Friday, December 30, 2016

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-10

குறள் 167 அதிகாரம் 17 அழுக்காறாமை

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.  


பொருள் :  பொறாமை இருப்பவனிடமிருந்து திருமகள் விலகி மூத்தவளை அவனிடம் செல் என்று காட்டி விடுவாள்.


அழுக்காறு என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவன் துரியோதனன். (இதற்கு அவனை ப்பார்த்து பொறாமை ப்படலாம்) ஒன்றும் இல்லாத ஏழைகள் மற்றவரை ப்பார்த்து பொறாமை படுவதென்பது இயற்கை. ஆனால், எல்லா செல்வங்களும் இருந்தும் துரியோதனன் தருமரைப்பார்த்து பொறாமை பட்டான். அவன் செல்வத்தை பாருங்கள்


‘‘எண்ணிலாத பொருளின் குவையும்
யாங்கணும் செலும் சக்கர மாண்பும்
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாமோர்
வார்கடல் பெருஞ்சேனையும் ஆங்கே
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று
வேண்டும் இன்பமும் பெற்றவன்’’ -


என்று பாஞ்சாலி சபதத்தில் துரியோதனனை ப்பற்றி பாரதியார் கூறுவார். இந்திரன் போன்ற பெருமை கொண்டவன் அவன். ஆனால், அவனுக்கென்னவோ பிறந்ததிலிருந்து பாண்டவரை பார்த்தால் வயத்தெரிச்சல். சிறு வயதில்  பீமன் சாப்பிடுவதைக்கண்டால் பொறாமை.விஷம் வைத்தான். அர்ஜுனன் குருவிடம் நல்ல பெயர் வாங்கினால்  பொறாமை. பாஞ்சாலி அவர்களுக்கு கிடைத்தது பொறாமை. தருமனுக்கு முடி சூட்டினால் பொறாமை. அவன் யாகம் வளர்த்தால் பொறாமை. கண்ணன் அவர்களுக்கு ஆதரவாகி விட்டானே என்று பொறாமை. சொல்கிறான் பாருங்கள்


“பேச்சை வளர்த்து பயனொன்றுமில்லை- என் மாமனே அவர்கள்
பேற்றையழிக்க உபாயம் சொல்லுவாய் - என் மாமனே”


என்று சூதாட அழைத்தது பொறாமையினால் தானே !!


பொறாமையினால் பாண்டவருக்கு ஐந்து வீடுகள் கூடத்தரமாட்டேன் என்று சொன்னதால் போர் மூண்டது. கடைசியில் போர் முனையில் நிற்கும் போது கூட  சொல்கிறான்,


அபர்யாப்தம் தத் அஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
பர்யாப்தம் த்விதம் ஏதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் - பகவத் கீதை அத்தியாயம் 1 ச்லோகம் 10.


“பீஷ்மரால் காக்கப்படுகின்ற எனது சேனை போதுமானதாக இல்லை. ஆனால், பீமனால் காக்கப்படுகின்ற அவர்களது சேனையோ போதுமான அளவு உள்ளது.” என்று அங்கும் வயத்தெரிச்சல் படுகிறான் என்றால் பாருங்களேன்.

துரியோதனனை யாரும் கொல்லவில்லை. திருமகள் அவனிடம் உள்ள பொறாமையால் வெறுப்புற்று அவனை விட்டு நீங்கினாள். மூத்தவள் வந்து அமர்ந்தாள். அழிவு வந்தது. இதுதான் உண்மை.இதைத்தான் தெய்வப்புலவர் சொன்னார்.

No comments: