Friday, December 30, 2016

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்- 2

குறள் எண் 41 அதிகாரம் 4 - இல்வாழ்க்கை


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.   


பொருள் : இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் இல்லறத்தான் மற்ற மூவருக்கும் நல்வழியில் செல்ல துணையாகஉள்ளான். மிகத்தெளிவாக புரிகிறது.
இதில் ஒரு கேள்வி.
யார் இந்த “இயல்புடைய மூவர்”  ?  


உரைகளைப்பார்ப்போம்.அப்பா, அம்மா, குழந்தைகள் என்று சொல்வார் சிலர். பெற்றோர், உறவினர், குழந்தைகள் என்பார் சிலர். இவர்கள் சமயத்தின் பால் ஈடுபாடு இல்லாததன் காரணத்தினாலோ அல்லது அதில் பயிற்சி இல்லாததன் காரணத்தினாலோ இப்படி எழுதுகின்றனர். ஆனால் இயல்புடைய மூவர் பற்றி இந்து மதம் கூறுவது என்ன ?


இந்து மதத்தில் ஒருவன் தன் வாழ்வில் நாலு வகையான நிலைகளில் இயல்பாக வாழ வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நான் கு நிலைகளுக்கும் கடமைகள் வேறு. பொறுப்புகள் வேறு. ப்ரம்மச்சாரி (திருமணம் ஆகும் முன்) ,  க்ருஹஸ்தன், (இல்லறத்தோன்) , வானப்ரஸ்தன் (தன் கடமைகளை முடித்து பிள்ளையிடம் பொறுப்பை ஒப்படைத்த பின் துணைவியுடன் கானகம் செல்பவன்),  சன்னியாசி ( இறுதியாக முற்றும் துறந்த துறவி) என்பவை அவை. இவற்றை ஆச்ரமம் என்று சொல்வதுண்டு. இவை தவிர்த்து மற்ற வாழும் முறைகள் இயல்புடையவை அல்ல.


இவற்றில் எது உயர்ந்தது ? வள்ளுவப்பெருமான் கேட்கிறார்.  இந்த நால்வகை வாழும் முறைகளில் இல்லறத்தோன் துணையின்றி மற்ற மூன்று நிலைகளில் இருப்போர்கள் இருக்க முடியுமா?.  

ப்ரம்மச்சாரிக்கு கற்பிப்பதும், உணவளிப்பதும் இல்லறத்தான். இல்லையென்றால் குருகுலத்தில் உள்ள மாணவர் பட்டினிதான். மகன் இல்லறத்தில் ஈடுபட்ட பிறகுதான் அவன் பெற்றோர் வீட்டை விட்டு யாத்திரை செல்ல இயலும். வானப்ரஸ்தனாவதும் இல்லறத்தான் கையில் தான் உள்ளது. அவன் ஒழுங்காக இல்லையென்றால் அடுத்த ஊர் கோயிலுக்குக்கூட செல்ல இயலாது. இறுதியாக, துறவறத்தை எடுத்து கொள்வோம். துறவியோ இரந்து வாழ்பவன். இல்லறத்தோர் கொடுக்கவில்லையென்றால் அவன் உயிரோடு  வாழ்தலே கடினம். தவம் செய்வது அப்புறம். ஆக,  மற்ற மூன்று ஆஸ்ரமத்தோருக்கும் இல்லறத்தோன் தான் ஆதாரம் என்பது இந்து மதத்தின் தத்துவம். அதை திருவள்ளுவர் விளக்குகிறார்.

No comments: