குறள் எண் 202 அதிகாரம் 21 தீவினையச்சம்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
பொருள்: தீய விளைவுகளை ஏற்படுத்துவதால் தீய செயல்கள் ஒருவனால் தீயை விட அபாயகரம் என்று கருதி அஞ்சி தள்ள ப்படவேண்டும்.
தீ கொடியது. உயிரை அழிக்கக்கூடியது. ஆனால், அதனை விட கொடிய தீய விளைவுகளை தீய செயல்கள் ஏற்படுத்தும் என வள்ளுவப்பெருமான் நமக்கு அறிவுறுத்துகிறார். தீயை மற்றவர் பார்க்க முடியும். அணைக்க முடியும். ஆனால் தீய விளைவுகளை மற்றவரால் மாற்ற முடியாமல் கூட போய் விடலாம். பரிமேலழகர் சொல்லுவார். “ இப்பிறப்பில் நமக்கு பாதகம் விளைவித்த தீ அடுத்த பிறவியில் தொடர்ந்து வராது. தீய விளைவுகள் நமக்கு அடுத்த பிறவியில் தொடரக்கூடும்.” என்பார். அடுத்த பிறவியை விடுங்கள். ஆணி மாண்டவ்யர் என்ற முனிவர் தன் சிறு வயதில் எறும்புகளை க்குச்சியில் கோர்த்து விளையாடுவார். அவர் அந்த பிராயத்தில் தான் செய்த தீவினையை உணரக்கூட இல்லை. ஆனால், அவர் வளர்ந்து முனிவர் ஆகி காட்டில் தவம் செய்யும் போது அரசரின் காவலர்களால் பிடிக்கப்பட்டு பொய் குற்றம் சாட்டப்பட்டு கழுவில் ஏற்ற ப்படுகிறார். நான் என்ன தவறு செய்தேன்? தவம் செய்தது ஒரு பாவமா? என்று கேட்ட ஆணி மாண்டவ்யருக்கு தர்ம தேவதை “ அப்பா? ஆறு வயதில் எறும்புகளை குச்சியில் குத்தியதை மறந்து விட்டாயா?” என்று நினைவுறுத்தியதாம். ஆறு வயதில் அவருக்கு தீக்காயம் பட்டிருந்தால் அந்த வடு கூட அறுபது வயதில் இருக்காது. ஆனால், தீய செயல் துரத்துகிறதே, ஐயா! தீய செயல் செய்து விட்டு தீய விளைவுகள் வரக்கூடாது என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம். உதாரணத்துக்கு, வாலியை எடுத்து க்கொள்வோம். ராமனால் வதம் செய்யப்பட்ட வானர வேந்தன் வாலி. கம்பர் அவனை அறிமுகம் செய்யும்போதே சொல்கிறார் “ நாலு வேதத்துக்கும் வேலி போன்றவன். சிவபெருமான் அருள் பெற்றவன். அளவில்லாத வலிமை பெற்றவன்.” என்று சொல்கிறார். தேவர் அசுரர் இருவரும் சேர்ந்து கடைய முடியாத மந்தர மலையை ஒருவனாய் கடைவான். எட்டுத்திக்கிலும் சென்று ஒவ்வொரு நாளும் சிவனை வழிபடுவான்.எதிரில் நிற்பவனின் பாதி பலம் இவனுக்கு வரும் என்ற வரம் பெற்றவன். தன் வாலில் ராவணனை க்கட்டி தூக்கி சென்றவன். அரசாளும் போது ஒரு நாள் , அரக்கன் மாயாவியை கொல்ல குகைக்குள் சென்று வாலி வெளியே வராத காரணத்தினால் சுக்ரீவனை அரசராக்க வானரர் முடிவு செய்தனர். ஆனால், பல மாதம் கழித்து மாயாவியை க்கொன்று வெளியே வந்த வாலி தன் தம்பி “ அண்ணா, நான் செய்தது தவறுதான். உன் அமைச்சர்கள் அறிவுரைப்படிதான் செய்தேன். நீ இந்த அரசை திருப்பி எடுத்துக்கொள்” எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சுக்ரீவனை கொலை வெறியோடு தாக்கி அவன் மனையாளையும் கவர்ந்து சென்றான்.
மறைந்து வாழ்ந்து வந்த சுக்ரீவனுக்கு தான் கொடுத்த வாக்கின் படி ராமன் சுக்ரீவனுக்கு தன் அரசையும் மனையாளையும் மீட்டு த்தர மறைந்திருந்து அம்பு எய்தி வல்லியை க்கொன்றார். வாலி தன்னை க்கொன்றது தவறு என்று ராமரிடம் வாதாடும் செய்யுள்கள் கம்ப ராமாயணத்தில் மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளில் வாலி சொல்கிறான் “ மணமும் இல்லை, மறை நெறி வந்தன. குணமும் இல்லை குல முதற்கு ஒத்தன” எங்களுக்கு வேதம் இல்லை. திருமணம் இல்லை. நாங்கள் குரங்குகள். எப்படி வேண்டுமானால் இருப்போம். நீ யார் கேட்க? ” என்ற வாதத்தை முன் வைக்கிறான். இதை படித்த தமிழறிஞர் பலர் வாலி வதம் ராமன் செய்த தவறு என்பதற்கு ஆதாரம் தேடும் வகையாக மேடையில் உரக்க சொல்வார்கள். அவர்கள் மறப்பது என்னவென்றால், இது கம்பர் கருத்தல்ல. வாலி தன் தரப்பில் ஒரு கிரிமினல் வக்கீல் போல வைக்கும் defence வாதத்தை கம்பர் அழகாக சொல்கிறார். அவ்வளவே. ராமாயணம் படித்த எவருக்கும் தெரியும் வாலி சொல்வது முழுக்க பொய் என்று. நாலு வேதங்களும் அறிந்தவன் வாலி. மூன்று முறை மூன்று கடல் நீரில் இறை வணக்கம் (சந்தியா வந்தனம்) செய்பவன். ஒரு சிவ பக்தன். அவனுக்கு நல்லது கெட்டது தெரியும். தம்பியைக் கொல்வது தவறு. தம்பியின் மனைவியை அபகரிப்பது குற்றம். இதெல்லாம் தெரியாதவனா வாலி? ஆனால், தீய செயல் செய்து விட்டு, விளைவுகள் தன்னை தாக்க வரும்போது. தன்னை “ நான் குரங்கு” என்று exemption கேட்டு சாகசமாக வாதாடுவது தீவினையில் இருந்து தப்பிக்க த்தான். ராமர் மிக அழகாகக்கேட்பார். “ வாலி, நீ நெறியின் மேன்மையை உணர்ந்தவன்.ஒன்றும் தெரியாதவன் இல்லை.நீ குரங்கு என்றால் “ஆபத் பாந்தவா அனாத ரக்ஷகா” என்று முதலை தன்னை இழுக்கும் தருணத்திலும் பக்தியோடு நாராயணனை வேண்டியதே அந்த கஜேந்திரனும் ஒரு மிருகம். சீதாப்பிராட்டியாரை க்காக்க ராவணனோடு தன் அலகாலும் நகங்களாலும் போரிட்டு வீழ்ந்ததே அந்த ஜடாயுவும் ஒரு பறவை என்று சொல்லிவிடலாமே?” என்ற கேள்வியை எழுப்புகிறார். “எவ்வகை செயல் செய்தாலும் அதற்கு உண்டான விளைவை அனுபவித்தே தீரவேண்டும் என்று தெரிந்திருந்தும் சொந்த தம்பியின் “மனையின் மாட்சியை” அழித்தாய். உனக்கு உண்டான தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்” என்று அவனுக்கு எதிர் வாதம் சொல்கிறார்.
தீய செயல்கள் துரத்தி வரும். தீ சிறிது நேரத்தில் அணையும். ஓடி க்கூட தப்பிக்கலாம். தீயவை அணையா. அவை விளைவிக்கும் கொடுமைகளில் இருந்து தப்பிக்கவும் முடியது என்பதற்கு வாலி ஒரு உதாரணமாக இந்த உலகம் உள்ளவரை பேசப்படுவான்.
No comments:
Post a Comment