குறள் எண் 104 அதிகாரம் 11 செய் நன்றி அறிதல்
குறள்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
பொருள் ஒருவன் தினையளவு சிறிதான உதவியை செய்தாலும் அதன் பயனை உணர்ந்தவர் அதனை பனையளவு என்பது போல போற்றுவர்.
இராமாயணத்துக்கு செல்வோம். யுத்த காண்டம். ராமர் கடலை கடக்க பாலம் கட்டுகிறார். நளன், நீலன் போன்ற வானர தலைவர்கள் அந்த முயற்சிக்கு தலைமை தாங்குகின்றனர். வலிமை பெற்ற வானரர் மலைகளையே உருட்டி கொணர்ந்து கடலில் போடுகின்றனர். பாலம் கட்ட போடப்பட்ட அந்த பெரிய பாறைகள் மீது வானரர் செல்கின்றனர்.
இதை ப்பார்த்த அணில் தானும் இந்த முயற்சியில் பங்கெடுக்க வேண்டும் என்றூ விழைகிறது. உடனே சென்று தன் சிறிய முதுகில் கொஞ்சம் மண்ணை சுமந்து வந்து அந்த பாலத்தில் போடுகிறது. மண்ணின் அளவோ மிக மிக குறைவு. அணிலின் இந்த உதவியின் அளவு பாலம் கட்டும் பணியில் மிக மிக சிறியது. கடு களவு. அல்லது திருவள்ளுவர் சொன்னது போல் தினையளவு. ஆனால், இதனை க்கண்ட ராமர் அணில் ஏதோ மலையையே புரட்டி ப்போட்டது போல அந்த அணிலை தன் திரு க்கரத்தினில் எடுத்து நன்றி சொல்லும் விதமாக அதன் முதுகை வலி நீக்க ஒத்தடம் கொடுப்பது போல தடவிக்கொடுக்கிறார். கர்ண பரம்பரை க்கதை தான். இதனை பாராட்டி எந்த கவிஞரும் எழுதவில்லையே !!
தொண்டரடிப்பொடி ஆழ்வார் பார்த்தார். அவர் திருவரங்கத்து பெருமாளை த்தவிர வேறு யாரையும் பாடாதவர். திருமாலை என்ற பாமாலையால் அரங்கனை ஆராதித்தவர். திருமாலை அறியாதார் திருமாலை அறியார் என்று வைணவர் கூறுவர். அவர் அணிலை எண்ணி பாடுகிறார்
“குரங்குகள் மலையை நூக்கக்
குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற
சலம் இலா அணிலும் போலேன் “ (திருமாலை)
குரங்குகள் மலைகளை தூக்கட்டும். தூக்கி அணைகட்ட போடட்டும். அவை போல நான் இருக்க இயலாது. குறைந்த பட்சம் அந்த அணில் மாதிரியாவது இருக்க மாட்டேனா ! என்பார். அணிலின் உதவி மிக சிறியதுதான். இருப்பினும்,அதை பாராட்டி தன் கரத்தால் நன்றியை தெரிவித்த ராமர் பெருமை இக்குறளில் வெளிப்படுகிறதே !!
No comments:
Post a Comment