குறள் 245 அதிகாரம் 25 அருளுடைமை
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
பொருள் : அருளினை க்கைக்கொண்டு வாழ்பவர்க்கு அல்லல் இல்லை. இந்த வளி மண்டலத்திலிருந்து வளங்கள் யாவையும் பெற்ற இவ்வுலகு இதற்கு சான்று.
இவ்வுலகு எப்படி தோன்றிற்று? வளி (காற்று செல்லும் ஊடகம்) புவியில் இருந்த நீரோடு கலந்து உயிரி்னத்தை தோற்றுவித்தது. வளி இல்லாத கிரகங்களில் உயிர் இல்லை. மஹாகவி பாரதியார் பாடுவார்
“உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.
உயிர்தான் காற்று. உயிர் பொருள், காற்று அதன் செய்கை.
பூமித்தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று.
காற்றே உயிர். அவன் உயிர்களை அழிப்பவன்.
காற்றே உயிர். எனவே, உயிர்கள் அழிவதில்லை.
சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது.
மரண மில்லை. அகில வுலகமும் உயிர் நிலையே.
தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் -- எல்லாம் உயிர்ச் செயல்.
உயிரை வாழ்த்துகின்றோம்.
காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது.
அவனைரிஷிகள் “ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம” என்று போற்றுகிறார்கள்.
ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.” (வசன கவிதை-காற்று)
தைத்திரீய உபனிஷத் போற்றுகிறது
நமோ ப்ரம்மணே நமஸ்தே வாயோ
த்வம் ஏவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மா அஸி த்வாம் ஏவ ப்ரத்யக்ஷம் ப்ரம்ம வதிஷ்யாமி
ருதம் வதிஷ்யாமி சத்யம் வதிஷ்யாமி
பரம்பொருளை வணங்குகிறேண். வாயுவே உன்னை வணங்க்குகிறேன். ஏனென்றால், நீ தான் கண்ணுக்கு தெரிகின்ற பரம்பொருள்
ஆம், அதை எல்லோருக்கும் அறிவிக்கிறேன். நீயே கண்ணுக்கு தெரிந்த பரம்பொருளாக உள்ளாய். உண்மை சொல்கிறேன். தெய்வீகமான நிரந்தர உண்மையை சொல்கிறேன்.
வளி வழங்கிய உலகம் நம் உலகம். இதில் உள்ள “எத்தனை கோடி இன்பங்களும்” வளி தந்தவை. அவன் அருளாளன். ஆனால், இவ்வுலகம் அந்த வளங்களோடு இன்பமாக இருக்கின்றதா? இல்லை பல பகுதிகளாக ப்பிரிந்து அடித்துக்கொள்கின்றதா? இதற்கு பதில் எல்லோருக்கும் தெரியும். சூது,வாது, துன்பம், சண்டை கலந்த இவ்வுலகத்தின் போராட்டங்களில் வளி அல்லல் படுவதில்லை. அது தன் இயல்பு மாறவும் இல்லை. கோணவும் இல்லை. கீதையில் கண்ணன் சொல்வது போல “நாம் வளியில் இருக்கிறோம். அது நம்மிடம் இல்லை”. அது போலத்தான் அருளாளர். அருளாளர்கள் நமக்கு அருளால் உந்தப்பட்டு எத்தனையோ செய்வார்கள். ஆனால், அதன் பின் அந்த அருளை வைத்துக்கொண்டு நாம் சுகமாக இருந்தாலும் சரி, சண்டை போட்டுக்கொண்டு அவதிப்பட்டாலும் சரி, அவர்கள் அல்லல் படுவதில்லை.
ஜனக மஹாராஜர் ஒரு அருளாளர். அரசராயிருந்த போதும் தினசரி பல புனிதர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மெய்ப்பொருளை உணர்ந்தவர். அவர் ஒரு நாள் தன் பரிவாரங்களோடு அருகில் இருந்த கானகத்துக்கு சென்று முனிவர்களை சந்தித்து வேதாந்த சாரத்தை ப்பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். அரசரோடு கூட அந்த அரசவையில் இருந்த பல துறவிகளும் கூட சென்றிருந்தனர்.
விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, நகரத்திலிருந்து ஓடி வந்த ஒரு வீரன் “ ஐயா, மஹாராஜா, மிதிலையில் பெரிய தீப்பற்றி எரிகிறது” என்று கத்திக்கொண்டே வந்தான். ஜனகர் பொறுமையாக “அதென்னாப்பா, முனிவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது மரியாதையில்லாமல் குறுக்கே நுழைகிறாய், அவர்களை வணங்கி விட்டு பேசுவது தான் முறை என்று உனக்கு தெரியாதா” என்று கேட்டார். கேட்டு திரும்பி பார்க்கிறார், கூட வந்த ஒரு சன்யாசியையும் காணோம். எல்லோரும் மிதிலை நகரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். ஜனகர் எந்த கவன சிதறலும் இல்லாமல் அமர்ந்திருந்தார்.
முனிவர் சொன்னார், “மன்னா, உன் மனம் எவ்வளவு பண்பட்டது? எல்லா சொத்துக்களும் உள்ள மிதிலையின் அரசன் நீ அல்லல் படாமல் முழுமையான கவனத்தோடு இருக்கிறாய். ஒரு கோவணம் தவிர வேறு எதுவும் இல்லாத பரதேசிகளோ நீ முந்தி நான் முந்தி என்று ஓடி க்கொண்டிருக்கின்றனரே !!” என்று அதிசயப்பட்டார்.
உலகம் வளியில் உள்ளது. வளி உலகத்தில் இல்லை.ஜனகர் மிதிலையில் இருந்தார். ஆனால், மிதிலை அவரிடம் இல்லை. அதனால் அல்லல் இல்லை.
No comments:
Post a Comment