குறள் 336 அதிகாரம் 34 நிலையாமை
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
பொருள் : நேற்று இருந்தவன் இன்று இல்லை இறந்து விட்டான் என்ற பெருமை உடையது இந்த உலகம்.
நம்மில் பலர் நிலையாமை என்பதையே உணராமல் தான் இருக்கிறோம். நம்மை விடுங்கள். அறிவிலிகள் என்று சொல்லி விடலாம். பெரிய பெரிய மனிதர் கூட தாங்கள் என்றும் இருப்போம் என்று நினைத்து த்தான் ஊரை யடித்து உலையில் போடுகிறார்கள்.
ஒரு சமயம் தர்மர் தன் அரசவையில் அமர்ந்து எல்லாப்பணிகளையும் கவனித்து முடித்த பின் தன் இருப்பிடம் செல்வதற்காக தம்பிகள் அர்ஜுனன், பீமன் புடை சூழ எழுந்தார். பத்தடி நடப்பதற்குள் , அப்போது அங்கே ஓடி வந்த ஒரு வயதான ஏழை மனிதன் “ ஐயா, அரசரே, நான் பரம ஏழை. எனக்கு எதாவது தானம் கொடுங்க. மஹாராஜா” என்று கத்திக்கொண்டே காலில் விழுந்தான். தர்மருக்கு அப்போது தன் இருப்பிடம் செல்ல அவசரம்.
“அடாடா, இன்று நேரமாகி விட்டதே, ஒன்று செய்யுங்கள், பெரியவரே, நாளை வாருங்கள். நீங்க வசதியா வாழற அளவுக்கு தானம் கொடுக்கறேன்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார். இதை ப்பார்த்து க்கொண்டிருந்த பீமன் உடனே ஓடி சென்று காவலர்களை அழைத்தார்.
“ காவலர்களே, நம் அரண்மனையில் உள்ள தண்டோரா போடுபவர்களை அழைத்து வாருங்கள். ஒரு முக்கியமான அறிவிப்பு. எல்லா மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்” என்றான். தர்மருக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் எதுவும் சொல்லவேஇல்லையே, இவன் என்ன புதிதாக ஏதோ ஆரம்பிக்கறானே?” என்று யோஜித்தார். அதற்குள் தண்டோரா போடுபவர்கள் வந்தனர். “ மஹராஜா, வணக்கமுங்க” என்று சொல்லி ஆணையை எதிர்பார்த்து நின்றனர்.
பீமன் சொன்னான் “ இங்க பாருங்க, இப்பவே போய் நான் சொல்றதை எல்லா திசையிலும் போய் தண்டோரா போடுங்க.”
“சரிங்க என்ன அறிவிப்பு, எசமான்” என்று காதுகளை தீட்டிக்கொண்டு நின்றனர்.
பீமன் சொன்னான், சொல்றேன். கேட்டுக்குங்க “ இது மூலம் பொது ஜனங்களுக்கு தெரிவிக்கறது என்னவென்றால், மகராஜா தர்மர் இந்த உலகத்தின் சர்வ வல்லமை பொருந்திய சர்வேஸ்வரன் ஆகி விட்டார். அவருக்கு முக்காலமும் தெரியும். அவரை வெல்பவரும் இல்லை. எதிர்ப்பவரும் இல்லை” என்றான்.
தர்மர் குழப்பமடைந்தார். என்ன சொல்கிறான் பீமன்? “ தம்பி, நீ என்ன சொல்கிறாய், நான் எப்பொழுதாவது இது போல சொல்லியிருக்கிறேனா? நீ ஏன் இப்படி அவர்களை க்கூப்பிட்டு அறிவிக்கிறாய்? எனக்கு சிறிது புரிய வை”. என்றார்.
பீமன் சிரித்தான் “ அண்ணா, நீங்கள் என்ன இப்படி மறதி ஆக இருக்கிறீர்கள் ? இப்போது அந்த வறியவருக்கு பதில் சொல்லும்போது என்ன சொன்னீர்கள்?” என்றான்.
“ எனக்கென்னப்பா மறதி? நாளை காலை வாருங்கள் தானம் தருகிறேன் என்று சொன்னேன். அதற்கும் நீ சொல்வதற்கும் என்னப்பா சம்பந்தம்?” என்றார் தருமர்.
பீமன் சொன்னான் “ அதை தான் நானும் சொல்கிறேன்,அண்ணா. நீங்களோ வாக்கு மாறாதவர். சத்தியம் தவறாதவர். அதனால் நீங்கள் சொன்னால் நிச்சயம் நடக்கும்”
“சரி, அதற்கென்ன இப்ப”
“ எப்போது நீங்கள் நாளை வா என்று சொன்னீர்களோ அப்போது பல விஷயங்கள் எனக்கு நிச்சயம் ஆகி விட்டது. ஒன்று: அந்த ஏழை நாளை உயிரோடிருப்பான். இரண்டு நீங்க உயிரோட இருப்பீங்க. மூன்றாவது, நீங்க இந்த ராஜ்யத்துக்கு அரசராக இருப்பீங்க. ஏன்னா அப்ப தான் தானம் தர முடியும். நாலாவது அவன் வறியனாகத்தான் இருப்பான். அப்ப தான் அவன் வருவான். இந்த உலகத்திலே யாரு எங்க அடுத்த கணம் எப்படி இருப்பான் அப்படின்னு சொல்லமுடியாத போது , இவ்வளவு நிச்சயமா எதிர்காலத்தை பத்தி சொல்லணும்னா, அது சர்வேச்வரனாகத்தான் இருக்க முடியும். அதுதான் சொன்னேன்” என்றான் பீமன்.
தருமர்க்கு பீமன் தன்னை இடித்துரைக்கிறான் என்று புரிந்தது. என்னதான் இருந்தாலும் அவர் தருமர் இல்லையா? ஆதலால், உடனே தன்னை திருத்திக்கொண்டார். “ புரிந்தது தம்பி, நல்ல காரியத்தை காலம் தாழ்த்தக்கூடாது. தோன்றியவுடன் செய்யவேண்டும். அதைத்தான் சொல்ல வருகிறாய், இல்லையா ? சரி, இவங்களையெல்லாம் போக சொல்லு. அந்த ஏழையை க்கூப்பிட சொல்லு. நம்ம தானம் கொடுத்து அனுப்பிடுவோம்” என்றார்.
இங்க பாருங்க, தருமபுத்திரர் மாதிரி ஒரு மானுடன் கிடைக்க மாட்டான். உடலுடன் சொர்க்கத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரே ஆள் அவர். உள்ளத்தினாலும், உடலினாலும் பாவம் பண்ணாதவர். ஆனால், அவருக்கே நிலையாமை என்ற விஷயம் ஒரு கண நேரம் மறந்திருக்கிறது. அதனால் தான் அதை இவ்வுலகத்தின் பெருமை என்று வள்ளுவர் சொன்னாரோ?
No comments:
Post a Comment