சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
தொடர்ச்சி
கொங்கணவர் கையில் இருந்த உணவை உண்டார். பிறகு, அந்த வியாதரைப்பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு ஊருக்கு வெளியே வந்தார். அந்த அம்மணியே சொல்கிறார் என்றால் அந்த வ்யாதர் எந்த ஆசிரமத்தில் எப்படி நியமத்தில் இருக்கிறாரோ ? என்ன தவ வலிமை கொண்டவரோ ? எப்படியெல்லாம் நம்மை கேள்வி கேட்பாரோ ? என்று பயந்த படியே அங்கு இருந்த சிலரை கேட்டார் “ ஐயா ! ஏதோ வ்யாதராமே அவர் எங்கு இருக்கிறார்?” என்றார் மிக மரியாதையாக. அவர்களும் “ வ்யாதனா!! அங்கே பாருங்கள், வ்யாதன் அமர்ந்திருக்கிறான்” என்று அலட்சியமாக கையை காட்டி விட்டு போய்விட்டார்கள். அவர்கள் கை காட்டிய திசையில் பார்த்த கொங்கணவர் சற்று ஆடிப்போய் விட்டார். அங்கு பார்த்தால், ஒரு இறைச்சி கடை. பல் வேறு மிருகங்களின் இறைச்சிகள் இருந்தன. அவற்றுக்கு நடுவே ஒரு பரட்டைத்தலையன் உட்கார்ந்து வருபவர்களுக்கு தன் கத்தியால் வெட்டி தராசில் போட்டு நிறுத்து கொடுத்துக்கொண்டிருந்தான். முனிவர் அரை மனத்தோடு அவன் அருகே போய் நின்றார். இறைச்சித்துண்டங்கள் எங்கு பார்த்தாலும் சிதறிக் கிடந்தன. சுற்றிலும் இரண்டு நாய்கள் வேறு. நாற்றம் குமட்டியது. நரக வேதனை கொங்கணருக்கு. வாயை மூடிக்கொண்டார். வ்யாதன் ஒரு கையால் இறைச்சியை வெட்டிக்கொண்டே மற்றொரு கண்ணால் தராசை பார்த்துக்கொண்டிருந்தான். அவர் பக்கம் திரும்பாமலே, “வாருங்கள், கொங்கணவரே, அம்மா என்னை பார்த்து விட்டு வர சொன்னாங்களா !” என்றான். முனிவர் கீழே விழாத குறையாக, ஈனஸ்வரத்தில் “ ஆமாம், அவள் தான் உன்னை இல்லை உங்களை பார்க்க சொன்னாள்” என்றார். வ்யாதன் “ சரி கொஞ்சம் ஒக்காருங்க, சாமி,“ என்று சொன்னபடி ஒரு அழுக்கு பாயை போடவும் முனிவர் அதில் அமர்ந்து கொண்டார். அவரை அவன் ஏறிட்டு பார்த்ததாக கூட தெரியவில்லை. இறைச்சி வெட்டுவது, தராசில் நிறுப்பது, பணம் வாங்கி போடுவது இதில் தான் அவன் கவனம் இருந்தது. சற்று நேரம் கழித்து எல்லா வாடிக்கையாளர்களும் கலைந்து சென்றனர். வ்யாதன் அவர் பக்கம் திரும்பினான். “ சாமி, சொல்லுங்க.என்ன விஷயம் ? ” என்றான். “ என்னத்தை சொல்ல , வியாதரே, வாழ்க்கையில் தவம் செய்து என்னென்னவோ சாதித்து விட்டதாக நினைத்தேன். ஆனால், இன்று நடப்பது ஒன்றும் எனக்கு புரியவில்லை. பேயறைந்தது போல் இருக்கிறது. அங்கு அந்த ப்பெண் என்ன வென்றால் நேரில் பார்த்தது போல் நான் கொக்கை எரித்த விஷயத்தை சொல்கிறாள். பிறகு உங்களிடம் போக சொல்கிறாள். நீங்கள் என்னடாவென்றால் என்னிடம் ஒன்றும் கேட்காமலே அவள் தானே உன்னை அனுப்பினாள் என்று சொல்கிறீர்கள்!! ஆனால், உங்களைப் பார்த்தால் என்னவோ பெரிய …” வ்யாதன் சிரித்தான் “ ஒரு முனிவர் மாதிரி தெரியவில்லையே என்றுதானே சொல்கிறீர்கள் ? நான் முனிவரும் இல்லை. தவசியும் இல்லை. குருவும் இல்லை. நான் ஒரு கசாப்புக்கடைக்காரன்தான். அது போகட்டும். நீங்கள் இங்கு அமர்ந்திருந்தீர்களே என்ன கவனித்தீர்கள் ?” என்றான். கொங்கணவர் “ கவனிக்க என்ன இருக்கிறது? ஒரே நாற்றம். குடலை பிடுங்குகிறது. இறைச்சியை வெட்டுகிறீர்கள். பிறகு தராசில் நிறுக்கிறீர்கள். பணம் வாங்குகிறீர்கள். அதான் பார்த்தேன். எதுக்குடா வந்தோம் என்று ஆகி விட்டது.” என்றார்.
வ்யாதன் சிரித்தான் “ பார்த்தீர்களா, முனிவரே, முக்கியமானதை விட்டு விட்டீர்களே” என்றான். முனிவர் யோஜித்தார் “ அதென்ன, நான் விட்டு விட்டேன்?” என்றார். வ்யாதன் தராசை காண்பித்தான் “ முனிவரே, இறைச்சியை விடுங்க. நாற்றத்தை விடுங்க. இந்த தராசை பார்த்தீர்களா?” என்றான்.
“தராசுதானே பார்த்தேன் ….அதில் வைத்துதானே இறைச்சியை நிறுக்கிறீர்கள். அதற்கென்ன” என்றார் கொங்கணவர்.
வ்யாதன் சொன்னான் “ அவ்வளவு சாதாரணம் இல்லை, சாமி,இந்த விஷயம். சரி, இங்கு யாரெல்லாம் வந்தார்கள்? பார்த்தீர்களா? நினைவிருக்கிறதா ?” என்று கேட்டான். கொங்கணவர் சற்று யோஜித்தபடியே சொன்னார்
“சொல்கிறேன். ஒரு தனவந்தர் வந்தார்.” வியாதன் தொடர்ந்தான் “அப்புறம் பின்னே ஒரு ஏழையும் வந்தான். அவன் போனபின் ஒரு போர்வீரர் வந்தார். கூடவே ஒரு திருடனும் வந்தான்.” கொங்கணர் உடனே நினைவு படுத்திக்கொண்டார் “ ஒரு நர்த்தகி கூட வந்தாள் இல்லையா” வியாதன் சொன்னான் “ ஆமாம், சாமி, அவள் போவதற்குள் எங்கிருந்தோ ஒரு குருடியும் வந்தாள். சரிதானே, அவர்கள் வந்தார்கள். ஆனால், என் கண் எங்கிருந்தது? அதைக் கவனித்தீர்களோ? அவர்கள் மேலா? அவர்கள் யார் என்பதிலா ? அவர்கள் பதவி, பணம் இதிலா ? அவர்கள் ஆடை அணிகலனிலா? வந்தவர் எவராயிருந்தாலும் என் கவனம் என் தராசின் மேல் தான் இருந்தது. இன்னம் சரியாக சொல்லட்டுமா, சாமி, என் தராசின் முள்ளில் தான் இருந்தது. யார் வந்தாலும் , அவன் கடவுளாவே இருக்கட்டுமே, எனக்கு என் தராசின் முள் நடுவில் தான் இருக்க வேண்டும். சாமி, இது எனக்கு என் தந்தையார் சின்ன வயசில் சொல்லிக்கொடுத்தது. அப்படியே என் மனத்தில் பதிந்து விட்டது. ஆகவே, என் மனம் தராசின் முள் நடுவில் இருக்கிறதா இல்லையா என்று தினம் நூறு தடவை பார்த்து பார்த்து, ஆழ் மனத்திலேயே நடுவு நிலமை என்ற நினைப்பு ஊறி விட்டது. ஐயா, என் தொழில் என்னவோ இறைச்சி விற்பதுதான். உங்களை போல சமுதாயத்தில் ஒரு கௌரவமான இடத்தில் நான் இல்லை. ஆனால், இத்தொழிலில் ஒரு நல்ல பாடம் அதாவது நடுவு நிலைமை என்பது எனக்கு பழகி விட்டது. அப்புறம் ஒரு பெரியவர் சொன்னாரு, ஒருத்தன் நடுவு நிலைமையோடு இருந்தான்னு வைங்களேன், அவனுக்கு எதிராளி் மனத்தில் ஓடறது என்னன்னுட்டு கண்ணாடியில் தெரியறதை ப்போல தெரியுமாம். எனக்கு அப்படித்தான் தெரியுது. ஒரு வேளை அந்த அம்மாவுக்கும் தெரியுதோ என்னவோ !! அதினால உணர்ச்சி வசப்பட்டு எதையாவது செய்து விட்டு நான் மாட்டிக்கொள்றதில்லை. சாமி, நான் அதிகமா பேசறேன் அப்படின்னு தோணுது. உண்மையில் நீங்கள் பெரிய தவசீலர். அதில் ஒரு சந்தேஹமும் இல்லை. ஆனால், உங்க கிட்ட அந்த நடுவு நிலைமை மட்டும் இல்லை. இருந்திருந்தால், கொக்கை எரிச்சிருக்க மாட்டீங்களே !! உங்க தரப்பிலிருந்து மட்டும் அது எச்சமிட்டதை பார்த்து அந்த கொக்கை எரிச்சீங்க. அது என்ன பெரிய தப்பு பண்ணிடுச்சு ? சொல்லுங்க. வீணா, ஒரு கொலை நடந்திச்சு. அது போகட்டும், அந்த அம்மணியை எடுத்துக்கொள்ளுங்க. அவங்க தனது மாமனார் மாமியார் இருவருக்கும் பணிவிடை செய்து விட்டு தான் உங்களை கவனிக்க முடியும் என்ற இயற்கையான காரணத்தை அவங்க சொல்லியும் கேக்காம மறுபடி நடுவுநிலைமை தவறி உங்க தவ வலிமையால் அந்த பெண்ணை எரிக்க இருந்தீங்க. நல்ல வேளை யார் செஞ்ச புண்ணியமோ, இல்லை அவங்க கற்பின் வலிமையோ, இரண்டாவது கொலை நடக்காமல் நீங்க தப்பினீங்க. யாரையுமே் குற்றமோ குறையோ சொல்லும் முன், தராசின் முள் போல நீங்க நடுவில் இருக்கிறீங்களா அப்படின்னு பாருங்க. உங்க மனசு சரியா இருக்கா ? இல்லையா, அப்ப, நான் தராசின் தட்டுக்களை சரி செய்வதை ப்போல முதலில் உங்க மனசை நிலைப்படுத்துங்க. பிறகு அவர்களின் குறையோ குணமோ அதை உங்கள் மனமே காட்டும். பிறகு, ஒரு முடிவு எடுங்களேன்..” என்றான். முனிவருக்கு கண் திறந்தது. (!!) அவன் ஒரு கோடாத சான்றோனாக அப்போது தெரிந்தான். “ வ்யாதா, நீ எவ்வளவு உயர்ந்தவன் ? இனி நீதான் எனக்கு குரு அப்பா” என்றார். வ்யாதன் இடி இடி என்று சிரித்தான். “ சாமி, என்னைக்கண்டாலே எல்லாரும் ஒரு அடி விலகிப்போறாங்க. நான் உங்களுக்கு குரு அப்படின்னா யாராவது இந்த சமுதாயத்தில ஏத்துக்குவாங்களா ? பேசாம நீங்களே நான் சொன்னதை எழுதி போட்டிருங்க” என்றான். “அப்படியே சொல்லிக்கொண்டிருப்பா” என்று சொல்லி முனிவர் அவன் சொன்னதை தன் எழுத்தாணியால் ஓலையில் எழுதிக்கொண்டார் “வ்யாத கீதை” என்ற பெயரோடு தன் சீடர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். நீங்களும் நடுவுனிலைமை பற்றி புரிந்து கொண்டிருப்பீர்கள் இல்லையா?
No comments:
Post a Comment