Friday, December 30, 2016

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-22

குறள் எண் 291 அதிகாரம் 30 வாய்மை


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

பொருள்: யாதொரு உயிருக்கும் கெடுதல் இல்லாமல் பேசுவது வாய்மை என கூறப்படுகிறது


வாய்மை என்பது உண்மையை சொல்வது மட்டும் அல்ல. உண்மை என உள்ளத்தில் தோன்றியதை வாயால் சொல்வதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை அதன் விளைவுகளை சிந்தித்தபின் சொல்லும் முறையில் வேண்டுமானால் மாற்றம் செய்து சொல்வது. “ஸத்யம் ப்ரூயாத், ப்ரியம் ப்ரூயாத் ந ப்ருயாத் ஸத்யம் அப்ரியம் ” என்று வேதம் மற்றவருக்கு இதம் தராததை சத்தியமாக இருந்தாலும் சொல்லாதே என்று  சொல்கிறது. “ப்ரியம் நான்ருதம் ப்ருயாத்”  இதம் அளிக்கும் என்பதற்காக பொய் சொல்லாதே என்பது புரிகிறது. சத்தியமும் சொல்லவேண்டும். மற்றவருக்கு தீமையும் வரக்கூடாது என்றால் இது புரிது கொள்ள கடினமாக உள்ளது. இதனை விளக்க ஒரு கதையைப்பார்ப்போம். ஆதாரம் http://www.kamakoti.org/kamakoti/details/devibhagvatpurana24.html


கோசல தேசத்தில் தேவவ்ரதன் என்றொருவன் இருந்தான். ஒரு பிள்ளையை வேண்டி யாகம் பல செய்தான்.  யாகத்தில் கோவிலர் என்ற ரிஷி வேதம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வேதத்தின் மந்திரங்களை (ராவணன் போல) இசை வடிவில் பாடக்கூடியவர். சாம கானம் என்று சொல்வர். இசையாக ப்பாடும்காலத்து சொற்களை ப்பிரித்து இசைப்போக்கோடு இணைத்து ப்பாடுவது முறை. அது அறியாது தேவவிரதர் “என்ன ஐயா, வேதத்தில் உள்ள சொற்களை ப்பிரித்தும் சிதைத்தும் பிழையாக சொல்கிறீரே என கோபிக்க உடனே கோவிலர் “ உனக்கு மகன் பிறப்பான், ஆனால் அவன் முட்டாளாக இருப்பான்” என சபித்து விட்டு சென்று விட்டார். அவர் சொன்னது போல தேவவிரதனுக்கு பையன் பிறந்தான். ஆனால் முட்டாள் ஆக இருந்தான். தேவவிரதன் என்னென்னவோ செய்தும் படிப்பு ஏறவில்லை. ஆனால், ஒரு நல்ல குணம் அந்த ப்பிள்ளை பொய்யே சொல்லமாட்டான்.  ஒரு நாள், தன் தகப்பனார் தொல்லை  தாளாமல், வீட்டை விட்டு ஓடி ஒரு காட்டுக்கு ப்போய் அங்கு ஒரு குடிலை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தான். அங்கு இருந்த காட்டு வாசிகளோடு பழகத்துவங்கினான். அவர்களுக்கு அவன் மூடன் என்பது தெரியவில்லை. அது பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. ஆனாலும், உண்மையே பேசுபவன் என்று தெரிந்ததால், சத்யவிரத முனி என்று அவனை அழைத்து வந்தனர். ஒரு நாள், ஒரு காட்டு பன்றியை ஒரு வேடன் துரத்தி வந்தான். அந்த வேடன் காட்டு மிருகங்களை க்கொன்று அதன் இறைச்சியை விற்பவன்.அந்த காட்டு பன்றி ஓடி வந்து சத்ய விரதன் குடிலில் நுழைந்து ஒளிந்து கொண்டது. துரத்தி வந்த வேடன் குடில் வரை வந்து வாசலில் நின்றவாறே “ முனிவரே, இங்கு ஒரு காட்டுப்பன்றி ஓடி வந்ததா?” என்றூ கேட்டான். சத்யவ்ரதருக்கு ப்ரச்சினை ஆரம்பித்தது. அவர் பொய் சொல்லமாட்டார். ஆனால், இங்கு உண்மையை சொன்னால் காட்டு பன்றி பிடிபடும். என்ன செய்வது என்று யோஜித்தார்.  “யாதொன்றும் தீமை இலாது சொலல்”. இங்கு உண்மை சொன்னால் ஒரு உயிர் போகும். சொல்லாமல் இருந்தால் வேடனுக்கு அவன் இன்றைய பொழுது வீணாகும். சாகும் அளவு தீமை இல்லை. எனவே வேடனைப்பார்த்து  திடுக்கிட்டவர் போல ஒரு முறை பரக்க பரக்க பார்த்து விட்டு மறுபடி கண்களை மூடிக்கொண்டார். “ஐம், ஐம், ஐம்” என்றார்.  வேடன் பார்த்தான். ஒரு வேளை அவர் தியானத்தை க்கலைத்து விட்டோமோ என்று பயந்து போய் “ ஐயா, மன்னிக்கணும். நீங்க தவம் பண்ணுங்க. நான் போறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். காட்டுபன்றியும் ஓடி விட்டது. இருந்தாலும், அவனுக்கு உள்ளூற சந்தேகம். அந்த குடிலுக்கு அருகில் உள்ளவர்களை விசாரிக்க ஆரம்பித்தான். “ அதென்ன, அந்த முனிவர் ஐம் ஐம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாரே, அது என்ன தவம்?” என்று கேட்டான்.
அங்கிருந்த பழங்குடியினர் “ என்னது, சத்யவிரதர் ஐம், ஐம் என்று சொல்கிறாரா, எங்களுக்கு தெரியவில்லையே, அவரையே கேட்போம். வா” என்று அழைத்து சென்றனர். எல்லோரும் வருவதை சத்யவிரதர் பார்த்தார். “இதென்னாடா, வம்பா போச்சு? சும்மா அந்த காட்டு பன்றியை காப்பாற்ற ஐம் ஐம் என்று சொல்லப்போய் இவர்கள் எல்லோரும் தவம் செய்வதை பார்க்க வருகிறார்களே என்று மறுபடி ஆசனத்தில் அமர்ந்து “ஐம் ஐம் ஐம்” என்று சொல்ல துவங்கினார்.


வேடனோடு வந்த பழங்குடியினர் “ஆமாம், ஐயா ஏதோ நம்ம நன்மைக்காக தவம் செய்யுறாரு. நீ போய் கெடுக்க இருந்தியே” என்று வேடனை கடிந்துகொண்டு “ஐயா, நீங்க தவம் பண்ணுங்க, பயம் வேண்டாம். யாராவது எங்க கூட்டத்திலே ஒருத்தன் இங்க உட்கார்ந்திருப்போம். எது வேணாலும் கேளுங்க. இந்த மாதிரி வேடன் எவனாவது வந்தா ஒரு கை பாத்துடலாம்” என்று சொல்லி விட்டு சென்று விட்டனர்.
ஒரு ஆள் அங்கே காவலுக்கு உட்கார்ந்தான். சத்யவிரதர் இப்போது கட்டாயமாக தவம் செய்தே ஆக வேண்டிய நிலை. “ஐம். ஐம், ஐம்” என்று இடைவிடாது ஜபம். வேறு வழி?. நாட்கள் ஆகின்றன. எதோ கொஞ்சம் உண்டு விட்டு மிச்ச நேரம் முழுக்க “ஐம், ஐம்” என்ற தவம். அவருக்கு தெரியாது.”ஐம்” என்பது கலைமகளுக்கான அட்சரம் என்று. ஒரு வாரம் ஜபம் முடிந்த உடன் அவருக்கு கலை மகள் காட்சி தந்து “ மகனே, என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டாள். சத்ய விரதர் சொன்னார் “ அன்னையே, பிறந்ததிலிருந்து முட்டாள் என்று அழைக்கும் நிலை என்னுடையது. என்னை ஒரு அறிவாளியாக மாற்ற வேண்டும். அது தான் எனக்கு வேண்டும்” என்று சொன்னவுடன் கலைமகள் அவருக்கு எல்லா அறிவையும் தந்தருளினாள்.

சத்யவிரதருக்கு கலைமகள் அருள் புரிந்தது ஜபத்தினாலா அல்லது அவர் செய்த வாய்மையே பேசுவது என்ற தவத்தினாலா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

No comments: