அட முட்டாளே !! என்ன ஆயிற்று உனக்கு? தோள் வலித்ததென்றால் பல்லக்கை நிறுத்துகிறேன். சற்று உட்கார்ந்து இளைப்பாறித் தொலையேன்” என்று கத்தினான். இறைவன் பார்த்தான். எந்த ப்பற்றை விட்டாலும் ஒரு மான் குட்டியால் தானே துயர் உற்றார். ஆனால், இந்த அளவு அவருக்கு ஜீவகாருண்யம் உள்ளதே !! ஜீவகாருண்யம் என்பது “பற்றற்றான்” என்று திருவள்ளுவர் சொன்ன இறைவனுக்கே உள்ள பற்றல்லவா? ஆதலால், இனியும் பரதரை சோதிக்கக்கூடாதென்று அவருக்கு உடனே ஞானத்தையும்  தந்தருளினான். ஞானம் பிறந்த பரதர் அப்போது அந்த ப்பிறவியில் முதன் முறையாக தெளிவாக ப்பேசினார் “ அரசரே!! யாரை முட்டாள் என்றீர்கள் ? பல்லக்கை சுமக்கும் நானா? உட்கார்ந்திருக்கும் நீங்களா? நாம் இருவரும் ஒரே பொருளால் உண்டானவர்கள். ஆகவே முட்டாள் என்றால் என் பார்வையில் நாம் இருவரும் தான். நீ மேலே உட்கார்ந்து பேசுகிறாய். இறங்கி கொஞ்சம் கீழே பார். இந்த பாதையில் நீ பார்க்காத வகையில் ஊர்கின்ற தவளையும், எறும்பும், அணிலும், பாம்பும், புழுவும், கூட நம்மினும் வேறுபட்டவர் அல்லரே !!. அவர்களையும் தான் நான் எனக்கு சமமாக மதிக்கிறேன். உனக்காக, அவர்களை மிதித்துக்கொன்று நான் எப்படி செல்ல முடியும்? நீ ஒரு உயிர் மகிழ்ந்திருக்க நான் மதிக்கும் இன்னொரு உயிரை நான் எப்படி கொல்வேன்? அது ஒதுங்க மாட்டேன் என்கிறது. ஆகவே தான் நான் அதன் பாதையிலிருந்து ஒதுங்கி ஒதுங்கி செல்கிறேன். உன் பல்லக்கும் ஆடி ஆடி செல்கிறது. ” என்று பதில் இறுத்தார். அரசன் இது ஒரு பல்லக்கு தூக்கும் ஆள் அல்ல நாம் தவறு செய்திருக்கிறோம் என்று புரிந்து கொண்டு பல்லக்கை நிறுத்த சொன்னான். உடனே கீழே குதித்து அவரை அமர சொல்லி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வணங்கினான். ஆனால், பரதர் அத்தருணம் பேசவில்லை. எப்படி பேசுவார்? இறைவன் அவர் படும் துயரை நீக்கி தன்னோடு சேர்த்துக்கொண்டு விட்டான்.  

அவர் மட்டும் அன்று மான் மீது பற்று வைக்காமல் இருந்திருந்தால் செய்த தவத்துக்கு, இந்ததுயர்கள் கூட  இல்லாமல் என்றோ பரமன் திருவடியில் கலந்திருப்பாரே !! திருவள்ளுவர் சொன்னது இதுதானே யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.  

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-12

குறள் எண் 249 அதிகாரம் 25 அருளுடைமை  


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.


பொருள் அறிவில் தெளிவில்லாதவன் ஒரு நூலின் மெய்ப்பொருள் உணர்ந்தது போல த்தான் அகத்தில் அருள் இல்லாதவன் செய்யும் அறமும் இருக்கும். (இரண்டும் அரை குறைதான்)


தெளிவில்லாதவன் நூல்கள் படிப்பான். படித்ததை விளக்க முற்படுவான். ஆனால் அதில் அவனுக்கும் ஒரு பயனும் இருக்காது. கேட்கிறவர்களுக்கும் இருக்காது. திருவள்ளுவர் இந்த உதாரணத்தை எடுத்து க்கொண்டு மனத்துக்கண் அருள் இல்லாதவன் அறம் செய்வது வீண் என்ற விஷயத்தை விளக்குகிறார். நாம் எல்லோரும் என்ன நினைப்போம்? அறம் செய்வது மிக எளிது என்று தானே !!  என்ன ஏழைக்கு உதவி, சிறிது பணம், துணிமணி அதுதானே? என்று எண்ணி அதை செய்த பின் ஆஹா !! நாம் எவ்வளவு பெரிய தர்ம வான் கள் என்று மகிழ்ச்சியாக இருப்போம் இல்லையா?  அப்போது, இந்த வள்ளுவப்பெருமான் மனத்தில் அருள் இல்லாமல் அறம் செய்தால் அது ஆரவாரத்தன்மை உடையது. ஆகவே, நீ அறம் செய்தென்ன செய்யாமல் இருந்தென்ன ? என்று கேட்பார். இதை விட வலிமையான கருத்தை ஆணித்தரமாக யாரும் எந்த சாத்திரத்திலும் சொன்னது கிடையாது. ஆனால், தெய்வப்புலவர் திருவள்ளுவர் யாரும் சொல்லாததை இவ்வளவு அனாயாசமாக சொல்கிறார். வெள்ள நிவாரணம் தானே. 1000 ரூபாய் கொடுத்துவிட்டேன். அனாதை ஆசிரமம் தானே இன்று  500 ரூபாய்  அனுப்பி விட்டேன். அடாடா !! நான் அறம் செய்து வாழ்பவன் என்றால் ஊர் உலகம் ஒத்துக்கொள்ளும். உங்கள் மதம் ஒத்துக்கொள்ளும். உங்கள் மனைவி ஒத்துக்கொள்வாள். ஆனால் , திருவள்ளுவர் ஐயா ஒத்துக் கொள்ளமாட்டார். “ மகனே,உண்மையை சொல். நீ என்ன உன்னிடம் அருள் சுரந்ததால் அறம் செய்தாயா?”  என்று கேட்பார். அதென்ன அருள் சுரப்பது? அது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்காகவோ இல்லை வேறு ஒரு உயிரினத்துக்காகவோ இதய பூர்வமாக அதன் வலியை உணர்ந்து அதை சிறிதாவது நீக்க தன்னால் அதிக பட்சம் என்ன முடியுமோ அதை செய்ய வேண்டும் அது அறம். சிபி சக்ரவர்த்தி ஒரு புறாவுக்காக தன் உடலை வெட்டி துண்டு போட முயன்றானே அது ஒரு அருளினால் விளைந்த அறம். அதைத்தான் அறம் என்று வள்ளுவர் ஒப்புக்கொள்வார். மற்றவையை தள்ளிவிடுவார். இதற்கு விளக்கமாக ஒரு கதை மஹாபாரதத்தில் வருகிறது. தர்ம புத்திரர் ராஜசூய யாகம் செய்தார். க்ருஷ்ணனுக்கு முதல் மரியாதை. (ஒரு இடைச்சிறுவனுக்கு இவ்வளவு மரியாதையா என்று சிலர் எதிர்த்தது வேறு கதை) பின்னர் மற்ற எல்லோருக்கும் கை நிறைய பொன்னும் பொருளும் போதும் என்று சொல்லும் வரை தானம் கொடுத்தார். எல்லோரும் அவரை தர்மராஜா தர்ம தேவதை என்று வாழ்த்தி செல்கிறார்கள். எல்லோரும் போன பின், அப்போது அங்கு ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் பாதி முதுகு தங்க நிறமாக ஜொலிக்கிறது. வந்தவுடன் அந்த தானம் செய்த இடத்தில் விழுந்து விழுந்து புரண்டது. யாருக்கும் அது என்ன செய்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. பிறகு ஒரு முறை தன் முதுகை திருப்பி திருப்பி ப்பார்த்துக் கொண்டது. பிறகு தர்மரிடம் வந்தது “ யோவ்! அரசரே !! என்ன தர்மம் பண்ணினீரோ? ஒன்றுக்கும் உபயோகம் இல்லை” என்று கோபத்துடன் சொன்னது. அது சொல்வதை க்கேட்டு அதிர்ச்சியடைந்த தருமர் அதை க்கூப்பிட்டு “ அதென்ன,இப்படி சொல்கிறாய்? இவ்வளவு தானம் செய்துள்ளேன். வந்தவர் எல்லோரும் பாராட்டி சென்றனர். நீ சொல்வதோ அதற்கு மாறாக இருக்கிறது. அப்போது, தருமத்துக்கு உன் அளவுகோல் தான் என்ன?” என்று கேட்டார்.
கீரிப்பிள்ளை சொன்னது. “ அப்படிக்கேளுங்கள், சொல்கிறேன். முன்னொரு காலத்தில் நான் ஒரு காட்டில் தனியாக வசித்து வந்தேன். நான் இருந்த பொந்துக்கு அருகே ஒரு ஏழை க்குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு தினம் சாப்பிட வழியில்லை. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் உணவே உண்பார்கள். அதுவும் காட்டில் பொறுக்கிய தானியங்களை அரைத்து மாவு போல் செய்து அந்த இல்லத்தரசி செய்து நாலு பங்கு போடுவாள். அதை அவள் கணவர்,அவள் இரண்டு பிள்ளைகள் எல்லோரும் உண்பார்கள். ஒரு நாள் அது போல அவள் பொறுக்கி சேர்த்த தானியங்களை மாவாக அரைத்து வைத்தாள். அப்போது பார்த்து, எங்கிருந்தோ ஒரு ஏழை வந்து “பசி உயிர் போகிறது. எனக்கு உடனே ஏதாவது சாப்பிடக்கொடுங்கள். இல்லையென்றால் என் உயிர் போய்விடும்.” என்று கேட்டான். நான் என் பொந்துக்கு வெளியே வந்து மறைவாய் உட்கார்ந்து பார்த்தேன். பாவம், இவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு சங்கடமாயிருந்தது. முதலில் கணவர் சொன்னார், “ குழந்தைகளா, நமக்கு தெரியும். பசியின் கொடுமை பற்றி. இவன் பாவம். அதே கஷ்டத்தை படுகிறான். என்னால் தாங்க முடியவில்லை. நான் என் பங்கை அவனுக்குக் கொடுக்கிறேன் “ என்று கொடுத்தார்.  அந்த ஏழை அதை வாங்கி சாப்பிட்டான். பிறகு சொன்னான் “ ஐயா, நீர் கொடுத்த மாவு ருசியாக இருக்கிறது. ஆனால், என் பசி தீரவில்லை. இன்னும் கொஞ்சம் கொடுக்க முடியுமா?” என்றான். “ஐயோ, இவன் பாடு நம்மை விட பரிதாபம் போலும். நாமாவது பசியாயிருந்து பழக்கப்பட்டு விட்டோம். என் பங்கு மாவை அவனுக்கு கொடுங்கள். நான் இன்று தண்ணீர் குடிக்கிறேன்” என்று சொல்லி மனைவி தன் பங்கை அந்த ஏழைக்கு க் கொடுத்தாள். ஏழை சொன்னான் “ அம்மா, நீங்கள் சாக்ஷாத் தேவி தான். ஆனால், நான் ஒரு பாவி. எனக்கு இதுவும் போதவில்லை. இன்னம் கொஞ்சம் கொடுக்க முடியுமா?” என்றான். மனைவியும் பரிதாபப்பட்டு தன் குழந்தைகளிடம் “ என் கண்மணிகளா!! நாளைக்கு நான் மாவு தருகிறேன். இப்ப அந்த மாமாவுக்கு நீங்க கொடுப்பீங்களாம்” என்று இதமாக பேசி  அவர்களிடம் மாவை வாங்கி அந்த ஏழைக்கு கொடுத்தாள். நான் இந்த மாதிரி மனிதர்களை பார்த்ததே இல்லையா. என்னடா இது ? என்று அயர்ந்து போய் பார்த்தேனா? அப்போது மாவைக்கையில் வாங்கிய உடனே அந்த ஏழை திடீரென்று மறைந்து அந்த இடத்தில் தர்ம தேவதை தன் சுயமான உருவத்தை அவர்களுக்கு காட்டி நின்றது. அந்த ஒளிமயமான உருவத்தை நானும் பார்த்தேன். அவர்கள் வியப்படைந்து நின்றார்கள். உடனே , தர்ம தேவதை “ உங்கள் தர்ம சிந்தனையை மெச்சினேன். நீங்கள் என்னுடன் வாருங்கள் ” என்று கூறி அவர்களை புஷ்பக விமானத்தில் சுவர்க்கத்துக்கு அழைத்து சென்றது. ஒரே ஒரு கணம்தான். அப்புறம் அங்கு யாரையும் காணோம். அந்த ஏழை உருவில் வந்த தர்ம தேவதை சாப்பிட்டு மிச்சம் கீழே சிந்தியிருந்த மாவு தான் இருந்தது. என்ன தோன்றியதோ கீரிப்பிள்ளைகளுக்கே உள்ள குணத்தினால் உந்தப்பட்டு, நான் அந்த மாவு துகள் மேல் படுத்து உருண்டேன். பார்த்தால், என்னுடைய பாதி முதுகு தங்கமாகி விட்டது. தரையில் மாவு துகள் சுத்தமாக இல்லை. இன்னொரு பாதி முதுகு தங்கமாக வேண்டுமே? இல்லையெனில் சிரிப்பார்களே, அதனால் நானும் அன்றிலிருந்து எங்கெல்லாம் தனவந்தர் தானம் தருமம் செய்கிறார்களொ அங்கெல்லாம் போய் உருளுவேன். மீதி முதுகு தங்கமாகிறதா என்று பார்ப்பேன். ஆகவில்லையே. இவ்வளவு பெரிய உலகத்தில் யாரும் அந்த குடும்பத்துக்கு ஈடாக தர்மம் செய்யவில்லை போலிருக்கிறது. அதனால், என் பாதி முதுகு இன்று வரை தங்கமாகவில்லை. வயசும் ஆகி விட்டதா? மனத்தில் விரக்தியோடு ஊர் ஊராக சுற்றி வருகிறேன். வீடு வீடாக உருளுகிறேன். இன்று இந்த ஊருக்கு வந்தேனா !! என்னவோ இந்த ஊர் முழுக்க எல்லோரும் சொன்னார்கள் “ யாரோ தருமபுத்திரராம். அவர் தர்மமே உருவானவராம். அவர் தானம் செய்கிறார் என்று.”  சரி என்று முழு நம்பிக்கையோடு வந்தேன். இங்கும் என் முதுகு தேய உருண்டது தான் மிச்சம். நீங்களே பாருங்கள். என் பாதி முதுகு தங்கமாகியிருக்கிறதா? இல்லையே. இதன் பொருள் என்ன? அன்றைக்கு அந்த அந்த ஏழை க்குடும்பம் செய்த தருமத்துக்கு, ராஜாவான நீங்கள் செய்த தானம் எல்லாம் சேர்த்தும் ஈடாகவில்லை. நீங்கள் நல்ல பெயர் வேண்டும் என்று ஆரவாரத்துக்காக செய்திருக்கிறீர்கள். அருளினால் அல்ல. என்னவோ செய்யுங்கள். நான் வருகிறேன்” என்று சொல்லி விட்டு சென்று விட்டது. தர்மர் தலை குனிந்தார்.
தர்மருக்கே இந்த கதி யென்றால் நம் கதி என்னவோ? அருளாதான் செய்த அறம் தான். வள்ளுவரே ! எம் தலைக்கனத்தை எல்லாம் இப்படி ஒரு வரியில் அழித்து விட்டீரே ஐயா!!   எமக்கு என்று அருள் வருவது? என்று அறம் செய்வது?         

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்- 5

குறள் 76: அதிகாரம்: அன்புடைமை


அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

பொருள் : அறச்செயல்களுக்கு மட்டும் அன்பு துணையாக இருக்கும் என்று அறியாதவர் சொல்வார்கள். ஆனால், மற்றவர்களோடு போர் புரிவதற்கு க்கூட அன்பு தான் காரணமாக இருக்கிறது.

இதென்ன இப்படி சொல்லுகிறார் வள்ளுவர்? போர் புரிய அன்பு காரணமாக இருக்குமா ? இப்படி ஒரு போர் நடந்திருக்கிறதா ?  ஆம். நடந்திருக்கிறது. மஹா பாரத காலம்.கண்ண பிரான் துவாரகையில் அரசராய் இருந்த நாட்கள். அப்போது ஒரு சிற்றரசராய் இருந்த சத்திராஜித் என்பவனுக்கு சூரிய தேவனிடமிருந்து ஒரு மணி கிடைத்தது. அதன் பெயர் சியமந்தக மணி. அதனை பெருமையாக அணிந்திருப்பான் சத்திராஜித். அது தினம் தேவையான அளவு தங்கம் தரும் ஒரு அதிசயமணி. அதை க்ருஷ்ணருக்கு கூட காட்டாமல் அவன் வைத்திருந்தான். ஒரு நாள் அவன் தம்பி பிரசேனன் மிக ஆசைப்பட்டு அதை  கேட்டு வாங்கி அணிந்து கொண்டு வேட்டைக்கு போனான். திரும்பி வரவில்லை. சத்திராஜித்துக்கு கண்ணன் மேல் சந்தேகம் வந்தது. மணிக்கு ஆசைப்பட்டு ப்ரசேனனைக்கொன்றிருப்பான் கண்ணன் என்று அபாண்டமாக பழி போடவே கண்ணன் ப்ரசேனனைத்தேடி காட்டுக்குள் சென்றார்.  அங்கு ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்ட ப்ரசேனனின் உடலை க்கண்டார். மேலும் காட்டுக்குள் சென்றார். அந்த சிங்கமும் ஏதோ ஒரு சண்டையில் அடிபட்டு உயிரிழந்திருப்பதை பார்த்தார். அவருக்கு பெரு வியப்பு ஏற்பட்டது. என்ன அதிசயம்? ஒரு சிங்கத்தை போரில் வென்று கொல்லும் மிருகம் எதுவாக இருக்கும்? என்று மேலும் காட்டுக்குள் சென்றார். அங்கு ஒரு குகை காணப்பட்டது. அதனுள் ஒரு பெண் ஒரு குழந்தையை தாலாட்டி கொண்டிருந்தாள். தொட்டிலுக்கு மேலே அவர் எந்த மணியை த்தேடி வந்தாரோ அது குழந்தைக்கு விளையாட்டு காட்ட ஒரு பொருளாக தொங்க்க விடப்பட்டிருந்தது. இன்னமும் அதிசயம் அடைந்த கண்ணன் சற்று ஒளிந்திருந்து பார்த்தார். சிறிது நேரம் சென்றவுடன், குகைக்குள் ஒருவர் நுழைந்தார். அவர் வேறு யாருமல்ல. ஜாம்பவான் தான். ஒரு புறம் கண்ணனுக்கு பெருத்த மகிழ்ச்சி. தான் ராமராக அவதாரம் செய்த போது ஜாம்பவான் எத்தனை பெரிய உதவி செய்திருக்கிறார்? வானர சேனைக்கே தலைமை ஏற்று நடத்தியவராயிற்றே? ஓடி சென்று ஆர தழுவிக்கொள்ள வேண்டும் என்று தோன்றிற்று கண்ணனுக்கு. தன்னை சற்று கட்டுப்படுத்திக்கொண்டார். அவர்தான் இப்போது ராமர் இல்லையே! க்ருஷ்ணர் அல்லவா ! அதுவும் இப்போது மணியை த்தேடியல்லவா வந்திருக்கிறார்! அதை மறந்துவிடக்கூடாதே !!
தான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்து “ ஏய்!! கிழக்கரடியே!! எங்கள் இளவரசனை க்கொன்று  அவர் அணிந்திருந்த மணியை அபகரித்து வந்தால் நாங்கள் விட்டு விடுவோமா !! மரியாதையாக க்கொடு மணியை !! என்று பொய்க்கோபத்துடன் அதட்டல் போட்டார். ஜாம்பவானுக்கு வந்திருப்பது யாரென்று தெரியாததால் “ அடேய் !! உனக்காவது மணியை நான் கொடுப்பதாவது !! முடியுமானால் வா வந்து என்னொடு சண்டை போட்டு என்னை தோற்கடி. பிறகு மணியை பற்றி நினை” என்றார். கண்ணபிரானுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சண்டை என்ற சாக்கினில் தனது பழைய நண்பர் ஜாம்பவானோடு பொருதினார். நெஞ்சோடு கட்டி த்தழுவினார். சண்டை என்ற பெயரில் இரண்டு குத்து குத்தினார். தானும் இரண்டு வாங்க்கி க்கொண்டார். இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை. நேரம் ஆக ஆக ஜாம்பவானுக்கு ஐயம் தோன்ற ஆரம்பித்தது. என்ன அதிசயம் ! நம்மை இத்தனை நேரம் சமாளிக்க இவ்வளவு வலிமை இந்த மனிதனுக்கு எங்கிருந்து வந்தது !! இவனைப்போல் ஒருவனை நாம்  பார்த்ததே இல்லையே என்று யோஜித்தவுடன் அவருக்கு தெரிந்து விட்டது வந்திருப்பது சாக்ஷாத் நாராயணன் என்பது. பிறகு அவர் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கேட்டு பின்னர் மணியையும் தந்து தன் பெண் ஜாம்பவதியையும் திருமணம் செய்துவைத்தார். இந்த க்கதையில் கண்ணன் தன் அன்பின் வெளிப்பாடாகவே ஒரு போர் செய்தார் அல்லவா !! அதே கருத்து தான் இக்குறளில் வெளிப்படுகிறது. .