Friday, December 30, 2016

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்- 9

குறள் எண் 121 அதிகாரம் அடக்கமுடைமை


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.


பொருள் ஒருவன் அடக்கமுடைமையாவனாக இருப்பின் அவன் அமரரில் ஒருவனாக கருதப்படுவான். அடங்காமை உள்ளவனாக இருந்தால் நரகத்துக்கு செல்ல வேண்டியது தான்.


அடக்கம் என்ற சொல்லுக்கு பொருளாக திகழ்பவர் அனுமன். அடங்காமை என்ற சொல்லுக்கு பொருளாக திகழ்பவன் ராவணன். மேற்கொண்டு என்ன சொல்ல இருக்கிறது?


அனுமன் தேவர் குலத்தில் தோன்றவில்லை. இந்திரன், வருணன்,அக்கினி இவர்கள் போல அமுதம் உண்டு வானுலகில் சுகமாக வசித்தவர் அல்ல. காட்டில் கிழங்குகளையும், கனிகளையும் புசித்து குகைகளில் வாழும் வானரர் குலம். ஆனால், தேவர்கள் அதிசயிக்கும் படி ஒரு குணக்குன்றாக தன் பணிகளை செய்து காட்டியவர். அதன் மூலம் எல்லோர் நன்மதிப்பையும் பெற்றவர்.  ராமர் மீது கூட முயற்சி செய்தால் ஏதாவது குறை காணலாம். ஆனால் அனுமன் மீது பூதக்கண்ணாடி வைத்து தேடி ப்பார்த்தாலும் ஒரு குறையும் காண முடியாது.              கம்ப ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அனுமன் நமக்கு முதன் முதல் அறிமுகம் ஆகிறார். அவர் அறிமுகம் ஆகும் போதே கவி சக்ரவர்த்தி கம்பர் அவர் அடக்கம் உருவானவர் என்பாதை தெளிவாக பின்வருமாறு காட்டுகிறார். அதை பாருங்கள். வருஷக்கணக்கில் அனுமன் அந்த காட்டில் வசித்து வருகிறார். அப்போது ராமர், லக்‌ஷ்மணர் சீதாப்பிராட்டியாரை தேடி அங்கு நுழைகிறார்கள். அனுமன் முதன் முதலில் காட்டில் வில்லையேந்தி நடந்து வரும் ராம லக்ஷ்மணரை பார்க்கிறார். ராம லக்ஷ்மணர் யார் என்று தெரியாத நிலையில் தான் வசிக்கும் இடத்தில் சுதந்திரமாக நுழபவரை நியாயமாக, “ நீங்கள் யார்?” என்று தானே கேட்கவேண்டும்? அப்படி அவர் கேட்கவில்லை.  எப்படி கேட்கிறார் பாருங்கள்
“யார் என விளம்புகேன்? “  
ஒரு பெரியவரை சந்திக்கும் போது எவ்வளவு தன்னடக்கத்தோடு பேச வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். என் அரசன் “ நோன்மை சால் கவி அரசு” சுக்ரீவன் கேட்டால் நான் தங்களை ப்பற்றி யார், என்னவென்று உரைப்பது?” என்று சொல்வதாக கம்பர் சொல்லுவார்.  


வாலி வதம் ஆன பின் சுக்ரீவன் முடி சூட்டு விழா நடக்கிறது. எல்லோரும் ராமரோடு வருகிறார்கள். ராமர் சுக்ரீவனை கிஷ்கிந்தை சென்று அரசாள்வாய் என்று அனுப்பி விட்டு கானகத்தில் தன் இருப்பிடத்தில் அமர்கிறார்.  அப்போது அனுமன் ராமரை ப்பார்த்து சொல்வார் “ இத்தலை இருந்து நாயேன், ஏயின எனக்குத்தக்க கைத்தொழில் செய்வேன்” (நான் இங்கேயே இருக்கிறேன். எதாவது வேலை கொடுங்கள்) ஒரு மந்திரியாயிருப்பவருக்கு எவ்வளவு அடக்கம்?. ஆனால், ராமர் “ தருமம் தானே போன்ற நீ யானே வேண்ட அத்தலை போதி” என்று அரசில் நீ முக்கிய பதவி வகிக்கிறாய். நான் வேண்டுகிறேன். கிளம்பு கிஷ்கிந்தைக்கு”  என்று நினைவுறுத்திய பின் தான் அங்கே செல்கிறார்.


சுந்தர காண்டத்தில்   சீதைப்பிராட்டியாரிடம் தன்னை ப்பற்றி சொல்ல வேண்டிய நேரம். வானரர்கள் சேனையிலேயே மஹத்தான சக்தி படைத்தவர் அனுமான். அவர் தன்னை ப்பற்றி சொல்லிக்கொள்வதை க்கேளுங்கள் “ வானரத்தின் எண்ணற்க படைத்தலைவர் ராமர்க்கு அடியார், யான் அவர் தம் பண்ணைக்கு ஒருவன் எனப்போந்தேன்” வானரப்படை த்தலைவர்  கணக்கிடாத கடல் மணல் போல எவ்வளவோ பேர் இருக்கிறார்களாம். அனுமன் அவர்களில் ஒருவராம். எப்படி தன்னடக்கமாக சொல்கிறார் பாருங்கள். வால்மீகி ராமாயணத்திலும் சீதையிடம் பேசும்போது அனுமன் தன்னை எல்லா வானரர்க்குள்ளும் மிக மிக வலிமையற்ற வானரன் என்று சொல்வதாக வரும்.    


மத்த ப்ரத்யவர கச்சித் ந அஸ்தி சுக்ரீவ சன்னிதௌ -வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் சர்க்கம் 38 ச்லோகம் 39. ( என்னை க்காட்டிலும் கீழான எவரும் சுக்ரீவனின் படையில் இல்லை. அதாவது என்னை விட மேலோர் தான் உள்ளனர்). இந்த இடத்தை வர்ணிக்கும் போது நமது பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரைட் ஆனரபிள் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் அனுமன் சொல்வதை “unfiltered lie” என்று மேடை பேச்சின் நயத்தோடு வேடிக்கையாகக் கூறுவார் !! (Lectures on Ramayana by V S Srinivasa Sastri)
இது போல அடக்கத்துக்கு உருவானவர் அனுமன் மற்ற தேவர்கள் அழியும் போது கூட சிரஞ்சீவியாயிருப்பார் என ராமரால் ஆசீர்வதிக்கப்பட்டார். அமரருள் உய்க்கும் என்பதை நிரூபித்து விட்டார்.


அடங்காமை என்பதை தன் குணமாக கொண்டவன் ராவணன். பல இடங்களில் இந்த குணம் வெளிப்படுவதை க்காணலாம். ஒரே ஒரு இடம் பார்க்கலாம். ராவணனின் சபை. இந்திரஜித் அனுமனைப் பிடித்து வருகிறான். பேச வாய்ப்பு கிடைத்த உடன், சீதையை தந்து விடு என்று அதற்கு ஆதாரமாக பல் வேறு குறிப்புகளை அனுமன் சொல்கிறார். சொன்னவுடன் ராவணன் “இவை சொல்லியது எற்கு ஒரு குன்றில் வாழும் குரங்கு கொல் ஆம், இது நன்று நன்று என மா நகை செய்தான்” என்று (எனக்கு இந்த விஷயங்களை எல்லாம் மலையில் வாழும் ஒரு குரங்கு சொல்கிறது பாருங்கள்) சொல்லின் செல்வன் அனுமனையே எள்ளி நகையாடியதாக கம்பர் சொல்கிறார்.  

இது போல் அவன் துள்ளியதால் அவன் கதை என்ன ஆயிற்று என்று நமக்கு தெரியும். ஆரிருள் தான் அவன் கதி.

No comments: