Thursday, December 29, 2016

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்- 1


திருக்குறள் எண் 37. அதிகாரம் 3. அறன் வலியுறுத்தல். 

குறள்: 
 "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
 பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை ." 

இக்குறளின் பொருள். பல்லக்கின் மேலே ஒருவன் செல்கிறான். ஒருவன் கீழே ஒருவன் சுமக்கிறான். இவர்களிடம் இது அறத்தின் போக்கு , அதன் விளைவு இது என்று சொல்ல வேண்டாம் என்பது போல மேலோட்டமாக தோன்றுகிறது. 

சரி,  திருவள்ளுவருக்கு வேறு உவமையே கிடைக்கவில்லையா ? ஒருவன் பசியோடு இருக்கிறான். அதை சொல்லலாமே? ஒருவன் தெருவில் அலைகிறான். மற்றொருவன் அரண்மனையில் இருக்கிறான். இப்படி சொல்லலாமே. ஆனால் திருவள்ளுவர் இவற்றை விடுத்து சிவிகை மேலூர்ந்தான் பற்றி நமக்கு நினைவுறுத்தும் காரணம். உண்டு. அதை பார்ப்போம்.மிகப் பழைய நூலான தேவி பாகவதத்தில் நகுஷன் என்ற அரசன் பற்றி ஒரு கதை உண்டு. நகுஷனின் மனைவி சசி தேவி " நீங்கள் சப்த ரிஷிகளும் பல்லக்கு தூக்கி வர அதில் அமர்ந்து வந்தால் தான் நான் உங்களை ப்பார்ப்பேன்" என்று ஒரு நாள்  சொல்ல அந்த மூடனும் சப்த ரிஷிகளையும் இழுத்து வந்து தன் பல்லக்கை சுமக்க வைத்து அதன் மேல் அமர்ந்து சசியை ப்பார்க்க பயணித்தான். கீழே முற்றும் துறந்த முனிவர்கள் உடல் நோக கால்கள் தள்ளாட செல்கிறார்கள். மேலே காமுகன் நகுஷன் கொக்கரிக்கிறான். அது மட்டும் அல்ல. அகஸ்தியர் குள்ளமானவர். அவரால் மற்ற ரிஷிகளுக்கு ஈடாக நடக்க முடியவில்லை. அதனால்  பல்லக்கு மெதுவாக போகிறது. நகுஷனுக்கு அவசரம். காதலி சசியை ப்பார்க்க வேண்டும் என்ற காம வெறி. திமிரினால் அகஸ்தியரை குச்சியால் நிமிண்டினான். "சர்ப்ப, சர்ப்ப" என்று துரிதப்படுத்தினான். சர்ப்ப என்றால் சீக்கிரம் என்றும் பொருள். அகஸ்தியர் அப்போது  வெகுண்டெழுந்து " பாவி ஸர்ப்ப என்றாயே, நீ ஒரு பாம்பாக போ' என்று சபித்தாராம். இக்கதை  திருவள்ளுவருக்கு வியப்பாக இருந்திருக்கிறது. அறன் உயர்ந்தது என்று சொல்ல வருகிறோமே, இங்கு எந்த ப்பாவமும் செய்யாத அறனே உருவான சப்த ரிஷிகள் பல்லக்கு சுமக்கிறார்கள். பாவம் செய்த அரசனோ மேலே உட்கார்ந்திருக்கிறான். இது என்ன அறம் ? இங்கு இது தான் நீ செய்த வினையின் விளைவு என்று முனிவரை பார்த்து சொல்ல முடியுமா ? திருவள்ளுவர் சிவிகை மேல் ஊர்ந்தான் என்பார். ரிஷிகளுக்கு சுமக்க இயலவில்லை. மெதுவாக பல்லக்கு ஊர்கிறது. அது போகட்டும். அரசனே பாம்பாக மாறப்போவது தெரிந்தவர் போல அவன் ஊர்ந்தான் என்பார். பாம்பு தான் ஊரும். புராணக்கதைகளை அறியாமல் திருக்குறள் படித்தால் பொருள் விளங்குவது கடினம். இது ஒரு உதாரணம். 

No comments: