குறள் 303 அதிகாரம் 31 வெகுளாமை
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
பொருள்: யாரிடத்தும் சினம் என்பதை மறந்து விட வேண்டும். ஏனெனில், தீய விளைவுகள் சினத்தினால் ஏற்படும்.
“சினம் மறத்தல்” என்ற சொற்றொடர் சற்றே வித்தியாசமாக இருக்கிறது. (மற என்றால் forget என்ற பொருள் உண்டு. Give up என்ற பொருளும் உண்டு.எல்லோரும் give up என்றூ தான் எழுதியுள்ளர்கள்) சினமே கொள்ளாமல் இருப்பதென்பது இயலக்கூடிய விஷயமா என்று தெரியவில்லை. ஏனெனில், அந்தக்காலத்தில் பல முனிவர்களே சினம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். கோசிகன் என அழைக்கப்படும் விச்வாமித்திரர் கோபம் உடையவர். பரசுராமரோ அதைவிட பயங்கரமான கோபம் உடையவர். ஆயினும், இருவருக்கும் ஒப்பிட்டு பார்த்தால் கோபத்திலும் இரு வகைகள் உண்டு என்று தெளிவாகின்றது. (ஆரம்பித்துவிட்டது என் அதிகப்பிரசங்கம்!!)
முதலில் கோசிகரைப்பார்ப்போம். அவர் பால காண்டத்தில் நுழையும் போது கம்பர் சொல்கிறார், “ மன் உயிர் அடங்கலும் உலகும் வேறு அமைத்து தேவருடன் இடங்கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு” என்ற திண்ணம் கொண்ட கோசிகன் வருகிறார் என்றார். எல்லாவற்றையும் புதிதாக படைப்பேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இப்போது உள்ள உலகத்தின் மேல் சினம் கொண்டவர். அந்த சினத்தினால் புதியதோர் உலகம் படைத்து க்காட்டியவர். உலக மாந்தருக்கெல்லாம் நண்பன் என்பதால் விச்வாமித்திரன் ஆனார். பிறவியில் அரசர். வசிஷ்டரோடு காமதேனுவுக்காக வந்த சண்டையில் தவசியாகி அவர் வாயால் ப்ரம்ம ரிஷி என்ற பட்டத்தை வாங்கியவர்.
அவர் அவைக்கு வந்து அமர்ந்து “யாகத்தைக்காக்க மூத்த பிள்ளையை அனுப்பு” எனவும் தசரதருக்கு தேள் கொட்டியது போல் ஆயிற்று. “ அவன் சின்ன பிள்ளை. நானே வருகிறேனே” என்று தட்டி கழிக்கிறார். அப்போது “மண்படைத்த முனி முனிவோடு எழுந்தனன்” என்பார் கம்பர். சினம் என்றால் அப்படி ஒரு கோபம். உடனே வசிஷ்டர் தயரதனை சமாதானப்படுத்தி ராம இலக்குவரை க்கூப்பிட்டு விச்வாமித்திரரிடம் ஒப்படைக்கவும், அவர் “சிந்தை எடுத்த சீற்றம் விட்டு” (சிந்தையில் சினம் நீங்குகிறது.) புறப்படுகிறார். கோசிகர் கோபம், கோபம் இருக்கும் இடம் குணம் இருக்கும் என்பார்களே அது போல இருக்கிறது. அது நன்மையாக வே முடிந்திருக்கிறது. ஒருவகையில் அது constructive anger என்று வைத்துக்கொள்ளுங்களேன். அவர் வெகுளி மறந்து போகின்ற வெகுளியாக இருக்கிறது. அவர் புகழ் நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எல்லோருக்கும் தெரியும். ராமபிரானுக்கே கல்யாணம் செய்து வைத்தவர். இது ஒரு புறம்
பரசுராமர் கோபமோ அடங்காத கோபமாக இருக்கிறது. பழிவாங்கும் கோபம் ஆக இருக்கிறது. அவரை க்கம்பர் அறிமுகப்படுத்தும் போது “அனல் கால்வான் உன்னும் தழல் விழியான் உரும் அதிர்கின்றது ஓர் உரையான்” (மூச்சுக்காற்றே அனலாக வீசுகிறது. விழியும் தணல் போல் இருக்கிறது. பேசினால் உலகு அதிர்கிறது) என்று நம்மை பயமுறுத்துகிறார். தேவர்அனைவரும்” ஐயோ விண்ணுலகு மண்ணிலும் மண்ணுலகு விண்ணிலும் மாறி வைத்து விடுவாரோ” என்று அச்சப்பட்டனர். இந்த அச்சம் கோசிகரை ப்பார்த்தால் வருவதில்லை.ஊழிக்காலத்தில் சிவபெருமான் வருவாரே அவரை ப்போல் அல்லவா இருக்கிறார் பரசுராமர். தன் தந்தையை க்கொன்றதால் இவ்வுலக அரசர்களையெல்லாம் அழித்து அவர்களின் இருபத்தோரு தலைமுறையை பூண்டோடு அழித்தவர் பரசுராமர். பிறகு தான் வென்ற இவ்வுலகை காச்யப முனிவருக்கு தானம் செய்து விட்டு தனக்கென ஒரு தனி ஊரை ச்ருஷ்டித்து க்கொண்டு சென்றவர். இந்த மக்கள் சகவாசமே வேண்டாம் என்று அங்கு சென்ற பரசுராமர் நிம்மதியாக தவம் செய்யவேண்டியதுதானே !! அதுதான் இல்லை. அவர் தான் கொண்ட சினத்தை மறக்கவில்லை. அதன் காரணமாக, ஒருனாள் அவர் திரும்பி வருகிறார். எப்போது? ராமர் திருமணம் முடிந்து எல்லோரும் அயோத்திக்கு திரும்புகிற சமயம் நந்தி போல் குறுக்கே நிற்கிறார். இவர் எதற்கு இங்கு வந்தார் என்று தசரதருக்கு மூச்சு நின்று விட்டது.இருக்கிற ஒன்றிரண்டு அரசர்களையும் கொன்று விடலாம் என வந்திருக்கிறாரோ என ஐயம். பரசுராமர் ராமரைப்பார்த்து,” ஒகோ, நீதானா அவன்?
ஏற்கெனவே உடைந்த சிவதனுசை உடைத்த வீரன் நீதானா ? உன் வலிமை என்ன என்று பார்க்க த்தான் வந்தேன்” என்றார் பரசுராமர். தயரதரோ “ ஐயா, உமது வலிமை எமக்கு தெரிந்ததே.ராமனை ஒன்றும் செய்யாதீர்கள். அவனுக்கும் உங்களுக்கும் என்ன பகை? “ என்று காலில் விழுகிறார். பரசுராமர் “நீ சிறிது அமைதியாய் இரு. நான் சினத்தை அடக்கிக்கொண்டு வந்திருக்கிறேன். கோவத்தைக்கிளறாதே. இவன் சிவ தனுசை ஒடித்த சத்தம் கேட்டது. என் தவம் கலைந்தது. சத்திரிய வம்சமே அழிய வேண்டும் என்று நான் செய்த கொலைகளுக்குப்பிறகும் இப்படி ஒரு வீரனா ? விடுவேனா? விட மாட்டேன். அடேய், பொடிப்பையா, இந்தா, இந்த வில்லை ப்பிடி. இதில் நாணேற்று பார்ப்போம்” என்றதும் ராமர் கையில் வில்லை வாங்கினார். ஏதோ பழகிய வில்லை கையாள்வது போல் மிக எளிதாக நாணேற்றி “ஐயா,முனிவரே, நணேற்றிவிட்டேன். இப்போது அம்பை எங்கு செலுத்துவது?” என்று கேட்கவே ராமர் யார் என்று புரிந்து கொண்ட பரசுராமர் “என் செய்தவம் யாவையும் சிதைக்கவே” என்று சொல்லவும் அந்த அம்பு அவர் செய்த தவம் அனைத்தையும் வாரிக்கொண்டு ராமரிடம் வந்தது.
இப்போது குறளைப்பார்ப்போம். “யாரிடத்தும் வெகுளி மறத்தல்”.கோ சிகர் சினம் கொள்ளுகிறார். ஆனல் அது ஒரு நிமிடம் தான். மாறிவிடுகிறது. அதை மறந்தும் விடுகிறார். அடுத்த நிமிடம் அவர் தன் இயல்புக்கு வந்து விடுகிறார். அந்த சினம் பகைமையினால் அல்ல. அவருக்குள்ள உரிமையினால். அது எதிராளிக்கு ஒரு மருந்து போல் இருக்கிறது. ஆனால், பரசுராமர் சினமோ அடங்கா சினமாக இருக்கிறது. அது மருந்தல்ல. விடம். அதை Destructive anger.என்று சொல்லலாம். இறுதியில், அது அவருக்கு “ தீய பிறத்தல்” அதாவது தலை குனிவை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment