குறள் எண் 266 அதிகாரம் தவம்
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
பொருள்: தனக்கு உரியவையான கருமங்களை செய்பவர் தவம் செய்பவர் என க்கருதப்படுவார். அதை விடுத்து தவம் என நினைத்து ஒருவர் செய்யும் எல்லா செயல்களும் ஆசைக்குட்பட்டு செய்யப்படும் வீண் செயல்களே.
“என்னோடு போர் புரிய வந்திருப்பவரை ப்பார்க்கிறேன் “ என்று சொல்லி இரு சேனைகளுக்கும் இடையே தன் தேரை நிறுத்துமாறு ஸ்ரீ க்ருஷ்ணரிடம் சொன்ன மாவீரன் அர்ஜுனன் அது வரை இருந்த தன்னம்பிக்கையை இழந்து”ஐயோ, எதிரே என் தம்பி இருக்கிறானே, குரு இருக்கிறாரே, மச்சினன் இருக்கிறானே, நான் இவர்களோடு சண்டை போடுவதா ? சே சே , க்ருஷ்ணா, என்ன காரியம் செய்ய சொல்கிறாய்? இந்த பாவ காரியம் செய்வதற்கு பதில் மொட்டையடித்து க்கொண்டு சாமியாராகி பிச்சையெடுத்து சாப்பிடுவேன்” என்று கண்ணீரும் கம்பலையும் ஆக வில்லை தூரப்போட்டு விட்டு அமர்ந்தது கீதையின் முதல் அத்தியாயம் காட்டும் காட்சி.
அதன்பிறகு புன்னகை புரிந்த வாறு (அசடுகளை ப்பார்த்து பரமன் சிரிக்காமல் அழவா முடியும்?) பார்த்தனுக்கு ஒவ்வொருவனும் தான் எடுத்துக்கொண்ட, தனக்கென அமைந்த, தன் முன்னோர்களால் போற்றப்பட்ட, விதியால் வந்து சேர்ந்த செயல்களை செய்யாமல் வேறு எத்தவத்தை செய்தாலும் அது தவம் ஆகாது என குட்டி குட்டி க்ருஷ்ணன் சொல்லி த்தந்தது கீதையின் பிற அத்தியாயங்கள்.
அர்ஜுனன் அழுகையை நிறுத்த போர் முனையில் சொல்ல வாய் கூசும் விஷயத்தை க்ருஷ்ணன் சொல்வார் “ அர்ஜுனா, நீ இந்த ப்போரில் மாண்டாலும் பரவாயில்லையப்பா. நீ போர் புரி. உனக்கென விதிக்கப்பட்ட செயல்களிலிருந்தும் தப்பிக்க மற்ற பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாலும் அதன் விளைவு மிக பயங்கரமாக இருக்கும். அதற்கு ப்பதில் நீ போரே புரிந்து விடலாம்”. தன் கருமம் செய்வது தான் தவம் என்பதை இதை விட எப்படி வலியுறுத்துவது?
நாரதர் ஒரு முறை ஸ்ரீமன் நாராயணனிடம் சொன்னார் “ஸ்வாமி,நான் 24 மணி நேரமும் உன் நாமத்தை ஜெபித்துக்கொண்டே இருக்கிறேன் பாருங்கள். என் தவத்தை மூவுலகத்தினரும் பாராட்டவே செய்கின்றனர். என்னை விட சிறந்த பக்தன் இருப்பானா என்ன ? இருக்க வே முடியாது” என்று சற்று தற் பெருமையாக பேசிக்கொண்டார். நாராயணன் பார்த்தார் “ ஓஹோ? அவ்வளவு பெருமையாக இருக்கிறதா? உனக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டியதுதான்” என்று சொல்லி விட்டு “ நாரதா, உன் பக்தி மிகவும் உயர்ந்தது தான். ஆனால், எனக்கென்னவோ அதோ கீழே பார், பூலோகத்தில் ஒரு குக்கிராமத்தில் அந்த ஏழைக்குடியானவன் இருக்கிறான் பார், அவன் தான் உன்னை விட நிறைய ஜபம், தவம் செய்கிறான் என்று தோன்றுகிறது.” என்று மூட்டி விட்டார். நாரதர் வேலையை பெருமாள் செய்துவிட்டார்.
நாரதருக்கு இருப்பு க்கொள்ளவில்லை. அடுத்த நாள் விடிவதற்கு முன்பே அந்த ஏழைக்குடியானவன் குடிசைக்கு முன்பு வந்து அமர்ந்து விட்டார். கதிரவன் எழும் நேரம். கோழி கூவிற்று. குடியானவன் எழுந்தான். “நாராயணா” என்று சொன்னான். நாரதர் அதை ப்பதிவு செய்து கொண்டார். பிறகு கை கால் கழுவிக்கொண்டான். மாட்டுக்கு தீனி வைத்தான். அதை ஓட்டிக்கொண்டு வயலுக்கு சென்றான். நாரதர் பின்னே சென்றார். அவன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தான். பகல் நேரம் வாய்க்காலில் குளித்தான். அவன் மனைவி கொண்டு வந்த கஞ்சியை குடித்தான். நாரதர் பார்த்தார் அவன் தவமும் செய்யவில்லை. ஜெபமும் செய்யக்காணோம். மாலை ஆயிற்று. கதிரவன் விழுந்தான். மாட்டை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தான் குடியானவன். இரவு உணவு முடிந்தது. நாரதர் பொறுமையிழந்தார். என்ன இது? க்ருஷ்ணன் சொன்னதுக்கு முற்றும் மாறாயிருக்கிறதே?. குடியானவன் காலை நீட்டி படுத்தான். “நாராயணா” என்று சொன்னான். தூங்கி விட்டான். நாரதர் மறுபடி அதை தன் ஏட்டில் பதிவு செய்து கொண்டார். நேரே வைகுண்டத்துக்கு வந்தார். “நாராயணா, இது என்ன விளையாட்டு ? அவனை ஒரு நாள் முழுவதும் பார்த்தேன். காலை ஒரு முறை நாராயணா என்றான். இரவு ஒரு முறை நாராயணா என்று சொன்னான். அவனை ப்போய் என்னை விட சிறந்த பக்தன் என்கிறாய். இது பொருத்தமாக இருக்கிறதா? நான் சதா சர்வ காலமும் உன்னை ப்பற்றியே நினைத்து உன் நாமத்தை சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். பெருமாள் “ அதை விடுப்பா, ஏதோ சொல்லிவிட்டேன். இப்போது இரவாகி விட்டது. இப்போது உனக்கு ஒரு வேலை இருக்கிறது. நாளைக்காலை சீக்கிரம் எழுந்து அதோ அந்த ப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மூவுலகமும் சுற்றி வர வேண்டும். இன்னொரு விஷயம். அதில் பிராட்டியை எண்ணையை நிரப்ப சொன்னேன். அவள் விளிம்பு வரை நிரப்பி விட்டாள் போலிருக்கிறது. அவளுக்கு எல்லாமே நிரம்பியிருக்க வேண்டும். நான் என்ன செய்வேன்? அதிலிருந்து ஒரு துளி எண்ணை கூட சிந்தாமல் மூவுலகமும் சுற்றி வந்து விடு. இது ரொம்ப முக்கியம். அப்புறம், இன்னொரு விஷயம். நாளை இரவுக்குள் வந்து விடவேண்டும். சரியா? நீ போய் வா. நான் இப்போது தூங்க வேண்டும்” என்று படுத்து விட்டார்.
நாரதர் “ சரி, பரந்தாமா, உன் ஆக்ஞை. நாராயண” என்று சொல்லி தூங்க சென்றார். அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து பெருமாளை எழுப்பாமல் அந்த எண்ணைப்பாத்திரத்தை மட்டும் தன் கையில் எடுத்துக்கொண்டார். வான் வழியாக செல்ல த்தொடங்கினார். எண்ணைப்பாத்திரம் வழிய வழிய நிரப்ப பட்டிருந்தது. எந்த நிமிடம் அது சொட்டும் என்று தெரியாது. மிக பொறுமையாக இரு கண்களையும் பாத்திரத்தின் மீதே வைத்துக்கொண்டு மெதுவாக வான் வெளியில் சென்றார். வழியில் தேவர் எவ்வளவோ பேர் வந்தனர். நாரதரிடம் பேச்சு கொடுத்தனர். அவர்களை ஏறிட்டு க்கூட பார்ககாமல் தன் கை மீதிருந்த எண்ணைப் பாத்திரத்தின் மீதே வைத்த கண் வாங்காமல் சென்றார். சாதாரணமாக மூவுலகையும் சில கணங்களில் சுற்றி வந்து விடும் நாரதருக்கு பல மணி நேரம் ஆயிற்று இம்முறை அதே உலகங்களை சுற்றி வர. ஒரு வழியாக இரவு நேரத்துக்குள் முடித்தார். வைகுண்டத்துக்கு வந்தார். பெருமாளை வணங்கினார். “ஸ்வாமி, தாங்கள் சொன்ன வேலையை திறம்பட முடித்து விட்டேன். இதோ பாருங்கள். நீங்கள் தந்த எண்ணை பாத்திரம். ஒரு சொட்டு கூட கீழே சிந்தவில்லை. சரிபார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு பெருமூச்சு விட்டுக்கொண்டே அமர்ந்தார். பின்னே ? அசதி இருக்காதா? குன்ந்து கொண்டே வந்ததில் கழுத்தெல்லாம் வலி வேறு.
பெருமாள் புன்னகைத்தார். “ மிக நல்ல காரியம் செய்தாய், நாரதா, ஆமாம், இன்று எத்தனை ஆயிரம் முறை என் நாமத்தை ஜபம் செய்தாய்? “ என்று ஆரம்பித்தார்.
நாரதருக்கு தூக்கி வாரிப்போட்டது. “ என்னது? ஜபமா? என்ன ஸ்வாமி, ஒரு பாத்திரத்தில் விளிம்பு வரை இருக்கும் எண்ணையை த்தூக்கி கொண்டு மூன்று லோகமும் அலைந்து விட்டு வந்திருக்கிறேன். அதற்கு பாராட்டை க்காணோம். எத்தனை முறை என் நாமத்தை சொன்னாய் என்கிறீர்!. உங்களுக்கு நான் பட்ட கஷ்டம் தெரியவே இல்லையே. நான் பாத்திரத்தை பார்ப்பேனா, பஜனை பண்ணுவேனா, ?” என்று அலுத்துக்கொண்டார்.
நாராயணன் “ ஏண்டாப்பா, ஒரு பாத்திரத்தை தூக்கி கொண்டு ஒரு நாள் சுற்றி வருவதற்குள்ளேயே ஜபமாவது தவமாவது என்று அலுத்து க்கொள்கிறாய். ஒரு தடவை கூட என் பெயரை உச்சரிக்கவில்லை. அவன் பாவம் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கிறான். நிலத்தை உழுது சாகுபடி செய்கிறான். முதுகொடிய வயலில் உழுகிறான். இவ்வளவும் செய்தும் தினம் ஒரு இரண்டு முறையாவது என் பெயரை சொன்னானே, அது பெரிய விஷயம் இல்லையா?” என்று கேட்டார்.
நாரதர் விடவில்லை,” அது எப்படி, ஸ்வாமி, நிலத்துக்கு போய் உழுவதும், நான் பகவத் த்யானம் பண்ணுவதும் ஒன்றாகி விடுமா? சும்மா விளையாட்டுக்கு என்னை கேலி செய்வதற்காக சொல்கிறீர்” என்றார்.
பெருமாள் சொன்னார்,” கேலி இல்லை. உண்மை உனக்கு தெரிய வேண்டும் என்பதற்காக த்தான் இந்த வேலையைக்கொடுத்தேன். அவனவன் கருமத்தை அவனவன் செய்வதுதான் தவம். உனக்கு உகந்த வேலையை விட்டுவிட்டு என் பேரை சொல்லு என்று நான் என்றாவது சொன்னேனா? இதற்காகவே ஒரு அவதாரம் எடுத்து அடித்து சொல்லியும் உம்மைப்போன்ற ஆட்களுக்கு தெரியவில்லையே” என்று சொல்லி நாரதருக்கு தெளிவு படுத்தியதாக கதை.
No comments:
Post a Comment