பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
உரையாசிரியர்கள் தரும் பொருள்: குற்றம் இல்லாத நன்மையை த்தருமானால் பொய்மையும் வாய்மையின் இடத்தை ப்பெறும்.
இந்த க்குறள் ஒரு புதிர் போடுவது போல இருக்கிறது. பொய் சொல்லலாம் என்று வள்ளுவர் சொல்கிறார். ரொம்ப சந்தோஷம். ஆனால், “புரை தீர்ந்த” நன்மை கிடைக்கும் என்று உனக்கு தெரிந்தால் பொய் சொல். என்கிறார். அடாடா, நாம் பொய் சொல்லிவிடுவோமே? என்றால் ஒரு நிபந்தனை. “புரை இல்லாத” நன்மை விளைய வேண்டும். அது தான் நிபந்தனை. “புரை” என்றால் என்ன? “குற்றம்” என்று உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். Defect என்று அகராதியில் போட்டுள்ளனர். அதையே தான் நானும் மேலே எழுதியிருக்கிறேன். பிறகு யோஜித்தேன். குற்றம் இல்லாத நன்மை என்றால் என்ன? குற்றமுள்ள நன்மையை யாராவது நன்மை என்றூ ஒத்துக்கொள்வார்களா? ஒரு குடம் பாலில் ஒரு சொட்டுதான் விஷம் என்றால் அது பாலே இல்லையே. குற்றம் குற்றமில்லை என்பதை யார் நிர்ணயிப்பது? legally or morally?. குருக்ஷேத்திரத்தில், தர்மர், அச்வத்தாமா ஹத: குஞ்சர: (அச்வத்தாமன் இறந்தான்-அதாவது யானை)என்ற சொன்னதை legal ஆக சரி ஆனால் moral ஆக குற்றம் என்பார்கள். குற்றம் என்பதே ஆள்கின்ற வர்க்கத்தின் valuesஐ ப்பொறுத்து அமைகிறது என்று சிலர் கருத்து. திருவள்ளுவர் இந்த limitation ல் சிக்கிக்கொள்ள மாட்டார். வேறு பொருள் இருக்குமோ ? குற்றம் என்ற பொருளை விடுங்கள். புரை என்றால் குற்றம் என்பதைத்தவிர ரகசியம் என்றும் பொருள் உண்டு. (போல என்றும் பொருள் உண்டு-கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்- தேவாரம் ஆனால் அது இங்கு பொருத்தமாக இல்லை என்பதால் அதை விடுவோம்) புரையோடிப்போய்விட்ட புண் என்பார்கள். அதென்ன புண் குற்றமாகி விட்டதா ? இல்லை உள்ளார்ந்து போய் விட்டது. ரகசியமாக இருந்துவிட்டது என்று தான் பொருள். கண்ணில் புரை என்பார்கள். கண் லென்ஸில் உள்ளே சதை வளர்ந்ததாக கருதியதால் அதை புரை என்றனர். (இது அக்கால நம்பிக்கை. தற்போதைய மருத்துவர் இதைத் தவறு என்பார்கள்) குழந்தைக்கு பால் புரை ஏறி விட்டது என்பார்கள். வாயினின்றும் உணவுக்குழாயில் போகாமல் வெளியேயும் வராமல், நுரையீரலுக்குள் உள்ளே ஏறி விட்டது என்று பொருள். இங்கு திரு வள்ளுவர் என்ன சொல்கிறார் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். புரை தீர்ந்த என்றால் எந்த உள் இரகசியமும் இல்லாது வெளிப்படையாக, எல்லோருக்கும் தெரியும் படி நன்மை விளையுமானால் பொய் சொல். என்று சொல்லியிருக்கிறார். அதென்ன வெளிப்படையான நன்மை ? கணவன் மனைவியிடம் தன் அலுவலகத்தில் நடந்ததை ப்பற்றி பொய் சொல்கிறான். அல்லது மனைவி கணவனிடம் இல்லத்தில் நடந்ததை பற்றி பொய் சொல்கிறாள். அது அவள் நன்மைக்கு அல்லது அவன் நன்மைக்கு என்று வைத்துக்கொண்டாலும் அது ரஹசியமான நன்மை.அது ரகசியமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், “புரை தீர்ந்த “ என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே? நன்மை ஒருவனுக்கு மட்டும் இல்லை, குடும்பத்துக்கு இல்லை, வெளிப்படையாக ஒரு நாட்டுக்கே நன்மை விளையுமா? அப்போது பொய் சொல். அது வாய்மையாக கருதப்படும். இது வள்ளுவர் வாதம். இன்று diplomacy என்று சொல்வது இதைத்தான். ( இது என் கருத்து. தமிழ் அறிஞர்களோ, உரையாசிரியர்களோ பரிமேலழகர் கூட சொல்லவில்லை. அரை வேக்காடு பொடியன் நான் சொல்வது தவறாக இருக்கலாம்.) இதற்கு உதாரணம் !! உண்டே!! அதையும் பார்த்து விடுவோம்.
கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம். மலையுச்சியிலிருந்து வானரர் தொலைவில் ராமரும், லக்ஷ்மணரும் வருகின்றதை பார்க்கின்றனர். பார்த்தவுடன் சுக்ரீவன் முதல் எல்லோரும் “துண்டை க்காணோம், துணியை க்காணோம்” என்று ஓட ஆரம்பிக்கின்றனர். “வெவ்விடத்தனை மறுகு தேவர், தானவர்” (பாற்கடலில் விஷத்தை ப்பார்த்த தேவரும் அசுரரும் ஓடினாரே அது போல) போல ஓடுகின்றனர். இவ்வீரர்களை வாலிதான் அனுப்பியிருப்பான் என்று பயத்தில் அவர்கள் குகையில் ஒளிந்து கொள்ள ஓடும் போது அனுமன் அவர்களை நிறுத்தி விட்டு ஒரு வழியாக சமாதானப்படுத்தி நான் ராம லக்ஷ்மணரை ப்பார்த்து விவரம் அறிந்து வருகிறேன் என சொல்கிறார். ஒரு மாணவன் வடிவத்தில் வந்து அவர்களை ப்பற்றி தெரிந்து கொள்கிறார். வந்த காரணத்தை பிறகு கூறுகிறார்.
“இம்மலை இருந்து வாழும் அரசன்….. நும் வரவு நோக்கி விம்மல் உற்று அனையன் ஏவ வினவிய வந்தேன் “ அதாவது சுக்ரீவன் தங்கள் வரவினை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறான். அவன் என்னை உங்களை ப்பார்த்து வர சொல்லி ஏவினான். அதனால் வந்தேன்.” என்கிறார்
இது எந்த விதத்தில் வாய்மை? சுக்ரீவனோ ராமரை ப்பார்த்ததும் புறங்கால் முதுகில் பட ஓடுவதில் குறியாக இருந்ததை முதலில் பார்த்தோம் அல்லவா? அவனாவது ராம லக்ஷ்மணரை எதிர்பார்த்து இருப்பதாவது? அப்படியானால், அனுமன் சொன்னது உண்மைக்கு ப்புறம்பானதாக இருக்கிறதே!! அப்படி அவர் சொன்னது ஒரு பொதுவான நன்மைக்காக த்தான். இதனால்அனுமனுக்கு, அல்லது ராமருக்கு எந்த விதமான ரஹசியமான நன்மை எதுவும் இல்லை. வாலியை க்கண்டு பயந்து பயந்து வாழும் தன் சமூகத்தினர் வானரர் துயருக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், சுக்ரீவனுக்கு மனையாளையும் அரசையும், மானத்தையும் மீட்டுத்தரவேண்டும் என்று தான் ராமர் நட்பினை நாடி இவ்வாறு ஒரு அமைச்சராக அனுமன் கூறுகிறார். ராமர் சகலமும் தெரிந்தவர். அவருக்குத் தெரியாதா நடந்த்தது என்னவென்று ? ஆனால், அதை புரிந்து கொண்டு, ராமரும் அனுமனை மனத்தால் பாராட்டி , “யார் கொல் இச்சொல்லின் செல்வன்?” இவன் யார்? மாணவன் அல்லன். ப்ரம்மனோ? இல்லை சிவபிரானோ? இவன் பெருமை எனக்கு த்தெரிகிறது. நீயும் பின்னே அறிவாய்” என்று இலக்குவனிடம் அவரை பற்றி புகழ்கிறார். ராமர் சத்தியத்தை தன் ஆயுதமாகக்கொண்டவர். அவர் நிலைமை தெரிந்து பாராட்டுகிறார் என்றால் அனுமன் பேசியது புரை தீர்ந்த நன்மை பயக்கும் வார்த்தை. அது நிச்சயமாக வாய்மை தான்.
No comments:
Post a Comment