குறள் 274: அதிகாரம் 28 கூடாவொழுக்கம்
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
பொருள் : தவக்கோலத்தில் இருந்து கொண்டு அதற்கு மாறாக தீய செயல்களில் ஈடுபடுதல் ஒரு வேடன் மறைந்திருந்து பறவைகளை ப்பிடிப்பது போன்றது.
இந்த குறள் திருவள்ளுவர் எழுதியபோது ராவணனைத்தவிர வேறு யாரை நினைத்திருப்பார்?
மாரீசனை அனுப்பி ராமரையும் லக்ஷ்மணனையும் சீதையிடமிருந்து பிரித்து அவளை பாதுகாப்பில்லாமல் செய்த பின்னர். தவ வேடம் பூண்டு பர்ணசாலைக்கருகில் ராவணன் வரும் காட்சியை கம்பர் வருணிக்கிறார்.
தாமரை மணிதொடர்
தவத்தின் மாலையன்,
ஆமையின் இருக்கையன்,
வளைந்த ஆக்கையன்,
நாம நூல் மார்பினன்,
தாமரை மணிகளால் ஆன ஜப மாலை அணிந்து கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிய ஆமை போல நடித்து க்கொண்டு, முதியவன் போல உடல் கூனிக்கொண்டு இறைவன் நாமத்தை சொல்லவே அணியப்படும் பூணூல் அணிந்து கொண்டு வருகிறான். (ராவணன் ஒரு இளம் சன்யாசி என்று சினிமாக்களில் காட்டுவது பிழை. அவன் ஒரு முதிய சிவனடியார் போல வருகிறான். சன்யாசியாய் அல்ல.இதை என்னைப்போல் படிக்காதவன் சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள். தவறாகவே எல்லாவற்றையும் புரிந்து கொண்டு தன்னம்பிக்கையோடிருப்பவர் மிக அதிகம் பேர்). அவன் வேடத்தை க்கண்டு தேவரே நம்பி விட்டனர் என்றால் சீதை நம்பாமல் என்ன செய்வாள் ? “ இங்கு யார் யார் இருக்கிறீர்கள்” என்று கேட்க முனைகிறான். ஆனால் கலை மகள் சினந்ததால் அவன் நாக்குழறுகிறது. ஆனால், விதியின் வசப்பட்டு, அதை சீதை கவனிக்க தவறி விட்டாள். முதியவர், அடியார், முனிவர் என நம்பி அவனை உள்ளே வரச்சொல்லி இருக்கையில் அமர சொல்கிறாள்.
அவள் அழகை பார்த்த ராவண முதியவருக்கு மனம் தடுமாறுகிறது. வேடன் வலையை விரிப்பது போல் “நான் இலங்கைக்கு சென்றிருக்கிறேன். ஆஹா !! எத்தனை அழகான ஊர்? அந்த ஊர் அரசன் ராவணன் “வெம்மை தீர் ஒழுக்கினன், விரிந்த கேள்வியோன், செம்மையோன். மன்மதன் திகைக்கும் செவ்வியன்” . ஆனால் என்ன செய்ய? அவனுக்கு பிடித்த பெண் எங்கேயும் கிடைக்கவில்லையே? என்று வலையை வீசி பார்க்கிறான். சீதையோ “ எப்படி ஒரு தவ முனிவர் அரக்கர் கோனை ஆதரித்து பேசுகிறீர்கள்?” “அற நெறி நினைக்கிலாதவர் இனத்திடை வைகினீர். என்செய்தீர்?” என்று கடிந்ததோடு அது போன்ற அரக்கரை ராமர் கொன்றதையும் பெருமையாக க்கூறுகிறாள். “மானுடர் வலியர்” என்று அவள் சொன்னதும் போலி அடியாரின் வேடம் கலைகிறது.
“தீ விடத்து அரவம் தானே உருகெழு சீற்றம் பொங்கி பணம் விரித்தது உயர்ந்தது ஒத்தான்” அதாவது படம் எடுத்து ஆடும் கொடிய விடப் பாம்பு போல எழுந்தான் ராவணன். (படுத்திருக்கும் பாம்புக்கும் தலையைத்தூக்கி படம் எடுத்து நிற்கும்
பாம்புக்கும் நிறைய வேறுபாடு உள்ளது) அந்த க்கோபத்தில் “உன்னை கடித்துத் த்தின்னுவேன்” என்று கத்தினான். பிறகு தரையை பெயர்த்து எடுத்து தேரில் வைத்து சென்றான்.
ஒரு வேடன் எப்படி பொறுமையாய் வலை விரித்து புதரில் காத்திருப்பான் என்பதற்கு ராவண முதியவர் ஒரு உதாரணம். பறவை வலையில் விழுந்த பிறகு எப்படி அவன் தன் மறைவிடத்திலிருந்து எழுந்து வெடுக்கென அதை பிடித்து செல்வானோ அப்படி த்தான் ராவணன் தன் வேடத்தை க்கலைத்து பிராட்டியாரை தேர் மேல் எடுத்து சென்றான்.
No comments:
Post a Comment