Tuesday, January 3, 2017

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்- 5

குறள் 76: அதிகாரம்: அன்புடைமை


அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

பொருள் : அறச்செயல்களுக்கு மட்டும் அன்பு துணையாக இருக்கும் என்று அறியாதவர் சொல்வார்கள். ஆனால், மற்றவர்களோடு போர் புரிவதற்கு க்கூட அன்பு தான் காரணமாக இருக்கிறது.

இதென்ன இப்படி சொல்லுகிறார் வள்ளுவர்? போர் புரிய அன்பு காரணமாக இருக்குமா ? இப்படி ஒரு போர் நடந்திருக்கிறதா ?  ஆம். நடந்திருக்கிறது. மஹா பாரத காலம்.கண்ண பிரான் துவாரகையில் அரசராய் இருந்த நாட்கள். அப்போது ஒரு சிற்றரசராய் இருந்த சத்திராஜித் என்பவனுக்கு சூரிய தேவனிடமிருந்து ஒரு மணி கிடைத்தது. அதன் பெயர் சியமந்தக மணி. அதனை பெருமையாக அணிந்திருப்பான் சத்திராஜித். அது தினம் தேவையான அளவு தங்கம் தரும் ஒரு அதிசயமணி. அதை க்ருஷ்ணருக்கு கூட காட்டாமல் அவன் வைத்திருந்தான். ஒரு நாள் அவன் தம்பி பிரசேனன் மிக ஆசைப்பட்டு அதை  கேட்டு வாங்கி அணிந்து கொண்டு வேட்டைக்கு போனான். திரும்பி வரவில்லை. சத்திராஜித்துக்கு கண்ணன் மேல் சந்தேகம் வந்தது. மணிக்கு ஆசைப்பட்டு ப்ரசேனனைக்கொன்றிருப்பான் கண்ணன் என்று அபாண்டமாக பழி போடவே கண்ணன் ப்ரசேனனைத்தேடி காட்டுக்குள் சென்றார்.  அங்கு ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்ட ப்ரசேனனின் உடலை க்கண்டார். மேலும் காட்டுக்குள் சென்றார். அந்த சிங்கமும் ஏதோ ஒரு சண்டையில் அடிபட்டு உயிரிழந்திருப்பதை பார்த்தார். அவருக்கு பெரு வியப்பு ஏற்பட்டது. என்ன அதிசயம்? ஒரு சிங்கத்தை போரில் வென்று கொல்லும் மிருகம் எதுவாக இருக்கும்? என்று மேலும் காட்டுக்குள் சென்றார். அங்கு ஒரு குகை காணப்பட்டது. அதனுள் ஒரு பெண் ஒரு குழந்தையை தாலாட்டி கொண்டிருந்தாள். தொட்டிலுக்கு மேலே அவர் எந்த மணியை த்தேடி வந்தாரோ அது குழந்தைக்கு விளையாட்டு காட்ட ஒரு பொருளாக தொங்க்க விடப்பட்டிருந்தது. இன்னமும் அதிசயம் அடைந்த கண்ணன் சற்று ஒளிந்திருந்து பார்த்தார். சிறிது நேரம் சென்றவுடன், குகைக்குள் ஒருவர் நுழைந்தார். அவர் வேறு யாருமல்ல. ஜாம்பவான் தான். ஒரு புறம் கண்ணனுக்கு பெருத்த மகிழ்ச்சி. தான் ராமராக அவதாரம் செய்த போது ஜாம்பவான் எத்தனை பெரிய உதவி செய்திருக்கிறார்? வானர சேனைக்கே தலைமை ஏற்று நடத்தியவராயிற்றே? ஓடி சென்று ஆர தழுவிக்கொள்ள வேண்டும் என்று தோன்றிற்று கண்ணனுக்கு. தன்னை சற்று கட்டுப்படுத்திக்கொண்டார். அவர்தான் இப்போது ராமர் இல்லையே! க்ருஷ்ணர் அல்லவா ! அதுவும் இப்போது மணியை த்தேடியல்லவா வந்திருக்கிறார்! அதை மறந்துவிடக்கூடாதே !!
தான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்து “ ஏய்!! கிழக்கரடியே!! எங்கள் இளவரசனை க்கொன்று  அவர் அணிந்திருந்த மணியை அபகரித்து வந்தால் நாங்கள் விட்டு விடுவோமா !! மரியாதையாக க்கொடு மணியை !! என்று பொய்க்கோபத்துடன் அதட்டல் போட்டார். ஜாம்பவானுக்கு வந்திருப்பது யாரென்று தெரியாததால் “ அடேய் !! உனக்காவது மணியை நான் கொடுப்பதாவது !! முடியுமானால் வா வந்து என்னொடு சண்டை போட்டு என்னை தோற்கடி. பிறகு மணியை பற்றி நினை” என்றார். கண்ணபிரானுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சண்டை என்ற சாக்கினில் தனது பழைய நண்பர் ஜாம்பவானோடு பொருதினார். நெஞ்சோடு கட்டி த்தழுவினார். சண்டை என்ற பெயரில் இரண்டு குத்து குத்தினார். தானும் இரண்டு வாங்க்கி க்கொண்டார். இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை. நேரம் ஆக ஆக ஜாம்பவானுக்கு ஐயம் தோன்ற ஆரம்பித்தது. என்ன அதிசயம் ! நம்மை இத்தனை நேரம் சமாளிக்க இவ்வளவு வலிமை இந்த மனிதனுக்கு எங்கிருந்து வந்தது !! இவனைப்போல் ஒருவனை நாம்  பார்த்ததே இல்லையே என்று யோஜித்தவுடன் அவருக்கு தெரிந்து விட்டது வந்திருப்பது சாக்ஷாத் நாராயணன் என்பது. பிறகு அவர் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கேட்டு பின்னர் மணியையும் தந்து தன் பெண் ஜாம்பவதியையும் திருமணம் செய்துவைத்தார். இந்த க்கதையில் கண்ணன் தன் அன்பின் வெளிப்பாடாகவே ஒரு போர் செய்தார் அல்லவா !! அதே கருத்து தான் இக்குறளில் வெளிப்படுகிறது. .

No comments: