Friday, December 30, 2016

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-22

குறள் எண் 291 அதிகாரம் 30 வாய்மை


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

பொருள்: யாதொரு உயிருக்கும் கெடுதல் இல்லாமல் பேசுவது வாய்மை என கூறப்படுகிறது


வாய்மை என்பது உண்மையை சொல்வது மட்டும் அல்ல. உண்மை என உள்ளத்தில் தோன்றியதை வாயால் சொல்வதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை அதன் விளைவுகளை சிந்தித்தபின் சொல்லும் முறையில் வேண்டுமானால் மாற்றம் செய்து சொல்வது. “ஸத்யம் ப்ரூயாத், ப்ரியம் ப்ரூயாத் ந ப்ருயாத் ஸத்யம் அப்ரியம் ” என்று வேதம் மற்றவருக்கு இதம் தராததை சத்தியமாக இருந்தாலும் சொல்லாதே என்று  சொல்கிறது. “ப்ரியம் நான்ருதம் ப்ருயாத்”  இதம் அளிக்கும் என்பதற்காக பொய் சொல்லாதே என்பது புரிகிறது. சத்தியமும் சொல்லவேண்டும். மற்றவருக்கு தீமையும் வரக்கூடாது என்றால் இது புரிது கொள்ள கடினமாக உள்ளது. இதனை விளக்க ஒரு கதையைப்பார்ப்போம். ஆதாரம் http://www.kamakoti.org/kamakoti/details/devibhagvatpurana24.html


கோசல தேசத்தில் தேவவ்ரதன் என்றொருவன் இருந்தான். ஒரு பிள்ளையை வேண்டி யாகம் பல செய்தான்.  யாகத்தில் கோவிலர் என்ற ரிஷி வேதம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வேதத்தின் மந்திரங்களை (ராவணன் போல) இசை வடிவில் பாடக்கூடியவர். சாம கானம் என்று சொல்வர். இசையாக ப்பாடும்காலத்து சொற்களை ப்பிரித்து இசைப்போக்கோடு இணைத்து ப்பாடுவது முறை. அது அறியாது தேவவிரதர் “என்ன ஐயா, வேதத்தில் உள்ள சொற்களை ப்பிரித்தும் சிதைத்தும் பிழையாக சொல்கிறீரே என கோபிக்க உடனே கோவிலர் “ உனக்கு மகன் பிறப்பான், ஆனால் அவன் முட்டாளாக இருப்பான்” என சபித்து விட்டு சென்று விட்டார். அவர் சொன்னது போல தேவவிரதனுக்கு பையன் பிறந்தான். ஆனால் முட்டாள் ஆக இருந்தான். தேவவிரதன் என்னென்னவோ செய்தும் படிப்பு ஏறவில்லை. ஆனால், ஒரு நல்ல குணம் அந்த ப்பிள்ளை பொய்யே சொல்லமாட்டான்.  ஒரு நாள், தன் தகப்பனார் தொல்லை  தாளாமல், வீட்டை விட்டு ஓடி ஒரு காட்டுக்கு ப்போய் அங்கு ஒரு குடிலை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தான். அங்கு இருந்த காட்டு வாசிகளோடு பழகத்துவங்கினான். அவர்களுக்கு அவன் மூடன் என்பது தெரியவில்லை. அது பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. ஆனாலும், உண்மையே பேசுபவன் என்று தெரிந்ததால், சத்யவிரத முனி என்று அவனை அழைத்து வந்தனர். ஒரு நாள், ஒரு காட்டு பன்றியை ஒரு வேடன் துரத்தி வந்தான். அந்த வேடன் காட்டு மிருகங்களை க்கொன்று அதன் இறைச்சியை விற்பவன்.அந்த காட்டு பன்றி ஓடி வந்து சத்ய விரதன் குடிலில் நுழைந்து ஒளிந்து கொண்டது. துரத்தி வந்த வேடன் குடில் வரை வந்து வாசலில் நின்றவாறே “ முனிவரே, இங்கு ஒரு காட்டுப்பன்றி ஓடி வந்ததா?” என்றூ கேட்டான். சத்யவ்ரதருக்கு ப்ரச்சினை ஆரம்பித்தது. அவர் பொய் சொல்லமாட்டார். ஆனால், இங்கு உண்மையை சொன்னால் காட்டு பன்றி பிடிபடும். என்ன செய்வது என்று யோஜித்தார்.  “யாதொன்றும் தீமை இலாது சொலல்”. இங்கு உண்மை சொன்னால் ஒரு உயிர் போகும். சொல்லாமல் இருந்தால் வேடனுக்கு அவன் இன்றைய பொழுது வீணாகும். சாகும் அளவு தீமை இல்லை. எனவே வேடனைப்பார்த்து  திடுக்கிட்டவர் போல ஒரு முறை பரக்க பரக்க பார்த்து விட்டு மறுபடி கண்களை மூடிக்கொண்டார். “ஐம், ஐம், ஐம்” என்றார்.  வேடன் பார்த்தான். ஒரு வேளை அவர் தியானத்தை க்கலைத்து விட்டோமோ என்று பயந்து போய் “ ஐயா, மன்னிக்கணும். நீங்க தவம் பண்ணுங்க. நான் போறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். காட்டுபன்றியும் ஓடி விட்டது. இருந்தாலும், அவனுக்கு உள்ளூற சந்தேகம். அந்த குடிலுக்கு அருகில் உள்ளவர்களை விசாரிக்க ஆரம்பித்தான். “ அதென்ன, அந்த முனிவர் ஐம் ஐம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாரே, அது என்ன தவம்?” என்று கேட்டான்.
அங்கிருந்த பழங்குடியினர் “ என்னது, சத்யவிரதர் ஐம், ஐம் என்று சொல்கிறாரா, எங்களுக்கு தெரியவில்லையே, அவரையே கேட்போம். வா” என்று அழைத்து சென்றனர். எல்லோரும் வருவதை சத்யவிரதர் பார்த்தார். “இதென்னாடா, வம்பா போச்சு? சும்மா அந்த காட்டு பன்றியை காப்பாற்ற ஐம் ஐம் என்று சொல்லப்போய் இவர்கள் எல்லோரும் தவம் செய்வதை பார்க்க வருகிறார்களே என்று மறுபடி ஆசனத்தில் அமர்ந்து “ஐம் ஐம் ஐம்” என்று சொல்ல துவங்கினார்.


வேடனோடு வந்த பழங்குடியினர் “ஆமாம், ஐயா ஏதோ நம்ம நன்மைக்காக தவம் செய்யுறாரு. நீ போய் கெடுக்க இருந்தியே” என்று வேடனை கடிந்துகொண்டு “ஐயா, நீங்க தவம் பண்ணுங்க, பயம் வேண்டாம். யாராவது எங்க கூட்டத்திலே ஒருத்தன் இங்க உட்கார்ந்திருப்போம். எது வேணாலும் கேளுங்க. இந்த மாதிரி வேடன் எவனாவது வந்தா ஒரு கை பாத்துடலாம்” என்று சொல்லி விட்டு சென்று விட்டனர்.
ஒரு ஆள் அங்கே காவலுக்கு உட்கார்ந்தான். சத்யவிரதர் இப்போது கட்டாயமாக தவம் செய்தே ஆக வேண்டிய நிலை. “ஐம். ஐம், ஐம்” என்று இடைவிடாது ஜபம். வேறு வழி?. நாட்கள் ஆகின்றன. எதோ கொஞ்சம் உண்டு விட்டு மிச்ச நேரம் முழுக்க “ஐம், ஐம்” என்ற தவம். அவருக்கு தெரியாது.”ஐம்” என்பது கலைமகளுக்கான அட்சரம் என்று. ஒரு வாரம் ஜபம் முடிந்த உடன் அவருக்கு கலை மகள் காட்சி தந்து “ மகனே, என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டாள். சத்ய விரதர் சொன்னார் “ அன்னையே, பிறந்ததிலிருந்து முட்டாள் என்று அழைக்கும் நிலை என்னுடையது. என்னை ஒரு அறிவாளியாக மாற்ற வேண்டும். அது தான் எனக்கு வேண்டும்” என்று சொன்னவுடன் கலைமகள் அவருக்கு எல்லா அறிவையும் தந்தருளினாள்.

சத்யவிரதருக்கு கலைமகள் அருள் புரிந்தது ஜபத்தினாலா அல்லது அவர் செய்த வாய்மையே பேசுவது என்ற தவத்தினாலா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-21

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

பொருள் : இறைவன் திருவடியை ப்பிடித்து க்கொண்டவருக்கு மற்ற இவ்வுலக பற்றுகள் தானே விலகும்.


ஸ்வாமி சின்மயானந்தர் அவர்கள் மும்பையில் தனது பவ்வாய் ஆசிரமத்தில் ஞான யக் ஞம் என்ற தலைப்பில் சொற்பொழிவுகள் செய்வார். அவற்றை க்கேட்கும் நற்பேறு எனக்கு கிடைத்தது. அப்போது ஒரு நாள் கீதை ஒன்பதாம் அத்தியாயம் பற்றி விளக்கும்போது இந்து மதம் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு விடை அளிக்க முற்பட்டார். மாத்துங்கா ரயில் நிலயத்தில் சபர்பன் ரயிலில் கூட்டத்தில் எப்படி ஏறுகிறீர்கள்? அது தான் இந்து மதம் என்றாரே பார்ப்போம். காலை 9 மணிக்கு மாத்துங்காவில் பீக் அவரில் ரயில் ஏறுவது என்பது எளிது அல்ல. நேரம் மிக குறைவு. எப்படியாவது முண்டி அடித்து ஏறி விட வேண்டும். மும்பைக்கு புதிதாக வருபவர் திகைத்து நிற்பர். இதற்கு ஒரு டெக்னிக் உண்டு. முதலில்  ரயிலில் யாராவது ஒருவரின் கையையோ பையையோ பிடித்து க்கொள்ள வேண்டும். பிறகு காலை மெதுவாக பிளா ட்பாரத்திலிருந்து எடுத்து விட வேண்டும். ஒரு கணம் தான்,  நாம் ரயிலுக்குள் வந்து விடுவோம். இதை சின்மயானந்தர் attachment detachment என்றார். Detachment மட்டும் அல்ல இந்து மதம். இருப்பதையும் விட்டு விட்டால் எங்கே போவது? முதலில் இறைவனின் திருவடியை பிடி. பிறகு உலகப்பற்றை விடு என்பது தான் அவர் அறிவுரை. இது தெரியாமல் பலர் நான் உலகப்பற்றை விடுகிறேன் என்று துவங்கி வழி மாறி ப்போய் விடுவதை பார்க்கிறோம்.
இதற்கு நல்ல உதாரணம் துருவன்.  உத்தானபாதன் என்ற அரசருக்கு இரு மனைவிகள்.  சுநீதி முதல் மனைவி. சுருசி இரண்டாவது மனைவி. சுனீதியின் மகன் துருவன். சுருசியின் மகன் உத்தமன். ஒரு நாள் அரசன் சுருசியோடும் உத்தமனோடும் தனித்திருக்கும் போது அங்கு வந்த 5 வயதுக் குழந்தை துருவன் தானும் தந்தை மடியின் மேல் உட்கார முயன்றான். அதனை க்காணப்பொறுக்காத சுருசி அவனை தள்ளி விட்டு விட்டு “ அப்பா மடி மேல் நீ ஏற வேண்டும் என்றால் என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்” என்று கடும் சொற்களால் சாடினாள். அழுது கொண்டே வரும் துருவனை அவன் அன்னை சுனீதி அவனை த்தேற்றி “அப்பா, நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான். அப்பாவுக்கோ சித்தி மீதுதான் பிரியம். நீயோ என் மகன். அதனால் தான் இப்படி கடும் சொற்களை நீ கேட்க வேண்டியதிருக்கிறது.” என்று சொன்னாள். துருவன் விடவில்லை,” இல்லையம்மா, இந்த நிலை மாற வேண்டும். எனக்கும் அப்பா மடி மேல் உட்கார வேண்டும். “ என்று பிடிவாதம் பிடிக்கவே சுனீதி, “ கண்ணா, அது நிச்சயம் நடக்கும். நாராயணரை வேண்டு” என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தாள்.” நாராயணர் எங்கு இருப்பார்?” அடுத்த கேள்வி. “ சரி தான் போ, அது எனக்கென்ன தெரியும்? காட்டில் தவம் செய்கிறார்களே, முனிவர்கள், அவர்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம்” என்றூ சொல்லி தூ ங்க வைத்தாள். துருவன் தூங்கிவிட்டதைப்போல் நடித்து விட்டு,  அம்மா துயின்றதும் அறையை விட்டு நழுவினான். நள்ளிரவு, குழந்தை துருவன் அரண்மனையிலிருந்தும் கிளம்பி காட்டுக்கு நாராயணனை த்தேடி சென்றான். அங்கு அவன் அதிர்ஷ்டம் சப்த ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தனர். ஒரு ஐந்து வயது பாலகன் இந்த நள்ளிரவில் காட்டுக்குள் தனியாக வருவது கண்டு அவர்களுக்கு அதிசயம்.”யாரப்பா, நீ தனியாக எதற்கு காட்டுக்குள் வருகிறாய்?” என்று அவர்கள் அன்புடன் கேட்டார்கள். துருவன் எல்லா விவரத்தையும் சொல்லி இதற்கெல்லாம் தீர்வு காண நாராயணரை பார்த்தே ஆக வேண்டும் என்ற தன் உறுதியை தெரிவித்தான். ரிஷிகளுக்கு ஆச்சரியம். இத்தனை சின்ன வயதில் இவ்வளவு உறுதியா? என்று வியந்த படி “ சரி, துருவா, நீ இங்கு அமர்ந்து ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரத்தை விடாமல் சொல்லி வா. நிச்சயம் நாராயணர் வருவார்” என்று சொல்லி விட்டு புறப்பட்டார்கள். துருவன் அவர்களை நிறுத்தினான் ”ஒரு நிமிஷம் இருங்கள். நாராயணர் எப்படி இருப்பார்? அதையும் சொல்லுங்கள். அப்போது தானே  என் தவத்தின் பயனாக அவர் வரும்போது யார் என்று எனக்கு அடையாளம் தெரியும்?” என்றான். ரிஷிகள் தங்கள் மனத்துள் அவனை மெச்சியவாறே “ அதென்னப்பா, பெரிய விஷயம். சங்கு, சக்கரம் வைத்திருப்பார். மார்பில் கௌஸ்துப மணி, இடுப்பில் பட்டு பீதாம்பரம், நீளமாக மிக அழகான மாலை எல்லாம் அணிந்திருப்பார். போதுமா?’ என்று விளக்கி விட்டு சென்றார்கள். அதற்குப்பிறகு ஐந்து மாதம் துருவன் தவம் செய்தான். முதலில் காய், கனி சாப்பிட்டவன் ஐந்தாவது மாதம் எதையும் உட்கொள்ளவில்லை. பெருமாள் எப்படி பொறுப்பார்? உடனே அவன் முன் தோன்றினார். “ துருவா கண்ணைத்திறந்து பார். நான் தான் நாராயணன் வந்திருக்கிறேன்” என்றார். துருவன் கண்ணை த்திறந்து பார்த்தான். ஸ்வாமி மாலை அணியாமல் வந்து விட்டார். துருவன் “இல்லை, நீங்கள் நாராயணன் இல்லை. மாலை எங்க்கே? என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் கண்ணை மூடி க்கொள் என்று சொல்லி ஒரு நிமிடத்தில் சங்கு, சக்கரத்துடன், கௌஸ்துப மணீ, பட்டு பீதாம்பரம் எல்லாம் அணிந்து கொண்டிருக்கிறாரா என்று முழுவதும் ஒரு முறை சரி பார்த்து விட்டு” ஸ்வாமி’ என்றூ காலில் விழுந்தான். “ குழந்தாய், இனிமேளும் இப்படி உன்னை வருத்தி க்கொள்ளாதே. உனக்கு என்ன வேண்டும்? கேள்” என்றார். துருவனுக்கு அப்போது தான் எதற்கு வந்தோம் என்று மறந்து விட்டது. இறைவன் வந்த வுடன் மற்ற பற்றுகள் தாமே விலகி விடும் அல்லவா? “ யோஜிக்கிறான். பிறகு, “ ஸ்வாமி, எனக்கு எதுவும் வேண்டாம். உங்களை மறக்காமல் இருக்க அருள் புரிய வேண்டும்” என்றான். பெருமாள் சிரித்தார். அவருக்கு மறக்கவில்லை. “ துருவா, நீ முதலில் உன் வீட்டுக்கு செல். உனக்கு அரசனின் அன்பு மட்டும் அல்ல. அரச பதவியும் கிடைக்கும். அரசாண்ட பின் உன் பெருமை என்றும் எல்லோருக்கும் தெரியும் வண்ணம் துருவ நக்ஷத்திரமாக சுடர் விடுவாய்” என்று வரம் தந்தார்.

துருவன் ஐந்து வயதில் இறைவனை பற்றினான் என்பதும் அந்த பற்று வலிமையோடு இருந்ததால் மற்ற பற்றுகள் விலகின என்பதும் இக்கதையிலிருந்து குறளுக்கு  கிடைக்கும் விளக்கம்.

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-20

குறள் எண் 266 அதிகாரம் தவம்


தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு


பொருள்: தனக்கு உரியவையான கருமங்களை செய்பவர் தவம் செய்பவர் என க்கருதப்படுவார். அதை விடுத்து தவம் என நினைத்து ஒருவர் செய்யும் எல்லா செயல்களும் ஆசைக்குட்பட்டு செய்யப்படும் வீண் செயல்களே.


“என்னோடு போர் புரிய வந்திருப்பவரை ப்பார்க்கிறேன் “ என்று சொல்லி இரு சேனைகளுக்கும் இடையே தன் தேரை நிறுத்துமாறு ஸ்ரீ க்ருஷ்ணரிடம் சொன்ன  மாவீரன் அர்ஜுனன் அது வரை இருந்த தன்னம்பிக்கையை இழந்து”ஐயோ, எதிரே என் தம்பி இருக்கிறானே, குரு இருக்கிறாரே, மச்சினன் இருக்கிறானே, நான் இவர்களோடு சண்டை போடுவதா ?  சே சே , க்ருஷ்ணா, என்ன காரியம் செய்ய சொல்கிறாய்? இந்த பாவ காரியம் செய்வதற்கு பதில் மொட்டையடித்து க்கொண்டு சாமியாராகி பிச்சையெடுத்து சாப்பிடுவேன்” என்று கண்ணீரும் கம்பலையும் ஆக வில்லை தூரப்போட்டு விட்டு அமர்ந்தது கீதையின் முதல் அத்தியாயம் காட்டும் காட்சி.


அதன்பிறகு புன்னகை புரிந்த வாறு (அசடுகளை ப்பார்த்து பரமன் சிரிக்காமல் அழவா முடியும்?)  பார்த்தனுக்கு ஒவ்வொருவனும் தான் எடுத்துக்கொண்ட, தனக்கென அமைந்த, தன் முன்னோர்களால் போற்றப்பட்ட, விதியால் வந்து சேர்ந்த செயல்களை செய்யாமல் வேறு எத்தவத்தை செய்தாலும் அது தவம் ஆகாது என குட்டி குட்டி க்ருஷ்ணன் சொல்லி த்தந்தது கீதையின் பிற அத்தியாயங்கள்.


அர்ஜுனன் அழுகையை நிறுத்த போர் முனையில் சொல்ல வாய் கூசும் விஷயத்தை க்ருஷ்ணன் சொல்வார் “ அர்ஜுனா, நீ இந்த ப்போரில் மாண்டாலும் பரவாயில்லையப்பா. நீ போர் புரி. உனக்கென  விதிக்கப்பட்ட செயல்களிலிருந்தும் தப்பிக்க மற்ற பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாலும் அதன் விளைவு மிக பயங்கரமாக இருக்கும். அதற்கு ப்பதில் நீ போரே புரிந்து விடலாம்”. தன் கருமம் செய்வது தான் தவம் என்பதை இதை விட எப்படி வலியுறுத்துவது?
நாரதர் ஒரு முறை ஸ்ரீமன் நாராயணனிடம் சொன்னார் “ஸ்வாமி,நான் 24 மணி நேரமும் உன் நாமத்தை ஜெபித்துக்கொண்டே இருக்கிறேன் பாருங்கள். என் தவத்தை மூவுலகத்தினரும் பாராட்டவே செய்கின்றனர். என்னை விட சிறந்த பக்தன் இருப்பானா என்ன ? இருக்க வே முடியாது” என்று சற்று தற் பெருமையாக பேசிக்கொண்டார். நாராயணன் பார்த்தார் “ ஓஹோ? அவ்வளவு பெருமையாக இருக்கிறதா? உனக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டியதுதான்” என்று சொல்லி விட்டு “ நாரதா, உன் பக்தி மிகவும் உயர்ந்தது தான். ஆனால், எனக்கென்னவோ அதோ கீழே பார், பூலோகத்தில் ஒரு குக்கிராமத்தில் அந்த ஏழைக்குடியானவன் இருக்கிறான் பார், அவன் தான் உன்னை விட நிறைய ஜபம், தவம் செய்கிறான் என்று தோன்றுகிறது.” என்று மூட்டி விட்டார். நாரதர் வேலையை  பெருமாள் செய்துவிட்டார்.
நாரதருக்கு இருப்பு க்கொள்ளவில்லை. அடுத்த நாள் விடிவதற்கு முன்பே அந்த ஏழைக்குடியானவன் குடிசைக்கு முன்பு வந்து அமர்ந்து விட்டார். கதிரவன் எழும் நேரம். கோழி கூவிற்று. குடியானவன் எழுந்தான். “நாராயணா” என்று சொன்னான். நாரதர் அதை ப்பதிவு செய்து கொண்டார். பிறகு கை கால் கழுவிக்கொண்டான். மாட்டுக்கு தீனி வைத்தான். அதை ஓட்டிக்கொண்டு வயலுக்கு சென்றான். நாரதர் பின்னே சென்றார். அவன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தான்.  பகல் நேரம் வாய்க்காலில் குளித்தான். அவன் மனைவி கொண்டு வந்த கஞ்சியை குடித்தான். நாரதர் பார்த்தார் அவன் தவமும் செய்யவில்லை. ஜெபமும் செய்யக்காணோம்.  மாலை ஆயிற்று. கதிரவன் விழுந்தான். மாட்டை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தான் குடியானவன். இரவு உணவு முடிந்தது. நாரதர் பொறுமையிழந்தார். என்ன இது? க்ருஷ்ணன் சொன்னதுக்கு முற்றும் மாறாயிருக்கிறதே?. குடியானவன் காலை நீட்டி படுத்தான். “நாராயணா”  என்று சொன்னான்.  தூங்கி விட்டான். நாரதர் மறுபடி அதை தன் ஏட்டில் பதிவு செய்து கொண்டார். நேரே வைகுண்டத்துக்கு வந்தார். “நாராயணா, இது என்ன விளையாட்டு ? அவனை ஒரு நாள் முழுவதும் பார்த்தேன். காலை ஒரு முறை நாராயணா என்றான். இரவு ஒரு முறை நாராயணா என்று சொன்னான். அவனை ப்போய் என்னை விட சிறந்த பக்தன் என்கிறாய். இது பொருத்தமாக இருக்கிறதா? நான் சதா சர்வ காலமும் உன்னை ப்பற்றியே  நினைத்து உன் நாமத்தை சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். பெருமாள் “ அதை விடுப்பா, ஏதோ சொல்லிவிட்டேன். இப்போது இரவாகி விட்டது. இப்போது உனக்கு ஒரு வேலை இருக்கிறது. நாளைக்காலை சீக்கிரம் எழுந்து அதோ அந்த ப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மூவுலகமும் சுற்றி வர வேண்டும். இன்னொரு விஷயம். அதில் பிராட்டியை எண்ணையை நிரப்ப சொன்னேன். அவள் விளிம்பு வரை நிரப்பி விட்டாள் போலிருக்கிறது. அவளுக்கு எல்லாமே நிரம்பியிருக்க வேண்டும். நான் என்ன செய்வேன்? அதிலிருந்து ஒரு துளி எண்ணை கூட சிந்தாமல் மூவுலகமும் சுற்றி வந்து விடு. இது ரொம்ப முக்கியம். அப்புறம், இன்னொரு விஷயம். நாளை இரவுக்குள் வந்து விடவேண்டும். சரியா? நீ போய் வா.  நான் இப்போது தூங்க வேண்டும்”  என்று படுத்து விட்டார்.
நாரதர் “ சரி, பரந்தாமா, உன் ஆக்ஞை. நாராயண”  என்று சொல்லி தூங்க சென்றார். அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து பெருமாளை எழுப்பாமல் அந்த எண்ணைப்பாத்திரத்தை மட்டும் தன் கையில் எடுத்துக்கொண்டார். வான் வழியாக செல்ல த்தொடங்கினார். எண்ணைப்பாத்திரம் வழிய வழிய நிரப்ப பட்டிருந்தது. எந்த நிமிடம் அது சொட்டும் என்று தெரியாது. மிக பொறுமையாக இரு கண்களையும் பாத்திரத்தின் மீதே வைத்துக்கொண்டு மெதுவாக வான் வெளியில் சென்றார். வழியில் தேவர் எவ்வளவோ பேர் வந்தனர். நாரதரிடம் பேச்சு கொடுத்தனர். அவர்களை ஏறிட்டு க்கூட பார்ககாமல் தன் கை மீதிருந்த எண்ணைப் பாத்திரத்தின் மீதே வைத்த கண் வாங்காமல் சென்றார். சாதாரணமாக மூவுலகையும் சில கணங்களில் சுற்றி வந்து விடும் நாரதருக்கு பல மணி நேரம் ஆயிற்று இம்முறை அதே உலகங்களை சுற்றி வர. ஒரு வழியாக இரவு நேரத்துக்குள் முடித்தார். வைகுண்டத்துக்கு வந்தார். பெருமாளை வணங்கினார். “ஸ்வாமி, தாங்கள் சொன்ன வேலையை திறம்பட முடித்து விட்டேன். இதோ பாருங்கள். நீங்கள் தந்த எண்ணை பாத்திரம். ஒரு சொட்டு கூட கீழே சிந்தவில்லை. சரிபார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு பெருமூச்சு விட்டுக்கொண்டே அமர்ந்தார். பின்னே ? அசதி இருக்காதா? குன்ந்து கொண்டே வந்ததில் கழுத்தெல்லாம் வலி வேறு.
பெருமாள் புன்னகைத்தார். “ மிக நல்ல காரியம் செய்தாய், நாரதா, ஆமாம், இன்று எத்தனை ஆயிரம் முறை என் நாமத்தை ஜபம் செய்தாய்? “ என்று ஆரம்பித்தார்.
நாரதருக்கு தூக்கி வாரிப்போட்டது. “ என்னது? ஜபமா? என்ன ஸ்வாமி, ஒரு பாத்திரத்தில் விளிம்பு வரை இருக்கும் எண்ணையை த்தூக்கி கொண்டு மூன்று லோகமும் அலைந்து விட்டு வந்திருக்கிறேன். அதற்கு பாராட்டை க்காணோம். எத்தனை முறை என் நாமத்தை சொன்னாய் என்கிறீர்!. உங்களுக்கு நான் பட்ட கஷ்டம் தெரியவே இல்லையே. நான் பாத்திரத்தை பார்ப்பேனா, பஜனை பண்ணுவேனா, ?” என்று அலுத்துக்கொண்டார்.
நாராயணன் “ ஏண்டாப்பா, ஒரு பாத்திரத்தை தூக்கி கொண்டு ஒரு நாள் சுற்றி வருவதற்குள்ளேயே ஜபமாவது தவமாவது என்று அலுத்து க்கொள்கிறாய். ஒரு தடவை கூட என் பெயரை உச்சரிக்கவில்லை. அவன் பாவம் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கிறான். நிலத்தை உழுது சாகுபடி செய்கிறான். முதுகொடிய வயலில் உழுகிறான். இவ்வளவும் செய்தும் தினம் ஒரு இரண்டு முறையாவது என் பெயரை சொன்னானே, அது பெரிய விஷயம் இல்லையா?”  என்று கேட்டார்.
நாரதர் விடவில்லை,” அது எப்படி, ஸ்வாமி, நிலத்துக்கு போய் உழுவதும், நான் பகவத் த்யானம் பண்ணுவதும் ஒன்றாகி விடுமா? சும்மா விளையாட்டுக்கு என்னை கேலி செய்வதற்காக சொல்கிறீர்” என்றார்.
பெருமாள் சொன்னார்,” கேலி இல்லை. உண்மை உனக்கு தெரிய வேண்டும் என்பதற்காக த்தான் இந்த வேலையைக்கொடுத்தேன். அவனவன் கருமத்தை அவனவன் செய்வதுதான் தவம். உனக்கு உகந்த வேலையை விட்டுவிட்டு என் பேரை சொல்லு என்று நான் என்றாவது சொன்னேனா? இதற்காகவே ஒரு அவதாரம் எடுத்து அடித்து சொல்லியும் உம்மைப்போன்ற ஆட்களுக்கு தெரியவில்லையே” என்று சொல்லி நாரதருக்கு தெளிவு படுத்தியதாக கதை.

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-19

குறள் 245 அதிகாரம் 25 அருளுடைமை


அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.


பொருள் : அருளினை க்கைக்கொண்டு வாழ்பவர்க்கு அல்லல் இல்லை. இந்த வளி மண்டலத்திலிருந்து வளங்கள் யாவையும் பெற்ற இவ்வுலகு இதற்கு சான்று.
இவ்வுலகு எப்படி தோன்றிற்று? வளி (காற்று செல்லும் ஊடகம்) புவியில் இருந்த நீரோடு கலந்து உயிரி்னத்தை தோற்றுவித்தது. வளி இல்லாத கிரகங்களில் உயிர் இல்லை. மஹாகவி பாரதியார் பாடுவார்


“உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.
உயிர்தான் காற்று. உயிர் பொருள், காற்று அதன் செய்கை.
பூமித்தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று.
காற்றே உயிர். அவன் உயிர்களை அழிப்பவன்.
காற்றே உயிர். எனவே, உயிர்கள் அழிவதில்லை.
சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது.
மரண மில்லை. அகில வுலகமும் உயிர் நிலையே.
தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் -- எல்லாம்   உயிர்ச் செயல்.
உயிரை வாழ்த்துகின்றோம்.


காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது.
அவனைரிஷிகள் “ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம” என்று   போற்றுகிறார்கள்.
ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக்   காத்திடுக.” (வசன கவிதை-காற்று)


தைத்திரீய உபனிஷத்  போற்றுகிறது


நமோ ப்ரம்மணே நமஸ்தே வாயோ
த்வம் ஏவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மா அஸி த்வாம் ஏவ ப்ரத்யக்ஷம் ப்ரம்ம வதிஷ்யாமி
ருதம் வதிஷ்யாமி சத்யம் வதிஷ்யாமி
பரம்பொருளை வணங்குகிறேண். வாயுவே உன்னை வணங்க்குகிறேன். ஏனென்றால், நீ தான் கண்ணுக்கு தெரிகின்ற பரம்பொருள்
ஆம், அதை எல்லோருக்கும் அறிவிக்கிறேன். நீயே கண்ணுக்கு  தெரிந்த பரம்பொருளாக உள்ளாய். உண்மை சொல்கிறேன்.  தெய்வீகமான நிரந்தர உண்மையை சொல்கிறேன்.


வளி வழங்கிய உலகம் நம் உலகம். இதில் உள்ள “எத்தனை கோடி  இன்பங்களும்”  வளி தந்தவை. அவன் அருளாளன். ஆனால், இவ்வுலகம் அந்த வளங்களோடு இன்பமாக இருக்கின்றதா? இல்லை பல பகுதிகளாக ப்பிரிந்து அடித்துக்கொள்கின்றதா? இதற்கு பதில் எல்லோருக்கும் தெரியும். சூது,வாது, துன்பம், சண்டை கலந்த இவ்வுலகத்தின் போராட்டங்களில் வளி அல்லல் படுவதில்லை. அது தன் இயல்பு மாறவும் இல்லை. கோணவும் இல்லை. கீதையில் கண்ணன் சொல்வது போல “நாம் வளியில் இருக்கிறோம். அது நம்மிடம் இல்லை”. அது போலத்தான் அருளாளர்.  அருளாளர்கள் நமக்கு அருளால் உந்தப்பட்டு எத்தனையோ செய்வார்கள். ஆனால், அதன் பின் அந்த  அருளை வைத்துக்கொண்டு நாம் சுகமாக இருந்தாலும் சரி, சண்டை போட்டுக்கொண்டு அவதிப்பட்டாலும் சரி, அவர்கள் அல்லல் படுவதில்லை.
ஜனக மஹாராஜர் ஒரு அருளாளர். அரசராயிருந்த போதும் தினசரி பல புனிதர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மெய்ப்பொருளை உணர்ந்தவர். அவர் ஒரு நாள் தன் பரிவாரங்களோடு அருகில் இருந்த கானகத்துக்கு சென்று முனிவர்களை சந்தித்து வேதாந்த சாரத்தை ப்பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். அரசரோடு கூட அந்த அரசவையில் இருந்த பல துறவிகளும் கூட சென்றிருந்தனர்.


விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, நகரத்திலிருந்து ஓடி வந்த ஒரு வீரன் “ ஐயா, மஹாராஜா, மிதிலையில் பெரிய தீப்பற்றி எரிகிறது” என்று கத்திக்கொண்டே வந்தான். ஜனகர் பொறுமையாக “அதென்னாப்பா, முனிவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது மரியாதையில்லாமல் குறுக்கே நுழைகிறாய், அவர்களை வணங்கி விட்டு பேசுவது தான் முறை என்று உனக்கு தெரியாதா” என்று கேட்டார். கேட்டு திரும்பி பார்க்கிறார், கூட வந்த ஒரு சன்யாசியையும் காணோம். எல்லோரும் மிதிலை நகரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். ஜனகர் எந்த கவன சிதறலும் இல்லாமல் அமர்ந்திருந்தார்.


முனிவர் சொன்னார், “மன்னா, உன் மனம் எவ்வளவு பண்பட்டது? எல்லா சொத்துக்களும் உள்ள மிதிலையின் அரசன்  நீ அல்லல் படாமல் முழுமையான கவனத்தோடு இருக்கிறாய். ஒரு கோவணம் தவிர வேறு எதுவும் இல்லாத பரதேசிகளோ நீ முந்தி நான் முந்தி என்று ஓடி க்கொண்டிருக்கின்றனரே !!” என்று அதிசயப்பட்டார்.

உலகம் வளியில் உள்ளது. வளி உலகத்தில் இல்லை.ஜனகர் மிதிலையில் இருந்தார். ஆனால், மிதிலை அவரிடம் இல்லை. அதனால் அல்லல் இல்லை.

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-18

குறள் 303 அதிகாரம் 31 வெகுளாமை


மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.


பொருள்: யாரிடத்தும் சினம் என்பதை மறந்து விட வேண்டும்.  ஏனெனில், தீய விளைவுகள் சினத்தினால் ஏற்படும்.


“சினம் மறத்தல்” என்ற சொற்றொடர் சற்றே வித்தியாசமாக இருக்கிறது. (மற என்றால் forget என்ற பொருள் உண்டு. Give up என்ற பொருளும் உண்டு.எல்லோரும் give up என்றூ தான் எழுதியுள்ளர்கள்)  சினமே கொள்ளாமல் இருப்பதென்பது இயலக்கூடிய விஷயமா என்று தெரியவில்லை. ஏனெனில்,   அந்தக்காலத்தில்  பல முனிவர்களே சினம் கொண்டவர்களாக  இருந்திருக்கிறார்கள். கோசிகன் என அழைக்கப்படும் விச்வாமித்திரர் கோபம் உடையவர். பரசுராமரோ அதைவிட பயங்கரமான கோபம் உடையவர். ஆயினும், இருவருக்கும் ஒப்பிட்டு பார்த்தால் கோபத்திலும் இரு வகைகள் உண்டு என்று தெளிவாகின்றது. (ஆரம்பித்துவிட்டது என் அதிகப்பிரசங்கம்!!)
முதலில் கோசிகரைப்பார்ப்போம். அவர் பால காண்டத்தில் நுழையும் போது கம்பர் சொல்கிறார், “ மன் உயிர் அடங்கலும் உலகும் வேறு அமைத்து தேவருடன் இடங்கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு” என்ற திண்ணம் கொண்ட கோசிகன் வருகிறார்  என்றார். எல்லாவற்றையும் புதிதாக படைப்பேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இப்போது உள்ள உலகத்தின் மேல் சினம் கொண்டவர். அந்த சினத்தினால் புதியதோர் உலகம் படைத்து க்காட்டியவர். உலக மாந்தருக்கெல்லாம் நண்பன் என்பதால் விச்வாமித்திரன் ஆனார். பிறவியில் அரசர். வசிஷ்டரோடு காமதேனுவுக்காக வந்த சண்டையில் தவசியாகி அவர் வாயால் ப்ரம்ம ரிஷி என்ற பட்டத்தை வாங்கியவர்.
அவர் அவைக்கு வந்து அமர்ந்து “யாகத்தைக்காக்க மூத்த பிள்ளையை அனுப்பு”  எனவும் தசரதருக்கு  தேள் கொட்டியது போல் ஆயிற்று. “ அவன் சின்ன பிள்ளை. நானே வருகிறேனே” என்று தட்டி கழிக்கிறார். அப்போது “மண்படைத்த முனி முனிவோடு எழுந்தனன்” என்பார் கம்பர். சினம் என்றால் அப்படி ஒரு கோபம்.  உடனே வசிஷ்டர் தயரதனை சமாதானப்படுத்தி ராம இலக்குவரை க்கூப்பிட்டு விச்வாமித்திரரிடம் ஒப்படைக்கவும், அவர் “சிந்தை எடுத்த சீற்றம் விட்டு” (சிந்தையில் சினம் நீங்குகிறது.) புறப்படுகிறார். கோசிகர் கோபம்,  கோபம் இருக்கும் இடம் குணம் இருக்கும் என்பார்களே அது போல இருக்கிறது. அது நன்மையாக வே முடிந்திருக்கிறது. ஒருவகையில் அது constructive anger என்று வைத்துக்கொள்ளுங்களேன்.  அவர் வெகுளி மறந்து போகின்ற வெகுளியாக இருக்கிறது. அவர் புகழ் நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எல்லோருக்கும் தெரியும். ராமபிரானுக்கே கல்யாணம் செய்து வைத்தவர். இது ஒரு புறம்
பரசுராமர் கோபமோ அடங்காத கோபமாக இருக்கிறது.  பழிவாங்கும் கோபம் ஆக இருக்கிறது.  அவரை க்கம்பர் அறிமுகப்படுத்தும் போது “அனல் கால்வான் உன்னும் தழல் விழியான் உரும் அதிர்கின்றது ஓர் உரையான்” (மூச்சுக்காற்றே அனலாக வீசுகிறது. விழியும் தணல் போல் இருக்கிறது. பேசினால் உலகு அதிர்கிறது) என்று நம்மை பயமுறுத்துகிறார். தேவர்அனைவரும்” ஐயோ விண்ணுலகு மண்ணிலும் மண்ணுலகு விண்ணிலும் மாறி வைத்து விடுவாரோ” என்று அச்சப்பட்டனர்.  இந்த அச்சம் கோசிகரை ப்பார்த்தால் வருவதில்லை.ஊழிக்காலத்தில் சிவபெருமான் வருவாரே அவரை ப்போல் அல்லவா இருக்கிறார் பரசுராமர். தன் தந்தையை க்கொன்றதால் இவ்வுலக அரசர்களையெல்லாம் அழித்து அவர்களின் இருபத்தோரு தலைமுறையை பூண்டோடு அழித்தவர் பரசுராமர்.  பிறகு தான் வென்ற இவ்வுலகை காச்யப முனிவருக்கு தானம் செய்து விட்டு தனக்கென ஒரு தனி ஊரை  ச்ருஷ்டித்து க்கொண்டு சென்றவர். இந்த மக்கள் சகவாசமே வேண்டாம் என்று அங்கு சென்ற பரசுராமர் நிம்மதியாக தவம் செய்யவேண்டியதுதானே !! அதுதான் இல்லை. அவர் தான் கொண்ட சினத்தை மறக்கவில்லை. அதன் காரணமாக, ஒருனாள் அவர் திரும்பி வருகிறார். எப்போது?  ராமர் திருமணம் முடிந்து எல்லோரும் அயோத்திக்கு திரும்புகிற சமயம்  நந்தி போல் குறுக்கே நிற்கிறார்.  இவர் எதற்கு இங்கு வந்தார் என்று தசரதருக்கு மூச்சு நின்று விட்டது.இருக்கிற ஒன்றிரண்டு அரசர்களையும் கொன்று விடலாம் என வந்திருக்கிறாரோ என ஐயம். பரசுராமர் ராமரைப்பார்த்து,” ஒகோ, நீதானா அவன்?
ஏற்கெனவே உடைந்த சிவதனுசை உடைத்த வீரன் நீதானா ?  உன் வலிமை என்ன என்று பார்க்க த்தான் வந்தேன்” என்றார் பரசுராமர். தயரதரோ “ ஐயா, உமது வலிமை எமக்கு தெரிந்ததே.ராமனை ஒன்றும் செய்யாதீர்கள். அவனுக்கும் உங்களுக்கும் என்ன பகை? “ என்று காலில் விழுகிறார்.  பரசுராமர் “நீ சிறிது அமைதியாய் இரு. நான் சினத்தை அடக்கிக்கொண்டு வந்திருக்கிறேன். கோவத்தைக்கிளறாதே. இவன் சிவ தனுசை ஒடித்த சத்தம் கேட்டது. என் தவம் கலைந்தது. சத்திரிய வம்சமே அழிய வேண்டும் என்று நான் செய்த கொலைகளுக்குப்பிறகும் இப்படி ஒரு வீரனா ? விடுவேனா? விட மாட்டேன். அடேய், பொடிப்பையா, இந்தா, இந்த வில்லை ப்பிடி. இதில் நாணேற்று பார்ப்போம்” என்றதும் ராமர் கையில் வில்லை வாங்கினார். ஏதோ பழகிய வில்லை கையாள்வது போல் மிக எளிதாக நாணேற்றி “ஐயா,முனிவரே, நணேற்றிவிட்டேன். இப்போது அம்பை எங்கு செலுத்துவது?” என்று கேட்கவே ராமர் யார் என்று புரிந்து கொண்ட பரசுராமர் “என் செய்தவம் யாவையும் சிதைக்கவே” என்று சொல்லவும் அந்த அம்பு அவர் செய்த தவம் அனைத்தையும் வாரிக்கொண்டு ராமரிடம் வந்தது.

இப்போது குறளைப்பார்ப்போம். “யாரிடத்தும் வெகுளி மறத்தல்”.கோ சிகர் சினம் கொள்ளுகிறார். ஆனல் அது ஒரு நிமிடம் தான். மாறிவிடுகிறது. அதை மறந்தும் விடுகிறார். அடுத்த நிமிடம் அவர் தன் இயல்புக்கு வந்து விடுகிறார். அந்த சினம் பகைமையினால் அல்ல. அவருக்குள்ள உரிமையினால். அது எதிராளிக்கு ஒரு மருந்து போல் இருக்கிறது. ஆனால், பரசுராமர் சினமோ அடங்கா சினமாக இருக்கிறது. அது மருந்தல்ல. விடம்.  அதை  Destructive anger.என்று சொல்லலாம்.  இறுதியில், அது அவருக்கு “ தீய பிறத்தல்” அதாவது தலை குனிவை ஏற்படுத்தியது.

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-17

குறள் எண் 202 அதிகாரம் 21 தீவினையச்சம்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.


பொருள்: தீய விளைவுகளை ஏற்படுத்துவதால் தீய செயல்கள் ஒருவனால் தீயை விட அபாயகரம் என்று கருதி அஞ்சி தள்ள ப்படவேண்டும்.


தீ கொடியது. உயிரை அழிக்கக்கூடியது. ஆனால், அதனை விட கொடிய தீய விளைவுகளை தீய செயல்கள் ஏற்படுத்தும் என வள்ளுவப்பெருமான் நமக்கு அறிவுறுத்துகிறார். தீயை மற்றவர் பார்க்க முடியும். அணைக்க முடியும். ஆனால் தீய விளைவுகளை மற்றவரால் மாற்ற முடியாமல் கூட போய் விடலாம்.  பரிமேலழகர் சொல்லுவார். “ இப்பிறப்பில் நமக்கு பாதகம் விளைவித்த தீ அடுத்த பிறவியில் தொடர்ந்து வராது. தீய விளைவுகள் நமக்கு அடுத்த பிறவியில் தொடரக்கூடும்.” என்பார். அடுத்த பிறவியை விடுங்கள். ஆணி மாண்டவ்யர் என்ற முனிவர் தன் சிறு வயதில் எறும்புகளை க்குச்சியில் கோர்த்து விளையாடுவார். அவர் அந்த பிராயத்தில் தான் செய்த தீவினையை உணரக்கூட  இல்லை. ஆனால், அவர் வளர்ந்து முனிவர் ஆகி காட்டில் தவம் செய்யும் போது அரசரின் காவலர்களால் பிடிக்கப்பட்டு பொய் குற்றம் சாட்டப்பட்டு கழுவில் ஏற்ற ப்படுகிறார். நான் என்ன தவறு செய்தேன்? தவம் செய்தது ஒரு பாவமா? என்று கேட்ட ஆணி மாண்டவ்யருக்கு தர்ம தேவதை “ அப்பா? ஆறு வயதில் எறும்புகளை குச்சியில் குத்தியதை மறந்து விட்டாயா?” என்று நினைவுறுத்தியதாம். ஆறு வயதில் அவருக்கு தீக்காயம் பட்டிருந்தால் அந்த வடு கூட அறுபது வயதில் இருக்காது. ஆனால், தீய செயல் துரத்துகிறதே, ஐயா! தீய செயல் செய்து விட்டு தீய விளைவுகள் வரக்கூடாது என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம். உதாரணத்துக்கு, வாலியை எடுத்து க்கொள்வோம். ராமனால் வதம் செய்யப்பட்ட வானர வேந்தன் வாலி. கம்பர் அவனை அறிமுகம் செய்யும்போதே சொல்கிறார் “ நாலு வேதத்துக்கும் வேலி போன்றவன். சிவபெருமான் அருள் பெற்றவன். அளவில்லாத வலிமை பெற்றவன்.” என்று சொல்கிறார். தேவர் அசுரர் இருவரும் சேர்ந்து கடைய முடியாத மந்தர மலையை ஒருவனாய் கடைவான். எட்டுத்திக்கிலும் சென்று ஒவ்வொரு நாளும் சிவனை வழிபடுவான்.எதிரில் நிற்பவனின் பாதி பலம் இவனுக்கு வரும் என்ற வரம் பெற்றவன். தன் வாலில் ராவணனை க்கட்டி தூக்கி சென்றவன். அரசாளும் போது ஒரு நாள் , அரக்கன் மாயாவியை கொல்ல குகைக்குள் சென்று வாலி வெளியே வராத காரணத்தினால் சுக்ரீவனை அரசராக்க வானரர் முடிவு செய்தனர். ஆனால், பல மாதம் கழித்து மாயாவியை க்கொன்று வெளியே வந்த வாலி தன் தம்பி “ அண்ணா, நான் செய்தது தவறுதான். உன் அமைச்சர்கள் அறிவுரைப்படிதான் செய்தேன்.  நீ இந்த அரசை திருப்பி எடுத்துக்கொள்” எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சுக்ரீவனை கொலை வெறியோடு தாக்கி அவன் மனையாளையும் கவர்ந்து சென்றான்.
மறைந்து வாழ்ந்து வந்த சுக்ரீவனுக்கு தான் கொடுத்த வாக்கின் படி ராமன் சுக்ரீவனுக்கு தன் அரசையும் மனையாளையும் மீட்டு த்தர  மறைந்திருந்து அம்பு எய்தி வல்லியை க்கொன்றார். வாலி தன்னை க்கொன்றது தவறு என்று ராமரிடம் வாதாடும் செய்யுள்கள் கம்ப ராமாயணத்தில் மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளில் வாலி சொல்கிறான் “ மணமும் இல்லை, மறை நெறி வந்தன. குணமும் இல்லை குல முதற்கு ஒத்தன” எங்களுக்கு வேதம் இல்லை. திருமணம் இல்லை. நாங்கள் குரங்குகள். எப்படி வேண்டுமானால் இருப்போம். நீ யார் கேட்க? ” என்ற வாதத்தை முன் வைக்கிறான். இதை படித்த தமிழறிஞர் பலர் வாலி வதம் ராமன் செய்த தவறு என்பதற்கு ஆதாரம் தேடும் வகையாக மேடையில் உரக்க சொல்வார்கள். அவர்கள் மறப்பது என்னவென்றால், இது கம்பர் கருத்தல்ல. வாலி தன் தரப்பில் ஒரு கிரிமினல் வக்கீல் போல வைக்கும் defence வாதத்தை கம்பர் அழகாக சொல்கிறார்.  அவ்வளவே. ராமாயணம் படித்த எவருக்கும் தெரியும் வாலி சொல்வது முழுக்க பொய் என்று. நாலு வேதங்களும் அறிந்தவன் வாலி. மூன்று முறை மூன்று கடல் நீரில் இறை வணக்கம் (சந்தியா வந்தனம்) செய்பவன்.  ஒரு சிவ பக்தன். அவனுக்கு நல்லது கெட்டது தெரியும். தம்பியைக் கொல்வது தவறு. தம்பியின் மனைவியை அபகரிப்பது குற்றம். இதெல்லாம் தெரியாதவனா வாலி?  ஆனால், தீய செயல் செய்து விட்டு, விளைவுகள் தன்னை தாக்க வரும்போது.  தன்னை “ நான் குரங்கு”  என்று exemption கேட்டு சாகசமாக வாதாடுவது தீவினையில் இருந்து தப்பிக்க த்தான்.  ராமர் மிக அழகாகக்கேட்பார். “ வாலி, நீ நெறியின் மேன்மையை உணர்ந்தவன்.ஒன்றும் தெரியாதவன் இல்லை.நீ குரங்கு என்றால்  “ஆபத் பாந்தவா அனாத ரக்ஷகா” என்று முதலை தன்னை இழுக்கும் தருணத்திலும் பக்தியோடு நாராயணனை வேண்டியதே அந்த கஜேந்திரனும் ஒரு மிருகம். சீதாப்பிராட்டியாரை க்காக்க ராவணனோடு தன் அலகாலும் நகங்களாலும் போரிட்டு வீழ்ந்ததே அந்த ஜடாயுவும் ஒரு பறவை என்று சொல்லிவிடலாமே?”  என்ற கேள்வியை எழுப்புகிறார். “எவ்வகை செயல் செய்தாலும் அதற்கு உண்டான விளைவை அனுபவித்தே தீரவேண்டும் என்று தெரிந்திருந்தும்  சொந்த தம்பியின் “மனையின் மாட்சியை” அழித்தாய். உனக்கு உண்டான தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்” என்று அவனுக்கு எதிர் வாதம் சொல்கிறார்.

தீய செயல்கள் துரத்தி வரும். தீ சிறிது நேரத்தில் அணையும். ஓடி க்கூட தப்பிக்கலாம். தீயவை அணையா. அவை விளைவிக்கும் கொடுமைகளில் இருந்து தப்பிக்கவும் முடியது என்பதற்கு வாலி ஒரு உதாரணமாக இந்த உலகம் உள்ளவரை பேசப்படுவான்.

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-16

குறள் 292: அதிகாரம் 30 வாய்மை


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்


உரையாசிரியர்கள் தரும் பொருள்: குற்றம் இல்லாத நன்மையை த்தருமானால் பொய்மையும் வாய்மையின் இடத்தை ப்பெறும்.


இந்த க்குறள் ஒரு புதிர் போடுவது போல இருக்கிறது. பொய் சொல்லலாம் என்று வள்ளுவர் சொல்கிறார். ரொம்ப சந்தோஷம். ஆனால், “புரை தீர்ந்த”  நன்மை கிடைக்கும் என்று உனக்கு தெரிந்தால் பொய் சொல். என்கிறார்.   அடாடா, நாம் பொய் சொல்லிவிடுவோமே? என்றால் ஒரு நிபந்தனை. “புரை இல்லாத” நன்மை விளைய வேண்டும். அது தான் நிபந்தனை. “புரை”  என்றால் என்ன? “குற்றம்” என்று உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். Defect என்று அகராதியில் போட்டுள்ளனர். அதையே தான் நானும் மேலே எழுதியிருக்கிறேன். பிறகு யோஜித்தேன். குற்றம் இல்லாத நன்மை என்றால் என்ன? குற்றமுள்ள நன்மையை யாராவது நன்மை என்றூ ஒத்துக்கொள்வார்களா? ஒரு குடம் பாலில் ஒரு சொட்டுதான் விஷம் என்றால் அது பாலே இல்லையே. குற்றம் குற்றமில்லை என்பதை யார் நிர்ணயிப்பது?  legally or morally?. குருக்‌ஷேத்திரத்தில், தர்மர், அச்வத்தாமா ஹத: குஞ்சர: (அச்வத்தாமன் இறந்தான்-அதாவது யானை)என்ற சொன்னதை legal ஆக சரி ஆனால் moral ஆக குற்றம் என்பார்கள்.  குற்றம் என்பதே ஆள்கின்ற வர்க்கத்தின் valuesஐ ப்பொறுத்து அமைகிறது என்று சிலர் கருத்து. திருவள்ளுவர் இந்த limitation ல் சிக்கிக்கொள்ள மாட்டார். வேறு பொருள் இருக்குமோ ?  குற்றம் என்ற பொருளை விடுங்கள். புரை என்றால் குற்றம் என்பதைத்தவிர ரகசியம் என்றும் பொருள் உண்டு.  (போல என்றும் பொருள் உண்டு-கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்- தேவாரம் ஆனால் அது இங்கு பொருத்தமாக இல்லை என்பதால் அதை விடுவோம்) புரையோடிப்போய்விட்ட புண் என்பார்கள். அதென்ன புண் குற்றமாகி விட்டதா ? இல்லை உள்ளார்ந்து போய் விட்டது. ரகசியமாக இருந்துவிட்டது என்று தான் பொருள். கண்ணில் புரை என்பார்கள். கண் லென்ஸில் உள்ளே சதை வளர்ந்ததாக கருதியதால் அதை  புரை என்றனர். (இது அக்கால நம்பிக்கை. தற்போதைய மருத்துவர் இதைத் தவறு என்பார்கள்) குழந்தைக்கு பால்  புரை ஏறி விட்டது என்பார்கள். வாயினின்றும் உணவுக்குழாயில் போகாமல் வெளியேயும் வராமல், நுரையீரலுக்குள் உள்ளே ஏறி விட்டது என்று பொருள். இங்கு திரு வள்ளுவர் என்ன சொல்கிறார் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். புரை தீர்ந்த என்றால் எந்த உள் இரகசியமும் இல்லாது வெளிப்படையாக, எல்லோருக்கும் தெரியும் படி நன்மை விளையுமானால் பொய் சொல். என்று சொல்லியிருக்கிறார். அதென்ன வெளிப்படையான நன்மை ? கணவன் மனைவியிடம் தன் அலுவலகத்தில் நடந்ததை ப்பற்றி பொய் சொல்கிறான். அல்லது மனைவி கணவனிடம் இல்லத்தில் நடந்ததை பற்றி பொய் சொல்கிறாள். அது அவள் நன்மைக்கு அல்லது அவன் நன்மைக்கு என்று வைத்துக்கொண்டாலும் அது ரஹசியமான நன்மை.அது ரகசியமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால்,  “புரை தீர்ந்த “ என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே?  நன்மை ஒருவனுக்கு மட்டும் இல்லை, குடும்பத்துக்கு இல்லை, வெளிப்படையாக  ஒரு நாட்டுக்கே நன்மை விளையுமா? அப்போது பொய் சொல். அது வாய்மையாக கருதப்படும். இது வள்ளுவர் வாதம்.  இன்று diplomacy என்று சொல்வது இதைத்தான். ( இது என் கருத்து. தமிழ் அறிஞர்களோ, உரையாசிரியர்களோ பரிமேலழகர் கூட சொல்லவில்லை. அரை வேக்காடு பொடியன் நான் சொல்வது தவறாக இருக்கலாம்.) இதற்கு உதாரணம் !!  உண்டே!! அதையும் பார்த்து விடுவோம்.
கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம். மலையுச்சியிலிருந்து வானரர்  தொலைவில் ராமரும், லக்ஷ்மணரும் வருகின்றதை பார்க்கின்றனர். பார்த்தவுடன் சுக்ரீவன் முதல் எல்லோரும் “துண்டை க்காணோம், துணியை க்காணோம்” என்று ஓட ஆரம்பிக்கின்றனர். “வெவ்விடத்தனை மறுகு தேவர், தானவர்” (பாற்கடலில் விஷத்தை ப்பார்த்த தேவரும் அசுரரும் ஓடினாரே அது போல) போல ஓடுகின்றனர். இவ்வீரர்களை வாலிதான் அனுப்பியிருப்பான் என்று பயத்தில் அவர்கள் குகையில் ஒளிந்து கொள்ள ஓடும் போது  அனுமன் அவர்களை நிறுத்தி விட்டு ஒரு வழியாக சமாதானப்படுத்தி நான் ராம லக்ஷ்மணரை ப்பார்த்து விவரம் அறிந்து வருகிறேன் என சொல்கிறார்.  ஒரு மாணவன் வடிவத்தில் வந்து அவர்களை ப்பற்றி தெரிந்து கொள்கிறார். வந்த காரணத்தை பிறகு கூறுகிறார்.
“இம்மலை இருந்து வாழும் அரசன்….. நும் வரவு நோக்கி விம்மல் உற்று அனையன் ஏவ வினவிய வந்தேன் “ அதாவது சுக்ரீவன் தங்கள் வரவினை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறான். அவன் என்னை உங்களை ப்பார்த்து வர சொல்லி ஏவினான். அதனால் வந்தேன்.” என்கிறார்

இது எந்த விதத்தில் வாய்மை? சுக்ரீவனோ ராமரை ப்பார்த்ததும் புறங்கால் முதுகில் பட ஓடுவதில் குறியாக இருந்ததை முதலில் பார்த்தோம் அல்லவா? அவனாவது ராம லக்ஷ்மணரை எதிர்பார்த்து இருப்பதாவது? அப்படியானால், அனுமன் சொன்னது உண்மைக்கு ப்புறம்பானதாக இருக்கிறதே!! அப்படி அவர் சொன்னது ஒரு பொதுவான நன்மைக்காக த்தான். இதனால்அனுமனுக்கு, அல்லது ராமருக்கு எந்த விதமான ரஹசியமான நன்மை எதுவும் இல்லை. வாலியை க்கண்டு பயந்து பயந்து வாழும் தன் சமூகத்தினர் வானரர் துயருக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், சுக்ரீவனுக்கு மனையாளையும் அரசையும், மானத்தையும் மீட்டுத்தரவேண்டும் என்று தான் ராமர் நட்பினை நாடி இவ்வாறு ஒரு அமைச்சராக அனுமன் கூறுகிறார். ராமர் சகலமும் தெரிந்தவர். அவருக்குத் தெரியாதா நடந்த்தது என்னவென்று ? ஆனால்,  அதை புரிந்து கொண்டு, ராமரும் அனுமனை மனத்தால் பாராட்டி , “யார் கொல் இச்சொல்லின் செல்வன்?” இவன் யார்? மாணவன் அல்லன். ப்ரம்மனோ? இல்லை  சிவபிரானோ? இவன் பெருமை எனக்கு த்தெரிகிறது. நீயும் பின்னே அறிவாய்” என்று இலக்குவனிடம் அவரை பற்றி புகழ்கிறார். ராமர் சத்தியத்தை தன் ஆயுதமாகக்கொண்டவர். அவர் நிலைமை தெரிந்து பாராட்டுகிறார் என்றால் அனுமன் பேசியது புரை தீர்ந்த நன்மை பயக்கும் வார்த்தை. அது நிச்சயமாக வாய்மை தான்.

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-14

குறள் 336 அதிகாரம் 34 நிலையாமை  


நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.


பொருள் : நேற்று இருந்தவன் இன்று இல்லை இறந்து விட்டான் என்ற பெருமை உடையது இந்த உலகம்.


நம்மில் பலர் நிலையாமை என்பதையே உணராமல் தான் இருக்கிறோம். நம்மை விடுங்கள். அறிவிலிகள் என்று சொல்லி விடலாம். பெரிய பெரிய மனிதர் கூட தாங்கள்  என்றும் இருப்போம் என்று நினைத்து த்தான் ஊரை யடித்து உலையில் போடுகிறார்கள்.


ஒரு சமயம் தர்மர் தன் அரசவையில் அமர்ந்து எல்லாப்பணிகளையும் கவனித்து முடித்த பின் தன் இருப்பிடம் செல்வதற்காக தம்பிகள் அர்ஜுனன், பீமன் புடை சூழ எழுந்தார். பத்தடி நடப்பதற்குள் , அப்போது அங்கே ஓடி வந்த ஒரு வயதான ஏழை மனிதன் “ ஐயா, அரசரே, நான் பரம ஏழை. எனக்கு எதாவது தானம் கொடுங்க. மஹாராஜா” என்று கத்திக்கொண்டே காலில் விழுந்தான். தர்மருக்கு அப்போது தன் இருப்பிடம் செல்ல அவசரம்.


“அடாடா, இன்று நேரமாகி விட்டதே, ஒன்று செய்யுங்கள், பெரியவரே, நாளை வாருங்கள். நீங்க வசதியா வாழற அளவுக்கு தானம் கொடுக்கறேன்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.  இதை ப்பார்த்து க்கொண்டிருந்த பீமன் உடனே ஓடி சென்று காவலர்களை அழைத்தார்.
“ காவலர்களே, நம் அரண்மனையில் உள்ள தண்டோரா போடுபவர்களை அழைத்து வாருங்கள். ஒரு முக்கியமான அறிவிப்பு. எல்லா மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்” என்றான். தர்மருக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் எதுவும் சொல்லவேஇல்லையே, இவன் என்ன புதிதாக ஏதோ ஆரம்பிக்கறானே?” என்று யோஜித்தார். அதற்குள் தண்டோரா போடுபவர்கள் வந்தனர். “ மஹராஜா, வணக்கமுங்க” என்று சொல்லி ஆணையை எதிர்பார்த்து நின்றனர்.


பீமன் சொன்னான் “ இங்க பாருங்க,  இப்பவே போய் நான் சொல்றதை எல்லா திசையிலும் போய் தண்டோரா போடுங்க.”


“சரிங்க என்ன அறிவிப்பு, எசமான்” என்று காதுகளை தீட்டிக்கொண்டு நின்றனர்.


பீமன் சொன்னான், சொல்றேன். கேட்டுக்குங்க “ இது மூலம் பொது ஜனங்களுக்கு தெரிவிக்கறது என்னவென்றால், மகராஜா தர்மர் இந்த உலகத்தின் சர்வ வல்லமை பொருந்திய சர்வேஸ்வரன் ஆகி விட்டார். அவருக்கு முக்காலமும் தெரியும். அவரை வெல்பவரும் இல்லை. எதிர்ப்பவரும் இல்லை” என்றான்.


தர்மர் குழப்பமடைந்தார். என்ன சொல்கிறான் பீமன்? “ தம்பி, நீ என்ன சொல்கிறாய், நான் எப்பொழுதாவது இது போல சொல்லியிருக்கிறேனா? நீ ஏன் இப்படி அவர்களை க்கூப்பிட்டு அறிவிக்கிறாய்? எனக்கு சிறிது புரிய வை”. என்றார்.


பீமன் சிரித்தான் “ அண்ணா, நீங்கள் என்ன இப்படி மறதி ஆக இருக்கிறீர்கள் ? இப்போது அந்த வறியவருக்கு பதில் சொல்லும்போது என்ன சொன்னீர்கள்?” என்றான்.


“ எனக்கென்னப்பா மறதி? நாளை காலை வாருங்கள் தானம் தருகிறேன் என்று சொன்னேன். அதற்கும் நீ சொல்வதற்கும் என்னப்பா சம்பந்தம்?” என்றார் தருமர்.


பீமன் சொன்னான் “ அதை தான் நானும் சொல்கிறேன்,அண்ணா. நீங்களோ வாக்கு மாறாதவர். சத்தியம் தவறாதவர். அதனால் நீங்கள் சொன்னால் நிச்சயம் நடக்கும்”


“சரி, அதற்கென்ன இப்ப”


“ எப்போது நீங்கள் நாளை வா என்று சொன்னீர்களோ அப்போது பல விஷயங்கள் எனக்கு நிச்சயம் ஆகி விட்டது. ஒன்று: அந்த ஏழை நாளை உயிரோடிருப்பான். இரண்டு நீங்க உயிரோட இருப்பீங்க. மூன்றாவது, நீங்க இந்த ராஜ்யத்துக்கு அரசராக இருப்பீங்க. ஏன்னா அப்ப தான் தானம் தர முடியும். நாலாவது அவன் வறியனாகத்தான் இருப்பான். அப்ப தான் அவன் வருவான். இந்த உலகத்திலே யாரு எங்க அடுத்த கணம் எப்படி இருப்பான் அப்படின்னு சொல்லமுடியாத போது , இவ்வளவு நிச்சயமா எதிர்காலத்தை பத்தி சொல்லணும்னா, அது சர்வேச்வரனாகத்தான் இருக்க முடியும். அதுதான் சொன்னேன்” என்றான் பீமன்.


தருமர்க்கு பீமன் தன்னை இடித்துரைக்கிறான் என்று புரிந்தது. என்னதான் இருந்தாலும் அவர் தருமர் இல்லையா?  ஆதலால், உடனே தன்னை திருத்திக்கொண்டார். “ புரிந்தது தம்பி, நல்ல காரியத்தை காலம் தாழ்த்தக்கூடாது. தோன்றியவுடன் செய்யவேண்டும். அதைத்தான் சொல்ல வருகிறாய், இல்லையா ? சரி, இவங்களையெல்லாம் போக சொல்லு. அந்த ஏழையை க்கூப்பிட சொல்லு. நம்ம தானம் கொடுத்து அனுப்பிடுவோம்” என்றார்.

இங்க பாருங்க, தருமபுத்திரர் மாதிரி ஒரு மானுடன் கிடைக்க மாட்டான். உடலுடன் சொர்க்கத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரே ஆள் அவர். உள்ளத்தினாலும், உடலினாலும் பாவம் பண்ணாதவர். ஆனால், அவருக்கே நிலையாமை என்ற விஷயம் ஒரு கண நேரம் மறந்திருக்கிறது. அதனால் தான் அதை இவ்வுலகத்தின் பெருமை என்று வள்ளுவர் சொன்னாரோ?

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-11

குறள் 225 அதிகாரம் 23 ஈகை
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.


தவ வலிமை உடையவரின் ஆற்றல் பசியைபொறுத்துக்கொள்வதாகும். ஆனால், அப்பசியை ஆற்றுபவர் ஆற்றல் அதனை விடப்பெரியதாகும்.

இந்த திருக்குறள் படிக்கும்போது மஹரிஷி துர்வாசர் நினைவு வராமல் இருக்காது.    துர்வாசர் மிக பெரிய முனிவர். முற்றும் துறந்தவர். ஆனால் அவருக்கு பசி தாங்காது. பசி வந்தால் உடனே உணவு உண்டே ஆக வேண்டும். இல்லையெனில் கோபம் வந்து விடும். ஒரு நாள் அவர் துரியோதனன் அரண்மனைக்கு  சென்றார். நல்ல விருந்து சாப்பாடு. கேட்டு வாங்கி சாப்பிட்டார். பிறகு மன்னனை வாழ்த்தி விட்டு கிளம்பினார். துரியோதனனுக்கு ஒரு குரூர எண்ணம் தோன்றியது. அவன் பொறாமை பிடித்தவன் என்பது தெரிந்த விஷயம் தானே. நல்லதையா நினைப்பான்? அவன் துர்வாசரை பார்த்து சொன்னான் “ முனிபுங்கவரே, எனக்கு ஒரு விண்ணப்பம். தாங்கள் என் குடிலுக்கு வந்து என்னை ஆசிர்வதித்து அருளினீர்கள். எனக்கு மகிழ்ச்சியே. ஆனாலும், ஒரு விண்ணப்பம்.  என் தம்பிகள் பாண்டவர்கள் இல்லத்துக்கும் தாங்கள் இது போலவே தங்கள் சீடர்களுடன் சென்று திரௌபதி சமைத்து அவர்கள் பரிமாறும் ருசியான உணவை சாப்பிட்டு அவர்களுக்கும் தங்கள் ஆசிகளை அள்ளி வழங்க வேண்டும்” என்றான், அப்போது பாண்டவர் வனவாசம் செய்து கொண்டிருந்தனர். தினசரி சாப்பிடுவதே பெரிய பாடு. அவர்களிடம் ஏது அறுசுவை உணவு படைக்க வசதி?   துரியோதனன் இப்படி மனக்கணக்கு போட்டான். துர்வாசர் தன் கணக்கற்ற சீடர்களோடு அவர்கள் குடிசைக்கு போவார். அவர்கள் சாப்பாடு போட முடியாமல் திணருவார்கள். துர்வாசரோ கோபக்காரர். சாபம் இடுவார். பாண்டவர் ஒழிந்தார்கள். இது போல வஞ்சக எண்ணத்தோடுதான் துரியோதனன் இந்த யோஜனை சொன்னான். அது தெரியாமல், துர்வாசரும் இதற்கு சம்மதித்து ஆஹா !! என்ன நல்ல யோஜனை. நிச்சயம் பாண்டவர் இல்லத்துக்கும் செல்கிறேன். அவர்கள் இடும் போஜனத்தையும் உண்டு அவர்களுக்கும் என் ஆசி சொல்கிறேன்” என்றபடி கிளம்பினார். இவ்வளவு அறிவுள்ள துரியோதனன் ஒரு விஷயத்தை  அறியவில்லை. திரவுபதியிடம் ஒரு அட்சய பாத்திரம் இருந்தது. அதை பயன்படுத்தி திரவுபதி ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு உணவு வேண்டுமானாலும் அளிக்கலாம். ஆனால், அதை அவள் கழுவி கவிழ்த்து வைத்து விட்டால் அடுத்த நாள் தான் அது உணவு கொடுக்கும். இதை வைத்துத்தான் பாண்டவர்கள் விருந்தோம்பல் செய்து வந்தனர்.


துர்வாசர் தான் சொன்னபடியே ஒரு நாள் கானகத்தில் பாண்டவர் வசித்து வந்த குடிலுக்கு தன் சீடர்களோடு வந்தார். அப்போது மதியம் நெருங்கி விட்டது. , பாண்டவர் அவரை வரவேற்றனர். துர்வாசர் “ நாங்கள் அனைவரும் ஆற்றில் குளித்து விட்டு வருகிறோம். உணவு தயாராகட்டும்” என்று கூறி விட்டு சென்றார். திரௌபதியை பாண்டவர் பார்த்தனர். திரௌபதி முகம் கலங்கி இருந்தது. என்ன காரணம் என்றால், திரௌபதி அன்றைய உணவு பரிமாறி விட்டதால் அக்ஷய பாத்திரத்தை அலம்பி கவிழ்த்து வைத்து விட்டாள்.
துர்வாசர் இன்னும் பத்து நிமிடங்களில் குளித்து விட்டு வந்து விடுவார். அவருக்கோ பசி தாங்காது. நாம் எப்படி சமாளிக்க ப்போகிறோம்? என்று எல்லோருக்கும் குழப்பம். இது தானே துரியோதனன் எதிர்பார்த்தது. பாண்டவர் கையை ப்பிசைந்து கொண்டு நிற்கின்றனர். த்ரௌபதி உடனே கண்ணனை த்யானித்தாள். தங்கை கூப்பிடுகிறாளே ஏதோ கஷ்டம் போலிருக்கிறது என்று க்ருஷ்ணனும் வந்தார். த்ரௌபதி அவரிடம் இந்த நிலைமையை சொன்னாள். சிரித்துக்கொண்டே, க்ருஷ்ணன் அந்த அக்ஷய பாத்திரத்தை எடுத்துவர சொன்னார். த்ரௌபதி “அது ஒன்றும் உபயோகப்படாது, க்ருஷ்ணா, நான் அதை அலம்பி கவிழ்த்து வைத்து விட்டேன்.” என்றாள். இருப்பினும் க்ருஷ்ணன் வற்புறுத்தவே அதை எடுத்து வந்தாள்.  க்ருஷ்ணன் அதை உற்றுபார்த்தார். பாத்திரம் அலம்பிய பிறகும், ஒரே ஒரு பருக்கை அதன் அடியில் ஒட்டிக்கொண்டிருந்தது. க்ருஷ்ணன் அதை தன் கையில் எடுத்து தன் வாயில் போட்டு மென்று விழுங்கினார். “ஆகா” என்று கூறி விட்டு பிறகு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். துர்வாசரும் சீடர்களும் குளித்து விட்டு வந்தனர். ஆனால், அவர் எந்த வித அவசரமும் இல்லாமல், “அம்மா, த்ரௌபதி, என்னமோ எங்கள் யாருக்குமே பசி இல்லையம்மா. சாப்பாடு எதுவும் வேண்டாம். நாங்கள் கிளம்புகிறோம் நீங்கள் நன்றாயிருங்கள் “ என்று வாழ்த்தி விட்டு சென்றார் என்று கதை. இதில் பாருங்கள் தவ ஆற்றல் நிறைந்த முனிவருக்கு பசி பொறுக்க வில்லை. ஆனால், க்ருஷ்ணன் தன் அருளால் ஒரு பருக்கையை வைத்து க்கொண்டு அவர்கள் எல்லோர் பசியையும் தீர்த்து வைத்த அவன் ஆற்றல் பெரியது தானே ?  (கதைக்குப்பின் ஒரு விவரம் : என்னடா இவன் துர்வாசரைப்பற்றி இப்படி எழுதிவிட்டானே என்பவர்கள் இந்த விவரத்தை படிக்கவும். மஹரிஷி  துர்வாசர் பசி பசி என்று சொல்வாரே தவிர, தனக்காக எதுவும் சாப்பிட மாட்டார். ஒவ்வொரு நாளும் மனதார க்ருஷ்ணார்ப்பணம் க்ருஷ்ணார்ப்பணம் (இது க்ருஷ்ணனுக்கு, இது க்ருஷ்ணனுக்கு)  என்று சொல்லி அவன் பசித்திருப்பானே, அவன் வயிறு நிரம்ப வேண்டுமே என்று தான் வகையாக நிரம்ப சாப்பிடுவார். க்ருஷ்ணனுக்கு இது தெரியும். அதனால் தான் ஒரு பருக்கையுண்டு திருப்தியாக ஏப்பம் விட்டு சென்று விட்டார்.. பிறகு, துர்வாசர் எப்படி சாப்பிடுவார் ? )

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-10

குறள் 167 அதிகாரம் 17 அழுக்காறாமை

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.  


பொருள் :  பொறாமை இருப்பவனிடமிருந்து திருமகள் விலகி மூத்தவளை அவனிடம் செல் என்று காட்டி விடுவாள்.


அழுக்காறு என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவன் துரியோதனன். (இதற்கு அவனை ப்பார்த்து பொறாமை ப்படலாம்) ஒன்றும் இல்லாத ஏழைகள் மற்றவரை ப்பார்த்து பொறாமை படுவதென்பது இயற்கை. ஆனால், எல்லா செல்வங்களும் இருந்தும் துரியோதனன் தருமரைப்பார்த்து பொறாமை பட்டான். அவன் செல்வத்தை பாருங்கள்


‘‘எண்ணிலாத பொருளின் குவையும்
யாங்கணும் செலும் சக்கர மாண்பும்
மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாமோர்
வார்கடல் பெருஞ்சேனையும் ஆங்கே
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று
வேண்டும் இன்பமும் பெற்றவன்’’ -


என்று பாஞ்சாலி சபதத்தில் துரியோதனனை ப்பற்றி பாரதியார் கூறுவார். இந்திரன் போன்ற பெருமை கொண்டவன் அவன். ஆனால், அவனுக்கென்னவோ பிறந்ததிலிருந்து பாண்டவரை பார்த்தால் வயத்தெரிச்சல். சிறு வயதில்  பீமன் சாப்பிடுவதைக்கண்டால் பொறாமை.விஷம் வைத்தான். அர்ஜுனன் குருவிடம் நல்ல பெயர் வாங்கினால்  பொறாமை. பாஞ்சாலி அவர்களுக்கு கிடைத்தது பொறாமை. தருமனுக்கு முடி சூட்டினால் பொறாமை. அவன் யாகம் வளர்த்தால் பொறாமை. கண்ணன் அவர்களுக்கு ஆதரவாகி விட்டானே என்று பொறாமை. சொல்கிறான் பாருங்கள்


“பேச்சை வளர்த்து பயனொன்றுமில்லை- என் மாமனே அவர்கள்
பேற்றையழிக்க உபாயம் சொல்லுவாய் - என் மாமனே”


என்று சூதாட அழைத்தது பொறாமையினால் தானே !!


பொறாமையினால் பாண்டவருக்கு ஐந்து வீடுகள் கூடத்தரமாட்டேன் என்று சொன்னதால் போர் மூண்டது. கடைசியில் போர் முனையில் நிற்கும் போது கூட  சொல்கிறான்,


அபர்யாப்தம் தத் அஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
பர்யாப்தம் த்விதம் ஏதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் - பகவத் கீதை அத்தியாயம் 1 ச்லோகம் 10.


“பீஷ்மரால் காக்கப்படுகின்ற எனது சேனை போதுமானதாக இல்லை. ஆனால், பீமனால் காக்கப்படுகின்ற அவர்களது சேனையோ போதுமான அளவு உள்ளது.” என்று அங்கும் வயத்தெரிச்சல் படுகிறான் என்றால் பாருங்களேன்.

துரியோதனனை யாரும் கொல்லவில்லை. திருமகள் அவனிடம் உள்ள பொறாமையால் வெறுப்புற்று அவனை விட்டு நீங்கினாள். மூத்தவள் வந்து அமர்ந்தாள். அழிவு வந்தது. இதுதான் உண்மை.இதைத்தான் தெய்வப்புலவர் சொன்னார்.

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்- 9

குறள் எண் 121 அதிகாரம் அடக்கமுடைமை


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.


பொருள் ஒருவன் அடக்கமுடைமையாவனாக இருப்பின் அவன் அமரரில் ஒருவனாக கருதப்படுவான். அடங்காமை உள்ளவனாக இருந்தால் நரகத்துக்கு செல்ல வேண்டியது தான்.


அடக்கம் என்ற சொல்லுக்கு பொருளாக திகழ்பவர் அனுமன். அடங்காமை என்ற சொல்லுக்கு பொருளாக திகழ்பவன் ராவணன். மேற்கொண்டு என்ன சொல்ல இருக்கிறது?


அனுமன் தேவர் குலத்தில் தோன்றவில்லை. இந்திரன், வருணன்,அக்கினி இவர்கள் போல அமுதம் உண்டு வானுலகில் சுகமாக வசித்தவர் அல்ல. காட்டில் கிழங்குகளையும், கனிகளையும் புசித்து குகைகளில் வாழும் வானரர் குலம். ஆனால், தேவர்கள் அதிசயிக்கும் படி ஒரு குணக்குன்றாக தன் பணிகளை செய்து காட்டியவர். அதன் மூலம் எல்லோர் நன்மதிப்பையும் பெற்றவர்.  ராமர் மீது கூட முயற்சி செய்தால் ஏதாவது குறை காணலாம். ஆனால் அனுமன் மீது பூதக்கண்ணாடி வைத்து தேடி ப்பார்த்தாலும் ஒரு குறையும் காண முடியாது.              கம்ப ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அனுமன் நமக்கு முதன் முதல் அறிமுகம் ஆகிறார். அவர் அறிமுகம் ஆகும் போதே கவி சக்ரவர்த்தி கம்பர் அவர் அடக்கம் உருவானவர் என்பாதை தெளிவாக பின்வருமாறு காட்டுகிறார். அதை பாருங்கள். வருஷக்கணக்கில் அனுமன் அந்த காட்டில் வசித்து வருகிறார். அப்போது ராமர், லக்‌ஷ்மணர் சீதாப்பிராட்டியாரை தேடி அங்கு நுழைகிறார்கள். அனுமன் முதன் முதலில் காட்டில் வில்லையேந்தி நடந்து வரும் ராம லக்ஷ்மணரை பார்க்கிறார். ராம லக்ஷ்மணர் யார் என்று தெரியாத நிலையில் தான் வசிக்கும் இடத்தில் சுதந்திரமாக நுழபவரை நியாயமாக, “ நீங்கள் யார்?” என்று தானே கேட்கவேண்டும்? அப்படி அவர் கேட்கவில்லை.  எப்படி கேட்கிறார் பாருங்கள்
“யார் என விளம்புகேன்? “  
ஒரு பெரியவரை சந்திக்கும் போது எவ்வளவு தன்னடக்கத்தோடு பேச வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். என் அரசன் “ நோன்மை சால் கவி அரசு” சுக்ரீவன் கேட்டால் நான் தங்களை ப்பற்றி யார், என்னவென்று உரைப்பது?” என்று சொல்வதாக கம்பர் சொல்லுவார்.  


வாலி வதம் ஆன பின் சுக்ரீவன் முடி சூட்டு விழா நடக்கிறது. எல்லோரும் ராமரோடு வருகிறார்கள். ராமர் சுக்ரீவனை கிஷ்கிந்தை சென்று அரசாள்வாய் என்று அனுப்பி விட்டு கானகத்தில் தன் இருப்பிடத்தில் அமர்கிறார்.  அப்போது அனுமன் ராமரை ப்பார்த்து சொல்வார் “ இத்தலை இருந்து நாயேன், ஏயின எனக்குத்தக்க கைத்தொழில் செய்வேன்” (நான் இங்கேயே இருக்கிறேன். எதாவது வேலை கொடுங்கள்) ஒரு மந்திரியாயிருப்பவருக்கு எவ்வளவு அடக்கம்?. ஆனால், ராமர் “ தருமம் தானே போன்ற நீ யானே வேண்ட அத்தலை போதி” என்று அரசில் நீ முக்கிய பதவி வகிக்கிறாய். நான் வேண்டுகிறேன். கிளம்பு கிஷ்கிந்தைக்கு”  என்று நினைவுறுத்திய பின் தான் அங்கே செல்கிறார்.


சுந்தர காண்டத்தில்   சீதைப்பிராட்டியாரிடம் தன்னை ப்பற்றி சொல்ல வேண்டிய நேரம். வானரர்கள் சேனையிலேயே மஹத்தான சக்தி படைத்தவர் அனுமான். அவர் தன்னை ப்பற்றி சொல்லிக்கொள்வதை க்கேளுங்கள் “ வானரத்தின் எண்ணற்க படைத்தலைவர் ராமர்க்கு அடியார், யான் அவர் தம் பண்ணைக்கு ஒருவன் எனப்போந்தேன்” வானரப்படை த்தலைவர்  கணக்கிடாத கடல் மணல் போல எவ்வளவோ பேர் இருக்கிறார்களாம். அனுமன் அவர்களில் ஒருவராம். எப்படி தன்னடக்கமாக சொல்கிறார் பாருங்கள். வால்மீகி ராமாயணத்திலும் சீதையிடம் பேசும்போது அனுமன் தன்னை எல்லா வானரர்க்குள்ளும் மிக மிக வலிமையற்ற வானரன் என்று சொல்வதாக வரும்.    


மத்த ப்ரத்யவர கச்சித் ந அஸ்தி சுக்ரீவ சன்னிதௌ -வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் சர்க்கம் 38 ச்லோகம் 39. ( என்னை க்காட்டிலும் கீழான எவரும் சுக்ரீவனின் படையில் இல்லை. அதாவது என்னை விட மேலோர் தான் உள்ளனர்). இந்த இடத்தை வர்ணிக்கும் போது நமது பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரைட் ஆனரபிள் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் அனுமன் சொல்வதை “unfiltered lie” என்று மேடை பேச்சின் நயத்தோடு வேடிக்கையாகக் கூறுவார் !! (Lectures on Ramayana by V S Srinivasa Sastri)
இது போல அடக்கத்துக்கு உருவானவர் அனுமன் மற்ற தேவர்கள் அழியும் போது கூட சிரஞ்சீவியாயிருப்பார் என ராமரால் ஆசீர்வதிக்கப்பட்டார். அமரருள் உய்க்கும் என்பதை நிரூபித்து விட்டார்.


அடங்காமை என்பதை தன் குணமாக கொண்டவன் ராவணன். பல இடங்களில் இந்த குணம் வெளிப்படுவதை க்காணலாம். ஒரே ஒரு இடம் பார்க்கலாம். ராவணனின் சபை. இந்திரஜித் அனுமனைப் பிடித்து வருகிறான். பேச வாய்ப்பு கிடைத்த உடன், சீதையை தந்து விடு என்று அதற்கு ஆதாரமாக பல் வேறு குறிப்புகளை அனுமன் சொல்கிறார். சொன்னவுடன் ராவணன் “இவை சொல்லியது எற்கு ஒரு குன்றில் வாழும் குரங்கு கொல் ஆம், இது நன்று நன்று என மா நகை செய்தான்” என்று (எனக்கு இந்த விஷயங்களை எல்லாம் மலையில் வாழும் ஒரு குரங்கு சொல்கிறது பாருங்கள்) சொல்லின் செல்வன் அனுமனையே எள்ளி நகையாடியதாக கம்பர் சொல்கிறார்.  

இது போல் அவன் துள்ளியதால் அவன் கதை என்ன ஆயிற்று என்று நமக்கு தெரியும். ஆரிருள் தான் அவன் கதி.