Friday, December 30, 2016

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-11

குறள் 225 அதிகாரம் 23 ஈகை
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.


தவ வலிமை உடையவரின் ஆற்றல் பசியைபொறுத்துக்கொள்வதாகும். ஆனால், அப்பசியை ஆற்றுபவர் ஆற்றல் அதனை விடப்பெரியதாகும்.

இந்த திருக்குறள் படிக்கும்போது மஹரிஷி துர்வாசர் நினைவு வராமல் இருக்காது.    துர்வாசர் மிக பெரிய முனிவர். முற்றும் துறந்தவர். ஆனால் அவருக்கு பசி தாங்காது. பசி வந்தால் உடனே உணவு உண்டே ஆக வேண்டும். இல்லையெனில் கோபம் வந்து விடும். ஒரு நாள் அவர் துரியோதனன் அரண்மனைக்கு  சென்றார். நல்ல விருந்து சாப்பாடு. கேட்டு வாங்கி சாப்பிட்டார். பிறகு மன்னனை வாழ்த்தி விட்டு கிளம்பினார். துரியோதனனுக்கு ஒரு குரூர எண்ணம் தோன்றியது. அவன் பொறாமை பிடித்தவன் என்பது தெரிந்த விஷயம் தானே. நல்லதையா நினைப்பான்? அவன் துர்வாசரை பார்த்து சொன்னான் “ முனிபுங்கவரே, எனக்கு ஒரு விண்ணப்பம். தாங்கள் என் குடிலுக்கு வந்து என்னை ஆசிர்வதித்து அருளினீர்கள். எனக்கு மகிழ்ச்சியே. ஆனாலும், ஒரு விண்ணப்பம்.  என் தம்பிகள் பாண்டவர்கள் இல்லத்துக்கும் தாங்கள் இது போலவே தங்கள் சீடர்களுடன் சென்று திரௌபதி சமைத்து அவர்கள் பரிமாறும் ருசியான உணவை சாப்பிட்டு அவர்களுக்கும் தங்கள் ஆசிகளை அள்ளி வழங்க வேண்டும்” என்றான், அப்போது பாண்டவர் வனவாசம் செய்து கொண்டிருந்தனர். தினசரி சாப்பிடுவதே பெரிய பாடு. அவர்களிடம் ஏது அறுசுவை உணவு படைக்க வசதி?   துரியோதனன் இப்படி மனக்கணக்கு போட்டான். துர்வாசர் தன் கணக்கற்ற சீடர்களோடு அவர்கள் குடிசைக்கு போவார். அவர்கள் சாப்பாடு போட முடியாமல் திணருவார்கள். துர்வாசரோ கோபக்காரர். சாபம் இடுவார். பாண்டவர் ஒழிந்தார்கள். இது போல வஞ்சக எண்ணத்தோடுதான் துரியோதனன் இந்த யோஜனை சொன்னான். அது தெரியாமல், துர்வாசரும் இதற்கு சம்மதித்து ஆஹா !! என்ன நல்ல யோஜனை. நிச்சயம் பாண்டவர் இல்லத்துக்கும் செல்கிறேன். அவர்கள் இடும் போஜனத்தையும் உண்டு அவர்களுக்கும் என் ஆசி சொல்கிறேன்” என்றபடி கிளம்பினார். இவ்வளவு அறிவுள்ள துரியோதனன் ஒரு விஷயத்தை  அறியவில்லை. திரவுபதியிடம் ஒரு அட்சய பாத்திரம் இருந்தது. அதை பயன்படுத்தி திரவுபதி ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு உணவு வேண்டுமானாலும் அளிக்கலாம். ஆனால், அதை அவள் கழுவி கவிழ்த்து வைத்து விட்டால் அடுத்த நாள் தான் அது உணவு கொடுக்கும். இதை வைத்துத்தான் பாண்டவர்கள் விருந்தோம்பல் செய்து வந்தனர்.


துர்வாசர் தான் சொன்னபடியே ஒரு நாள் கானகத்தில் பாண்டவர் வசித்து வந்த குடிலுக்கு தன் சீடர்களோடு வந்தார். அப்போது மதியம் நெருங்கி விட்டது. , பாண்டவர் அவரை வரவேற்றனர். துர்வாசர் “ நாங்கள் அனைவரும் ஆற்றில் குளித்து விட்டு வருகிறோம். உணவு தயாராகட்டும்” என்று கூறி விட்டு சென்றார். திரௌபதியை பாண்டவர் பார்த்தனர். திரௌபதி முகம் கலங்கி இருந்தது. என்ன காரணம் என்றால், திரௌபதி அன்றைய உணவு பரிமாறி விட்டதால் அக்ஷய பாத்திரத்தை அலம்பி கவிழ்த்து வைத்து விட்டாள்.
துர்வாசர் இன்னும் பத்து நிமிடங்களில் குளித்து விட்டு வந்து விடுவார். அவருக்கோ பசி தாங்காது. நாம் எப்படி சமாளிக்க ப்போகிறோம்? என்று எல்லோருக்கும் குழப்பம். இது தானே துரியோதனன் எதிர்பார்த்தது. பாண்டவர் கையை ப்பிசைந்து கொண்டு நிற்கின்றனர். த்ரௌபதி உடனே கண்ணனை த்யானித்தாள். தங்கை கூப்பிடுகிறாளே ஏதோ கஷ்டம் போலிருக்கிறது என்று க்ருஷ்ணனும் வந்தார். த்ரௌபதி அவரிடம் இந்த நிலைமையை சொன்னாள். சிரித்துக்கொண்டே, க்ருஷ்ணன் அந்த அக்ஷய பாத்திரத்தை எடுத்துவர சொன்னார். த்ரௌபதி “அது ஒன்றும் உபயோகப்படாது, க்ருஷ்ணா, நான் அதை அலம்பி கவிழ்த்து வைத்து விட்டேன்.” என்றாள். இருப்பினும் க்ருஷ்ணன் வற்புறுத்தவே அதை எடுத்து வந்தாள்.  க்ருஷ்ணன் அதை உற்றுபார்த்தார். பாத்திரம் அலம்பிய பிறகும், ஒரே ஒரு பருக்கை அதன் அடியில் ஒட்டிக்கொண்டிருந்தது. க்ருஷ்ணன் அதை தன் கையில் எடுத்து தன் வாயில் போட்டு மென்று விழுங்கினார். “ஆகா” என்று கூறி விட்டு பிறகு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். துர்வாசரும் சீடர்களும் குளித்து விட்டு வந்தனர். ஆனால், அவர் எந்த வித அவசரமும் இல்லாமல், “அம்மா, த்ரௌபதி, என்னமோ எங்கள் யாருக்குமே பசி இல்லையம்மா. சாப்பாடு எதுவும் வேண்டாம். நாங்கள் கிளம்புகிறோம் நீங்கள் நன்றாயிருங்கள் “ என்று வாழ்த்தி விட்டு சென்றார் என்று கதை. இதில் பாருங்கள் தவ ஆற்றல் நிறைந்த முனிவருக்கு பசி பொறுக்க வில்லை. ஆனால், க்ருஷ்ணன் தன் அருளால் ஒரு பருக்கையை வைத்து க்கொண்டு அவர்கள் எல்லோர் பசியையும் தீர்த்து வைத்த அவன் ஆற்றல் பெரியது தானே ?  (கதைக்குப்பின் ஒரு விவரம் : என்னடா இவன் துர்வாசரைப்பற்றி இப்படி எழுதிவிட்டானே என்பவர்கள் இந்த விவரத்தை படிக்கவும். மஹரிஷி  துர்வாசர் பசி பசி என்று சொல்வாரே தவிர, தனக்காக எதுவும் சாப்பிட மாட்டார். ஒவ்வொரு நாளும் மனதார க்ருஷ்ணார்ப்பணம் க்ருஷ்ணார்ப்பணம் (இது க்ருஷ்ணனுக்கு, இது க்ருஷ்ணனுக்கு)  என்று சொல்லி அவன் பசித்திருப்பானே, அவன் வயிறு நிரம்ப வேண்டுமே என்று தான் வகையாக நிரம்ப சாப்பிடுவார். க்ருஷ்ணனுக்கு இது தெரியும். அதனால் தான் ஒரு பருக்கையுண்டு திருப்தியாக ஏப்பம் விட்டு சென்று விட்டார்.. பிறகு, துர்வாசர் எப்படி சாப்பிடுவார் ? )

No comments: