Tuesday, January 3, 2017

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-12

குறள் எண் 249 அதிகாரம் 25 அருளுடைமை  


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.


பொருள் அறிவில் தெளிவில்லாதவன் ஒரு நூலின் மெய்ப்பொருள் உணர்ந்தது போல த்தான் அகத்தில் அருள் இல்லாதவன் செய்யும் அறமும் இருக்கும். (இரண்டும் அரை குறைதான்)


தெளிவில்லாதவன் நூல்கள் படிப்பான். படித்ததை விளக்க முற்படுவான். ஆனால் அதில் அவனுக்கும் ஒரு பயனும் இருக்காது. கேட்கிறவர்களுக்கும் இருக்காது. திருவள்ளுவர் இந்த உதாரணத்தை எடுத்து க்கொண்டு மனத்துக்கண் அருள் இல்லாதவன் அறம் செய்வது வீண் என்ற விஷயத்தை விளக்குகிறார். நாம் எல்லோரும் என்ன நினைப்போம்? அறம் செய்வது மிக எளிது என்று தானே !!  என்ன ஏழைக்கு உதவி, சிறிது பணம், துணிமணி அதுதானே? என்று எண்ணி அதை செய்த பின் ஆஹா !! நாம் எவ்வளவு பெரிய தர்ம வான் கள் என்று மகிழ்ச்சியாக இருப்போம் இல்லையா?  அப்போது, இந்த வள்ளுவப்பெருமான் மனத்தில் அருள் இல்லாமல் அறம் செய்தால் அது ஆரவாரத்தன்மை உடையது. ஆகவே, நீ அறம் செய்தென்ன செய்யாமல் இருந்தென்ன ? என்று கேட்பார். இதை விட வலிமையான கருத்தை ஆணித்தரமாக யாரும் எந்த சாத்திரத்திலும் சொன்னது கிடையாது. ஆனால், தெய்வப்புலவர் திருவள்ளுவர் யாரும் சொல்லாததை இவ்வளவு அனாயாசமாக சொல்கிறார். வெள்ள நிவாரணம் தானே. 1000 ரூபாய் கொடுத்துவிட்டேன். அனாதை ஆசிரமம் தானே இன்று  500 ரூபாய்  அனுப்பி விட்டேன். அடாடா !! நான் அறம் செய்து வாழ்பவன் என்றால் ஊர் உலகம் ஒத்துக்கொள்ளும். உங்கள் மதம் ஒத்துக்கொள்ளும். உங்கள் மனைவி ஒத்துக்கொள்வாள். ஆனால் , திருவள்ளுவர் ஐயா ஒத்துக் கொள்ளமாட்டார். “ மகனே,உண்மையை சொல். நீ என்ன உன்னிடம் அருள் சுரந்ததால் அறம் செய்தாயா?”  என்று கேட்பார். அதென்ன அருள் சுரப்பது? அது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்காகவோ இல்லை வேறு ஒரு உயிரினத்துக்காகவோ இதய பூர்வமாக அதன் வலியை உணர்ந்து அதை சிறிதாவது நீக்க தன்னால் அதிக பட்சம் என்ன முடியுமோ அதை செய்ய வேண்டும் அது அறம். சிபி சக்ரவர்த்தி ஒரு புறாவுக்காக தன் உடலை வெட்டி துண்டு போட முயன்றானே அது ஒரு அருளினால் விளைந்த அறம். அதைத்தான் அறம் என்று வள்ளுவர் ஒப்புக்கொள்வார். மற்றவையை தள்ளிவிடுவார். இதற்கு விளக்கமாக ஒரு கதை மஹாபாரதத்தில் வருகிறது. தர்ம புத்திரர் ராஜசூய யாகம் செய்தார். க்ருஷ்ணனுக்கு முதல் மரியாதை. (ஒரு இடைச்சிறுவனுக்கு இவ்வளவு மரியாதையா என்று சிலர் எதிர்த்தது வேறு கதை) பின்னர் மற்ற எல்லோருக்கும் கை நிறைய பொன்னும் பொருளும் போதும் என்று சொல்லும் வரை தானம் கொடுத்தார். எல்லோரும் அவரை தர்மராஜா தர்ம தேவதை என்று வாழ்த்தி செல்கிறார்கள். எல்லோரும் போன பின், அப்போது அங்கு ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் பாதி முதுகு தங்க நிறமாக ஜொலிக்கிறது. வந்தவுடன் அந்த தானம் செய்த இடத்தில் விழுந்து விழுந்து புரண்டது. யாருக்கும் அது என்ன செய்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. பிறகு ஒரு முறை தன் முதுகை திருப்பி திருப்பி ப்பார்த்துக் கொண்டது. பிறகு தர்மரிடம் வந்தது “ யோவ்! அரசரே !! என்ன தர்மம் பண்ணினீரோ? ஒன்றுக்கும் உபயோகம் இல்லை” என்று கோபத்துடன் சொன்னது. அது சொல்வதை க்கேட்டு அதிர்ச்சியடைந்த தருமர் அதை க்கூப்பிட்டு “ அதென்ன,இப்படி சொல்கிறாய்? இவ்வளவு தானம் செய்துள்ளேன். வந்தவர் எல்லோரும் பாராட்டி சென்றனர். நீ சொல்வதோ அதற்கு மாறாக இருக்கிறது. அப்போது, தருமத்துக்கு உன் அளவுகோல் தான் என்ன?” என்று கேட்டார்.
கீரிப்பிள்ளை சொன்னது. “ அப்படிக்கேளுங்கள், சொல்கிறேன். முன்னொரு காலத்தில் நான் ஒரு காட்டில் தனியாக வசித்து வந்தேன். நான் இருந்த பொந்துக்கு அருகே ஒரு ஏழை க்குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு தினம் சாப்பிட வழியில்லை. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் உணவே உண்பார்கள். அதுவும் காட்டில் பொறுக்கிய தானியங்களை அரைத்து மாவு போல் செய்து அந்த இல்லத்தரசி செய்து நாலு பங்கு போடுவாள். அதை அவள் கணவர்,அவள் இரண்டு பிள்ளைகள் எல்லோரும் உண்பார்கள். ஒரு நாள் அது போல அவள் பொறுக்கி சேர்த்த தானியங்களை மாவாக அரைத்து வைத்தாள். அப்போது பார்த்து, எங்கிருந்தோ ஒரு ஏழை வந்து “பசி உயிர் போகிறது. எனக்கு உடனே ஏதாவது சாப்பிடக்கொடுங்கள். இல்லையென்றால் என் உயிர் போய்விடும்.” என்று கேட்டான். நான் என் பொந்துக்கு வெளியே வந்து மறைவாய் உட்கார்ந்து பார்த்தேன். பாவம், இவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு சங்கடமாயிருந்தது. முதலில் கணவர் சொன்னார், “ குழந்தைகளா, நமக்கு தெரியும். பசியின் கொடுமை பற்றி. இவன் பாவம். அதே கஷ்டத்தை படுகிறான். என்னால் தாங்க முடியவில்லை. நான் என் பங்கை அவனுக்குக் கொடுக்கிறேன் “ என்று கொடுத்தார்.  அந்த ஏழை அதை வாங்கி சாப்பிட்டான். பிறகு சொன்னான் “ ஐயா, நீர் கொடுத்த மாவு ருசியாக இருக்கிறது. ஆனால், என் பசி தீரவில்லை. இன்னும் கொஞ்சம் கொடுக்க முடியுமா?” என்றான். “ஐயோ, இவன் பாடு நம்மை விட பரிதாபம் போலும். நாமாவது பசியாயிருந்து பழக்கப்பட்டு விட்டோம். என் பங்கு மாவை அவனுக்கு கொடுங்கள். நான் இன்று தண்ணீர் குடிக்கிறேன்” என்று சொல்லி மனைவி தன் பங்கை அந்த ஏழைக்கு க் கொடுத்தாள். ஏழை சொன்னான் “ அம்மா, நீங்கள் சாக்ஷாத் தேவி தான். ஆனால், நான் ஒரு பாவி. எனக்கு இதுவும் போதவில்லை. இன்னம் கொஞ்சம் கொடுக்க முடியுமா?” என்றான். மனைவியும் பரிதாபப்பட்டு தன் குழந்தைகளிடம் “ என் கண்மணிகளா!! நாளைக்கு நான் மாவு தருகிறேன். இப்ப அந்த மாமாவுக்கு நீங்க கொடுப்பீங்களாம்” என்று இதமாக பேசி  அவர்களிடம் மாவை வாங்கி அந்த ஏழைக்கு கொடுத்தாள். நான் இந்த மாதிரி மனிதர்களை பார்த்ததே இல்லையா. என்னடா இது ? என்று அயர்ந்து போய் பார்த்தேனா? அப்போது மாவைக்கையில் வாங்கிய உடனே அந்த ஏழை திடீரென்று மறைந்து அந்த இடத்தில் தர்ம தேவதை தன் சுயமான உருவத்தை அவர்களுக்கு காட்டி நின்றது. அந்த ஒளிமயமான உருவத்தை நானும் பார்த்தேன். அவர்கள் வியப்படைந்து நின்றார்கள். உடனே , தர்ம தேவதை “ உங்கள் தர்ம சிந்தனையை மெச்சினேன். நீங்கள் என்னுடன் வாருங்கள் ” என்று கூறி அவர்களை புஷ்பக விமானத்தில் சுவர்க்கத்துக்கு அழைத்து சென்றது. ஒரே ஒரு கணம்தான். அப்புறம் அங்கு யாரையும் காணோம். அந்த ஏழை உருவில் வந்த தர்ம தேவதை சாப்பிட்டு மிச்சம் கீழே சிந்தியிருந்த மாவு தான் இருந்தது. என்ன தோன்றியதோ கீரிப்பிள்ளைகளுக்கே உள்ள குணத்தினால் உந்தப்பட்டு, நான் அந்த மாவு துகள் மேல் படுத்து உருண்டேன். பார்த்தால், என்னுடைய பாதி முதுகு தங்கமாகி விட்டது. தரையில் மாவு துகள் சுத்தமாக இல்லை. இன்னொரு பாதி முதுகு தங்கமாக வேண்டுமே? இல்லையெனில் சிரிப்பார்களே, அதனால் நானும் அன்றிலிருந்து எங்கெல்லாம் தனவந்தர் தானம் தருமம் செய்கிறார்களொ அங்கெல்லாம் போய் உருளுவேன். மீதி முதுகு தங்கமாகிறதா என்று பார்ப்பேன். ஆகவில்லையே. இவ்வளவு பெரிய உலகத்தில் யாரும் அந்த குடும்பத்துக்கு ஈடாக தர்மம் செய்யவில்லை போலிருக்கிறது. அதனால், என் பாதி முதுகு இன்று வரை தங்கமாகவில்லை. வயசும் ஆகி விட்டதா? மனத்தில் விரக்தியோடு ஊர் ஊராக சுற்றி வருகிறேன். வீடு வீடாக உருளுகிறேன். இன்று இந்த ஊருக்கு வந்தேனா !! என்னவோ இந்த ஊர் முழுக்க எல்லோரும் சொன்னார்கள் “ யாரோ தருமபுத்திரராம். அவர் தர்மமே உருவானவராம். அவர் தானம் செய்கிறார் என்று.”  சரி என்று முழு நம்பிக்கையோடு வந்தேன். இங்கும் என் முதுகு தேய உருண்டது தான் மிச்சம். நீங்களே பாருங்கள். என் பாதி முதுகு தங்கமாகியிருக்கிறதா? இல்லையே. இதன் பொருள் என்ன? அன்றைக்கு அந்த அந்த ஏழை க்குடும்பம் செய்த தருமத்துக்கு, ராஜாவான நீங்கள் செய்த தானம் எல்லாம் சேர்த்தும் ஈடாகவில்லை. நீங்கள் நல்ல பெயர் வேண்டும் என்று ஆரவாரத்துக்காக செய்திருக்கிறீர்கள். அருளினால் அல்ல. என்னவோ செய்யுங்கள். நான் வருகிறேன்” என்று சொல்லி விட்டு சென்று விட்டது. தர்மர் தலை குனிந்தார்.
தர்மருக்கே இந்த கதி யென்றால் நம் கதி என்னவோ? அருளாதான் செய்த அறம் தான். வள்ளுவரே ! எம் தலைக்கனத்தை எல்லாம் இப்படி ஒரு வரியில் அழித்து விட்டீரே ஐயா!!   எமக்கு என்று அருள் வருவது? என்று அறம் செய்வது?         

No comments: