Friday, December 30, 2016

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்- 8

குறள் 118 அதிகாரம் நடுவு நிலைமை


சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.


எப்படி தராசு தான் சமமாய் இருந்து பிறகு இரு பக்கத்தையும் எடை போட்டு பார்த்து சொல்கிறதோ அது போல பெரியவர்கள் எந்த விஷயத்திலும் தீர்வு க்காணும்போது ஒரு பக்கமாக சாய மாட்டார்கள்.


இதற்கென ஒரு கதை உள்ளது. பல வருடம் முன்னர், கொங்கணர் என்றொரு ரிஷி பல வருடம் காட்டில் அமர்ந்து கடும் தவம் செய்தார். ஒரு நாள் தவத்திலிருந்து எழுந்து கண் விழித்து பார்த்தார். தன் தவத்தின் பலன் என்ன என்று தெரிந்து கொள்ள அவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. யாரை ப்போய் கேட்பது என்று யோஜித்துக்கொண்டே எழுந்து நடந்தார். அவர் எழுந்து நாலடி தான் நடந்திருப்பார். மேலிருந்து ஒரு பறவையின் எச்சம் அவர் தலை மேல் வந்து விழுந்தது. அண்ணாந்து பார்த்தார் கொண்கணர். ஒரு கொக்கு அதன் பாட்டில் பறந்து கொண்டிருந்தது. “ அடே! கொக்கே !! நான் யார் என்று அறிவாயா ? என் மேல் எச்சமிட்டாயா? இதோ பார், துஷ்ட ப்பறவையே !! என்ன காரியம் செய்தாய்” என்று தன் பார்வையால் அண்ணாந்து அதன் பக்கம் கோவத்தோடு பார்த்தார். அடுத்த கணம் கொக்கு இறந்து விழுந்தது. அவருக்கு பெருமை தாங்கவில்லை.
அடாடா ! எவ்வளவு பெரிய வல்லமை !! நாம் யாரையாவது கோபமாக பார்த்து ஒரு தடவை விழித்தால் போதும். சாம்பல் தான். ஏறக்குறைய சிவபெருமான் மாதிரி ஆகிவிட்டோம். அவருக்குகூட மூன்றாவது கண் திறக்கவேண்டும். நாம் நம் இரண்டு கண்ணை திறந்தாலே போதும். இப்படி  தன்னைபற்றி பெருமையாக நினைத்துக்கொண்டே நடந்து போகும்போது பக்கத்து ஊர் வந்து விட்டது. முனிவருக்கா,  பசி வயிற்றை க்கிள்ளியது. ருசியான உணவு சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகி விட்டது . முன்னே தெரிந்த ஒரு வீட்டின் முன் போய் நின்றார். “அம்மணி, ஒரு முனிவன் வந்திருக்கிறேன். பசிக்கிறது. சாப்பிட ஏதாவது கொடுங்கள்” என்று கேட்டார். உள்ளேயிருந்து ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. “சற்று பொறுங்கள், ஸ்வாமி, இதோ வருகிறேன்” என்ற அக்குரல் வந்ததும் ஆவலோடு கொங்கணர் உணவை எதிர்னோக்கி வாசலில் நின்றார். ஆனால் அந்த பெண்மணி வருவதாக தெரியவில்லை.  கொங்கணருக்கு பசி உயிர் போனது. வெகு நேரம் கழித்து ஒரு தட்டில் உணவுடன் அப்பெண்மணி வந்து கொங்கணவரிடம் மரியாதையுடன் அளித்தார். “ மன்னிக்க வேண்டும், ஐயா, வீட்டில் வயதான மாமனார்,மாமியார் இருக்கிறார்கள். அவர்களை கவனித்து விட்டு வருவதற்குள் நேரம் ஆகி விட்டது” என்றாள். கொங்கணவர் மனத்தில் சினம் எழுந்தது. “இவளுக்கு என்ன தைரியம் !! இஷ்டத்துக்கு வருகிறாள். இது போல் நம்மை காக்க வைத்து விட்டு மெதுவாக ஆடி அசைந்து வந்து சோறு போட்டால் நாம் சும்மா விட்டு விடுவோமா ! நாம் யார் என்று தெரியாத இந்த பேதைக்கும் நம் வலிமையை காட்டுவோம் ” என்று எண்ணிய வண்ணம் கோபமாக அவளை நிமிர்ந்து தன் பார்வையை வீசினார். ஒன்றும் நடக்கவில்லை. திருப்பி முறைத்தார். எதுவும் நடக்கவில்லை. மாறாக அப்பெண் நகைத்த படி “ என்னைக் கொக்கென்று நினைத்தீரோ ! கொங்கணவா !”  என்று கேட்டு விட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தாள். கொங்கணவருக்கு சுருக்கென்றது. அங்கே காட்டில் அவர் கொக்கை எரித்தது இங்கே வீட்டில் இருக்கும் இவளுக்கு எப்படி தெரிந்தது? அவர் மானம் போய் விட்டது என்று உணர்ந்தார். அப்படியே அவள் காலில் விழுந்தார்.  “அம்மா, என் தவ வலிமையையே  முறித்துவிட்டீர்கள். என் கர்வம் ஒழிந்தது. எனக்கு நீங்கள் தான் குரு” என்றார். அப்பெண்மணியோ “ஐயையோ, நான் என்ன நிரம்ப படித்தவளா? நான் எப்படி உங்களுக்கு குருவாக முடியும்? இந்த ஊருக்கு வெளியே வ்யாதர் என்று ஒருவர் இருப்பார் அவரிடம் சென்று தங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். அவர் தான் உங்களுக்கு குரு வாக இருக்க தகுதி படைத்தவர் “ என்று கூறி இல்லத்துக்குள் சென்று மறைந்தாள்.  

No comments: