குறள் எண் 84 அதிகாரம் விருந்தோம்பல்
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
பொருள் : முகமலர்ச்சியோடு விருந்தினரை உபசரிப்பவர் இல்லத்தில் இலக்குமி மனமலர்ச்சியோடு அருள் புரிவாள்.
ஸ்ரீ பத்ம புராணத்தில் ஒரு கதை. முன்னொரு காலத்தில் ஒரு நகரத்தில் ஒரு பெண் வசித்து வந்தாள். அவள் பரம ஏழை. ஏமை தீர ஒரு வழியும் தெரியாமல் பலரை அணுகி அவர்கள் அறிவுரையை க்கேட்டாள். எல்லோரும் அவளை இலக்குமியை க்குறித்து சில பூஜைகளை செய்யுமாறு சொன்னார்கள். அவளும் அந்த பூஜைகளை செய்ய அவளுக்கு த்தெரிந்த ஒரு பண்டிதரை அணுகினாள். பண்டிதர் சொன்னார் “நீ செல்வம் வேண்டி இலக்குமியை க்குறித்து பூஜைகளை நடத்தினால் நிச்சயம் உனக்கு நன்மை நடக்கும், அம்மா. ஆனால், அந்த ப்பூஜைகள் நடத்திக்கொடுக்க நான் உன் வீட்டுக்கு வர வேண்டுமென்றால் எனக்கு தக்ஷிணை கொடுக்க வெண்டாமா? நான் பணக்காரர்கள் வீட்டுக்கெல்லாம் செல்பவன். ஆகையால் எனக்கு த்தர வேண்டிய தக்ஷிணையும் அதிகமாக இருக்கும். உன்னிடமோ அதற்கு த்தேவையான பணம் இல்லை. நான் என்ன செய்வது?” என்று கையை விரித்துவிட்டார். அவள் பெருத்த ஏமாற்றத்தோடு இல்லம் வந்தாள். பண்டிதரை த்தான் அணுக முடியவில்லை. நாமே ஏதாவது இலக்குமிக்கு படைக்கலாம் என்ற எண்ணத்தோடு ஒரே ஒரு வாழைப்பழத்தை தேவியின் படம் முன்பு எடுத்து வைத்தாள். மாலை நேரம். இஅல்க்குமிக்கு உகந்த வேளை. படைப்பதற்கு முன், அவள் இல்லம் முன்பு ஒரு முதிய பெண்மணி வந்தாள். முன் பின் பார்த்திராத ஒரு பெண்மணி. “ அம்மா, எனக்கு பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக்கொடேன்” என்று அவளை ப்பார்த்து கெஞ்சாத குறையாக கேட்டாள். இப்பெண்மணியிடமோ எதுவும் இல்லை. பூஜைக்கென வைத்திருந்த ஒரு வாழைப்பழத்தை தவிர. அதைக்கொடுத்தால் இலக்குமிக்கு படைக்க முடியாது. வந்த விருந்தினரை இல்லை என்று சொல்லி அனுப்பவும் முடியாது. முடிவில், படத்துகு முன் வைத்திருந்த பழத்தை அந்த முதியவளுக்கு கொடுத்து விட்டு “ அம்மா, என்னிடம் வேறு எதுவும் இல்லை. இதுவும் இலக்குமிக்காக நிவேதனமாக வைத்திருந்தேன். நிவேதனம் செய்து விட்டு நானும் சாப்பிடுவதாக இருந்தேன். மாலை நேரத்தில் என் வீட்டு முன் வந்து கேட்கிறீர்கள். ஆகவே, இதுதான் நான் இப்போது உங்களுக்கு தர முடியும். எடுத்துகொள்ளுங்க்கள். தயவு செய்து இதை சாப்பிட்டு பசியாறுங்கள்”. என்றாள். அதை க்கேட்ட முதிய பெண்மணியோ “என்னம்மா, பூஜைக்கு வைத்திருந்த பழத்தை கொடுக்கிறாய்” என்று கூறவும், “இல்லை, அம்மா, இலக்குமிக்கு நாளை படைப்பேன்” என்று கூறினாள். இதைக்கேட்ட முதியவள் சிரித்து விட்டு “ நீ இலக்குமிக்கு த்தான் பூஜை செய்திருக்கிறாய். நான் வேறு யாருமில்லை. நீ தேடும் இலக்குமிதான். உன் விருந்தோம்பலை மெச்சினேன். உன் இல்லத்தில் இனி ஒரு குறைவும் வராது” என்று சொல்லி மறைந்ததாக கதை வருகிறது.
இக்குறள் படிக்கும் சமயம் இக்கதை நினைவுக்கு வருவதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.
No comments:
Post a Comment