Friday, December 30, 2016

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்- 3

குறள் 62: அதிகாரம் மக்கட்பேறு

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

பொருள்:
பழியில்லாத பிள்ளைகளை பெற்றவரை ஏழுபிறப்பிலும் தீயவை நெருங்காது.

         
இதன் பொருள் : பழியில்லாத பண்புடைய நன்மக்களை ப்பெற்றவரை எழுபிறப்பிலும் தீவினைகள் தீண்டா.  முன்னோர்கள் செய்த நற்பலன் சந்ததியினர்  நன்றாக இருக்கிறார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், வள்ளுவப்பெருமான் மகன் நல்லது செய்வதால் தந்தை க்கு நல்லது என்று சொல்கிறார். அதுவும் எழுபிறவிக்கு என்று சொல்லிவிட்டார். இதையே மன்னை சொன்ன போது அதெல்லாம் இல்லை  என்று வழக்கம் போல அவசரத்தோடு வாதிட்டேன். இப்போது வள்ளுவரே சொல்கிறார். வாதாட முடியுமா ? சரி, இதற்கு ஆதாரமான குறிப்பு நம் புராணங்களில்  உள்ளதா ? இருக்கிறது. சகரன் என்று ஒரு அரசர். அவருக்கு இரு மனைவிகள். ஒரு மனைவி மூலம் அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் தங்கள் இளமையில் அச்வமேத யாகம் செய்கிறோம் என சொல்லி ஒரு குதிரையை அனுப்பினார்கள். அது எங்கோ காணாமல் போய் விட்டது. அதைத்தேடி எல்லோரும் ஆயுதங்கள் ஏந்தி சென்றார்கள். முடிவில் பாதாளத்தில் சென்று பார்த்தால் குதிரை இருந்தது. எதேச்சையாக, அங்கு கபில முனிவர் தவம் புரிந்து கொண்டிருந்தார். அவர்தான் குதிரையை மறைத்திருக்கிறார் என்று தவறாக எண்ணி அவர் மீது பாய்ந்தனர். முனிவர் ஒரு பார்வைதான் பார்த்தார். அவ்வளவுதான்  அறுபதினாயிரம் பேரும் செத்து சாம்பல் ஆகி விட்டார்கள். விமோசனமே இல்லை. நற்கதியும் இல்லை. குமாரர்கள் திரும்பி வராததால் அரசன் தன் இன்னொரு மனைவியின் மகனுக்கு பட்டம் சூட்டினான். காலம் ஓடியது. அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பகீரதன். தன் முன்னோர்களுக்கு நேர்ந்த அவலத்தை போக்க தவம் இயற்றினான். சிவபெருமான் அருளால், ஆகாய கங்கையையே பாதாளத்துக்கு பாய செய்து முன்னோர்களின் ஆத்மாவுக்கு விடுதலை அளித்து நற்பேறு கொடுத்ததாக கதை. அவன் முயற்சியை பகீரத ப்ரயத்தனம் என்று சொல்வது வழக்கம் ஆனது. கங்கைக்கும் பாகீரதி என்ற பெயர் வந்தது. ரகு வம்ச வரிசைப்படி இவன் ராமருக்கு முன் பிறந்தவன். அவனுடைய விடா முயற்சியால் இன்று கங்கை எல்லோருடைய பாவத்தையும் போக்குகிறது. ஆக மொத்தம் மன்னை சொன்னது சரிதான். நன்மக்களால் முன்னோர் தீவினை விலகும். ஆனால் பகீரதன் போன்ற பிள்ளை பிறக்க வேண்டுமே

No comments: