Tuesday, January 3, 2017

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்- 4

குறள் 72 அதிகாரம் அன்புடைமை


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.


பொருள்: அன்பில்லாதவர்கள் எல்லாவற்றையும் தனதென்றே நினைப்பார்கள். அன்புடையவர்கள் தன் எலும்பைக்கூட பிறர்க்காக கொடுப்பார்கள்.


அது சரி, உண்மையிலேயே அன்பு மிகுதியால் யாராவது தன் எலும்பை க்கொடுத்திருக்கிறார்களா இல்லை கவிதையில் எதுகை, மோனைக்காக அன்பு, என்பு என்று வள்ளுவப்பெருமான் எழுதி விட்டாரா ? இல்லை, எலும்பை ஒருவர் கொடுத்திருக்கிறார்.


இதற்கொரு கதை இருக்கிறதே !!!!

முன்னொரு காலத்தில் அசுரர் சர்வ வல்லமையும் பெற்று திகழ்ந்தனர். தேவர்களை படாத பாடு படுத்தினர். தேவர்கள் ஓடி ஒளிந்தனர். பரமனும் அவர்களை கண்டு கொள்ளவில்லை. அவன் தான் வேண்டுதல் வேண்டாமை இலான் ஆயிற்றே ! நீங்களே பார்த்து க்கொள்ளுங்கள் என்று சும்மா இருந்து விட்டான். தேவர்களிடம் இருந்த ஆயுதங்கள் உபயோகமில்லாதவை. 1962 ல் சீனப்போரில் நாம் எந்த நிலையில் இருந்தோமோ அந்த நிலையில் இருந்தார்கள். அசுரர்களை எதிர்க்க முடியாத நிலை. அதிலும் அசுரர் தலைவன் விரித்திராசுரனை ஜெயிக்க ஆயுதம் இல்லாமல் எப்படி முடியும் ? அவர்களுக்கு தேவை a deadly weapon. தேவர் கவலையில் ஆழ்ந்திருந்த போது, அப்போது ததீசி என்ற முனிவர் வந்தார். பல வருடங்கள் தவம் செய்து மிக வலிமையான உடல் பெற்றிருந்தார் அவர். தத்யங்கர் என்று அவரை சொல்வார்கள். அதாவது தயிர் போன்று இறுகிய உடல் உடையவர் என்று பொருள். அவர் இந்திரன் பால் மிகுந்த அன்பு உடையவர். அவர் சொன்னார் “ இந்திரனே, கவலையில் ஆழ்ந்திருப்பதால் ஒரு பயனும் இல்லை. உண்மை என்ன ? உன்னிடம் தேவையான ஆயுதம் இல்லை. என் எலும்புகளோ பல ஆண்டுகள் செய்த கடும் தவத்தின் பயனாக வஜ்ரம் போல் வலுப்பெற்றுள்ளன. ஆனால் உனக்கு உபயோகப்பட ஒன்று செய்கிறேன். இப்போதே யோஜிக்காமல் நான் உயிரை விடுகிறேன். என் உடலில் உள்ள எலும்புகளை எடுத்து ஆய்தமாக்கி போர் புரி.” என்று சொல்லி பதிலை எதிர்பார்க்காமல் தன் உயிரை விட்டார். இந்திரன் அவர் முதுகெலும்பை எடுத்து வஜ்ராயுதம் என்று பெயர் சூட்டி போருக்கு கிளம்பினான். மற்றவர்களும் உற்சாகத்துடன் சென்றார்கள். போரினில் அசுரர் தோல்வி கண்டு ஓடினார்கள். தன் உயிரை பொருட் படுத்தாமல் தீய சக்திகள் தோற்க தன் எலும்பையே கொடுத்த ததீசி முனிவரின் நினைவாக இன்றும் பரம வீர் விருது போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த க்கதையை வள்ளுவப்பெருமானின் குறள் நமக்கு நினைவுறுத்துகிறது.

No comments: