Friday, December 30, 2016

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-21

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

பொருள் : இறைவன் திருவடியை ப்பிடித்து க்கொண்டவருக்கு மற்ற இவ்வுலக பற்றுகள் தானே விலகும்.


ஸ்வாமி சின்மயானந்தர் அவர்கள் மும்பையில் தனது பவ்வாய் ஆசிரமத்தில் ஞான யக் ஞம் என்ற தலைப்பில் சொற்பொழிவுகள் செய்வார். அவற்றை க்கேட்கும் நற்பேறு எனக்கு கிடைத்தது. அப்போது ஒரு நாள் கீதை ஒன்பதாம் அத்தியாயம் பற்றி விளக்கும்போது இந்து மதம் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு விடை அளிக்க முற்பட்டார். மாத்துங்கா ரயில் நிலயத்தில் சபர்பன் ரயிலில் கூட்டத்தில் எப்படி ஏறுகிறீர்கள்? அது தான் இந்து மதம் என்றாரே பார்ப்போம். காலை 9 மணிக்கு மாத்துங்காவில் பீக் அவரில் ரயில் ஏறுவது என்பது எளிது அல்ல. நேரம் மிக குறைவு. எப்படியாவது முண்டி அடித்து ஏறி விட வேண்டும். மும்பைக்கு புதிதாக வருபவர் திகைத்து நிற்பர். இதற்கு ஒரு டெக்னிக் உண்டு. முதலில்  ரயிலில் யாராவது ஒருவரின் கையையோ பையையோ பிடித்து க்கொள்ள வேண்டும். பிறகு காலை மெதுவாக பிளா ட்பாரத்திலிருந்து எடுத்து விட வேண்டும். ஒரு கணம் தான்,  நாம் ரயிலுக்குள் வந்து விடுவோம். இதை சின்மயானந்தர் attachment detachment என்றார். Detachment மட்டும் அல்ல இந்து மதம். இருப்பதையும் விட்டு விட்டால் எங்கே போவது? முதலில் இறைவனின் திருவடியை பிடி. பிறகு உலகப்பற்றை விடு என்பது தான் அவர் அறிவுரை. இது தெரியாமல் பலர் நான் உலகப்பற்றை விடுகிறேன் என்று துவங்கி வழி மாறி ப்போய் விடுவதை பார்க்கிறோம்.
இதற்கு நல்ல உதாரணம் துருவன்.  உத்தானபாதன் என்ற அரசருக்கு இரு மனைவிகள்.  சுநீதி முதல் மனைவி. சுருசி இரண்டாவது மனைவி. சுனீதியின் மகன் துருவன். சுருசியின் மகன் உத்தமன். ஒரு நாள் அரசன் சுருசியோடும் உத்தமனோடும் தனித்திருக்கும் போது அங்கு வந்த 5 வயதுக் குழந்தை துருவன் தானும் தந்தை மடியின் மேல் உட்கார முயன்றான். அதனை க்காணப்பொறுக்காத சுருசி அவனை தள்ளி விட்டு விட்டு “ அப்பா மடி மேல் நீ ஏற வேண்டும் என்றால் என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்” என்று கடும் சொற்களால் சாடினாள். அழுது கொண்டே வரும் துருவனை அவன் அன்னை சுனீதி அவனை த்தேற்றி “அப்பா, நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான். அப்பாவுக்கோ சித்தி மீதுதான் பிரியம். நீயோ என் மகன். அதனால் தான் இப்படி கடும் சொற்களை நீ கேட்க வேண்டியதிருக்கிறது.” என்று சொன்னாள். துருவன் விடவில்லை,” இல்லையம்மா, இந்த நிலை மாற வேண்டும். எனக்கும் அப்பா மடி மேல் உட்கார வேண்டும். “ என்று பிடிவாதம் பிடிக்கவே சுனீதி, “ கண்ணா, அது நிச்சயம் நடக்கும். நாராயணரை வேண்டு” என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தாள்.” நாராயணர் எங்கு இருப்பார்?” அடுத்த கேள்வி. “ சரி தான் போ, அது எனக்கென்ன தெரியும்? காட்டில் தவம் செய்கிறார்களே, முனிவர்கள், அவர்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம்” என்றூ சொல்லி தூ ங்க வைத்தாள். துருவன் தூங்கிவிட்டதைப்போல் நடித்து விட்டு,  அம்மா துயின்றதும் அறையை விட்டு நழுவினான். நள்ளிரவு, குழந்தை துருவன் அரண்மனையிலிருந்தும் கிளம்பி காட்டுக்கு நாராயணனை த்தேடி சென்றான். அங்கு அவன் அதிர்ஷ்டம் சப்த ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தனர். ஒரு ஐந்து வயது பாலகன் இந்த நள்ளிரவில் காட்டுக்குள் தனியாக வருவது கண்டு அவர்களுக்கு அதிசயம்.”யாரப்பா, நீ தனியாக எதற்கு காட்டுக்குள் வருகிறாய்?” என்று அவர்கள் அன்புடன் கேட்டார்கள். துருவன் எல்லா விவரத்தையும் சொல்லி இதற்கெல்லாம் தீர்வு காண நாராயணரை பார்த்தே ஆக வேண்டும் என்ற தன் உறுதியை தெரிவித்தான். ரிஷிகளுக்கு ஆச்சரியம். இத்தனை சின்ன வயதில் இவ்வளவு உறுதியா? என்று வியந்த படி “ சரி, துருவா, நீ இங்கு அமர்ந்து ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரத்தை விடாமல் சொல்லி வா. நிச்சயம் நாராயணர் வருவார்” என்று சொல்லி விட்டு புறப்பட்டார்கள். துருவன் அவர்களை நிறுத்தினான் ”ஒரு நிமிஷம் இருங்கள். நாராயணர் எப்படி இருப்பார்? அதையும் சொல்லுங்கள். அப்போது தானே  என் தவத்தின் பயனாக அவர் வரும்போது யார் என்று எனக்கு அடையாளம் தெரியும்?” என்றான். ரிஷிகள் தங்கள் மனத்துள் அவனை மெச்சியவாறே “ அதென்னப்பா, பெரிய விஷயம். சங்கு, சக்கரம் வைத்திருப்பார். மார்பில் கௌஸ்துப மணி, இடுப்பில் பட்டு பீதாம்பரம், நீளமாக மிக அழகான மாலை எல்லாம் அணிந்திருப்பார். போதுமா?’ என்று விளக்கி விட்டு சென்றார்கள். அதற்குப்பிறகு ஐந்து மாதம் துருவன் தவம் செய்தான். முதலில் காய், கனி சாப்பிட்டவன் ஐந்தாவது மாதம் எதையும் உட்கொள்ளவில்லை. பெருமாள் எப்படி பொறுப்பார்? உடனே அவன் முன் தோன்றினார். “ துருவா கண்ணைத்திறந்து பார். நான் தான் நாராயணன் வந்திருக்கிறேன்” என்றார். துருவன் கண்ணை த்திறந்து பார்த்தான். ஸ்வாமி மாலை அணியாமல் வந்து விட்டார். துருவன் “இல்லை, நீங்கள் நாராயணன் இல்லை. மாலை எங்க்கே? என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் கண்ணை மூடி க்கொள் என்று சொல்லி ஒரு நிமிடத்தில் சங்கு, சக்கரத்துடன், கௌஸ்துப மணீ, பட்டு பீதாம்பரம் எல்லாம் அணிந்து கொண்டிருக்கிறாரா என்று முழுவதும் ஒரு முறை சரி பார்த்து விட்டு” ஸ்வாமி’ என்றூ காலில் விழுந்தான். “ குழந்தாய், இனிமேளும் இப்படி உன்னை வருத்தி க்கொள்ளாதே. உனக்கு என்ன வேண்டும்? கேள்” என்றார். துருவனுக்கு அப்போது தான் எதற்கு வந்தோம் என்று மறந்து விட்டது. இறைவன் வந்த வுடன் மற்ற பற்றுகள் தாமே விலகி விடும் அல்லவா? “ யோஜிக்கிறான். பிறகு, “ ஸ்வாமி, எனக்கு எதுவும் வேண்டாம். உங்களை மறக்காமல் இருக்க அருள் புரிய வேண்டும்” என்றான். பெருமாள் சிரித்தார். அவருக்கு மறக்கவில்லை. “ துருவா, நீ முதலில் உன் வீட்டுக்கு செல். உனக்கு அரசனின் அன்பு மட்டும் அல்ல. அரச பதவியும் கிடைக்கும். அரசாண்ட பின் உன் பெருமை என்றும் எல்லோருக்கும் தெரியும் வண்ணம் துருவ நக்ஷத்திரமாக சுடர் விடுவாய்” என்று வரம் தந்தார்.

துருவன் ஐந்து வயதில் இறைவனை பற்றினான் என்பதும் அந்த பற்று வலிமையோடு இருந்ததால் மற்ற பற்றுகள் விலகின என்பதும் இக்கதையிலிருந்து குறளுக்கு  கிடைக்கும் விளக்கம்.

No comments: